/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
துாண்கள், பீம்களை சிதைக்காமல் பிளம்பிங் ஒயரிங் வேலைகளை செய்ய வேண்டும்!
/
துாண்கள், பீம்களை சிதைக்காமல் பிளம்பிங் ஒயரிங் வேலைகளை செய்ய வேண்டும்!
துாண்கள், பீம்களை சிதைக்காமல் பிளம்பிங் ஒயரிங் வேலைகளை செய்ய வேண்டும்!
துாண்கள், பீம்களை சிதைக்காமல் பிளம்பிங் ஒயரிங் வேலைகளை செய்ய வேண்டும்!
ADDED : மே 11, 2024 07:48 AM

வீடு கட்டும் போது அதில் தண்ணீர் வினியோகம், மின்சார இணைப்புகளுக்கான பாதைகள் என்ன என்பதை, ஆரம்ப நிலையில் பலரும் திட்டமிடுவதில்லை. துாண்கள், பீம்கள் கட்டும் பணிகள் முடிந்த நிலையில் மேல் தளம் அமைக்கும் போது தான் இதற்கான குழாய்களை பதிக்கும் பணிகளை மேற்கொள்கின்றனர்.
அப்போதும் கூட, ஒயரிங், பிளம்பிங் அமைப்புகள் குறித்த திட்டமிடல் இன்றி கம்பி கூடுகளுக்குள் குழாய்களை அமைக்கின்றனர். பெரும்பாலான கட்டடங்களில் இந்த நிலையில் குழாய்கள் என்ன கோணத்தில் அமைக்கின்றனர் என்பது உரிமையாளர்களுக்கு தெரிவதில்லை. கட்டடத்துக்கான வரைபடம் தயாரிக்கும் நிலையில், அதன் ஒரு பிரதியை எடுத்து, அதில் சுவரில், மேல் தளத்தில் குழாய்கள் செல்லும் பாதையை வரைய வேண்டும்.
எந்த அறையில் எங்கு சுவிட்ச் பாக்ஸ் வரும் என்பதை கணக்கிட்டு அதற்கு ஏற்ற வகையில் ஒயரிங் குழாய்களை அமைக்க வேண்டும். குறிப்பாக, பெரும்பாலான கட்டடங்களில் திட்டமிடாமல் குழாய்களை அமைப்பதால், அவற்றை இணைக்க வேண்டிய இடத்தில் துாண்கள், பீம்கள் குறுக்கிடும். இத்தகைய சூழலில், துாண்கள், பீம்களில் துளையிட்டு ஒயரிங் குழாய்கள், பிளம்பிங் குழாய்கள் இணைக்கப்படுகின்றன.
கட்டடத்தில் தவிர்க்க முடியாமல், துாண்கள், பீம்கள் வழியே ஒயரிங், பிளம்பிங் குழாய்கள் செல்ல வேண்டிய நிலை இருந்தால், அது குறித்து முன்கூட்டியே திட்டமிட வேண்டும்.
அது போன்ற இடங்களில், துாண்கள், பீம்கள் கட்டும் பணியின் போது கம்பி கூட்டில் குழாய்களை அமைக்கலாம்.
அதைவிடுத்து கட்டு மான பணி முடிந்த நிலையில், துாண்கள், பீம்களில் துளையிட்டு ஒயரிங், பிளம்பிங் குழாய்களை கொண்டு செல்வது தேவையில்லாத சிக்கலை ஏற்படுத்தும். கட்டடங்களில் குறிப்பிட்ட சில பாகங்களை தங்கள் தேவைக்கு ஏற்ப எளிதில் துளையிடுவது தவறான விளைவுகளை ஏற்படுத்தும்.
சுவர்களில் ஜம்பர் எனப்படும் இரும்பு உளி மற்றும் சுத்தியலை பயன்படுத்தி துளையிடும் பழக்கம் இருந்தது. இவ்வாறு துளையிடும் முறையில், சுவரில் பல்வேறு இடங்களில் புதிதாக விரிசல் ஏற்படுவதாக கண்டுபிடித்த பொறியாளர்கள், இயந்திரங்களை மட்டுமே பயன்படுத்த அறிவுறுத்துகின்றனர்.
இதிலும், துளையிட்ட இடத்தில் ஆணி அடிக்கும் போது, தேவையில்லாத இடைவெளி ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சுவர்களுக்கே இப்படி என்றால், கம்பிகளை உள்ளீடாக வைத்து கான்கிரீட் கொட்டி கட்டப்படும் துாண்கள், பீம்கள் விஷயத்தில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.
தண்ணீர் குழாய் செல்ல வேண்டும், ஒயரில் இணைப்பு தடையின்றி செல்ல வேண்டும் என்பதற்காக, துாண்கள், பீம்களை உடைக்கக் கூடாது. இது போன்ற இடங்கள் வழியே குழாய்கள் செல்ல வேண்டியது அவசியம் இருந்தால், அங்கு தேவையான திருப்பங்களை ஏற்படுத்த வேண்டும் என்கின்றனர் கட்டுமான பொறியாளர்கள்.