/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
வீண் செலவை குறைக்கும் 'லீன்' கட்டுமானம்
/
வீண் செலவை குறைக்கும் 'லீன்' கட்டுமானம்
ADDED : நவ 22, 2025 06:57 AM

வீ டு கட்டுவது வாழ் நாளில் சிலருக்கே கிடைக்கும் கனவு. ஆனால், அந்தக் கனவை நனவாக்கும் வழியில் நேரமும், பணமும் வீணாவதுதான் அனைவருக்கும் பெரிய கவலை. இந்த பிரச்னைக்கு நவீன கட்டுமான உலகம் கூறும், புத்திசாலித்தனமான தீர்வு 'லீன் கன்ஸ்ட்ரக் ஷன்'.
இது ஒரு புதிய தொழில்நுட்ப முறை அல்ல; நேரம், பணம் வீணாவதை குறைத்து, வேலை ஓட்டத்தை சீர்படுத்தும் புத்திசாலித்தனமான மேலாண்மை முறை.
இதனால் பணிகள் திட்டமிட்ட நேரத்தில் முடியும் என்பதுடன், எதிர்காலத்தில் ஏற்படும் பொருளாதார இழப்புகளையும் தவிர்க்கும் என்கிறார், 'கொஜினா' செயற்குழு உறுப்பினர் திருமுருகன்.
அவர் நம்மிடம் பகிர்ந்துகொண்டதாவது...
பொதுவாக கட்டுமானப் பணிகளில், தேவைக்கு அதிகமான கான்கிரீட் அல்லது கட்டடப் பொருட்கள் வாங்குதல், பணிகளுக்கென்று ஒருவருக்கொருவர் காத்திருப்பதால் நேர தாமதம், வரைபட மாற்றங்கள், ஒத்துழைப்பு குறைவு, சரியான அளவீடுகள் செய்யாததால் மீண்டும் வேலைகள் செய்தல், திட்ட ரீதியான தினசரி கண்காணிப்பு இல்லாதது போன்ற தவறுகள் மொத்த செலவில், 20 முதல், 30 சதவீதம் வரை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
'லீன் கன்ஸ்ட்ரக் ஷன்' முறை இதனை முற்றிலும் மாற்றுகிறது. அதன்படி, முதலில் முன்திட்டமிடல் மிக தெளிவாக செய்யப்படுகிறது. எந்த வேலை எப்போது, யாரால், எத்தனை மணி நேரத்தில் செய்யப்பட வேண்டும் என்பதற்கான நாள் அட்டவணை உருவாக்கப்படுகிறது.
ஒப்பந்ததாரர், பொறியாளர், வாடிக்கையாளர் ஆகியோர் ஒரே மேடையில் இணைந்து திட்டத்தை நடத்துகிறார். இதனால் குழப்பங்கள் குறைகின்றன. பொருட்கள் தேவைக்கேற்ப மட்டுமே வாங்கப்படுவதால், செலவு கட்டுப்பாட்டில் இருக்கும்.
தரக் கண்காணிப்பு தொடர்ந்து நடைபெறும்; தவறுகள் ஆரம்ப நிலையிலேயே சரிசெய்யப்படுவதால் மீண்டும் செய்யும் செலவு நீங்கும். வேலை ஓட்டம் தடையில்லாமல் செல்லும்படியாக, தொழிலாளர்கள் ஒழுங்கு படுத்தப்படுவார்கள்.
இதன் வாயிலாக கட்டுமானம் நேரத்தில் முடியும்; செலவு குறையும்; தரம் உயரும். வீடு கட்ட நினைக்கும் அனைவருக்கும் கட்டட பொறியாளர்களுக்கும், ஒப்பந்ததாரர்களுக்கும் லீன் கன்ஸ்ட்ரக்ஷன் என்பது ஒரு மாற்றுக்கால நெறிமுறை.
இவ்வாறு, அவர் கூறினார்.

