/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
ரோட்டை விட தாழ்வாக உள்ளது வீடு சற்று உயர்த்துவதற்கு என்ன செய்வது?
/
ரோட்டை விட தாழ்வாக உள்ளது வீடு சற்று உயர்த்துவதற்கு என்ன செய்வது?
ரோட்டை விட தாழ்வாக உள்ளது வீடு சற்று உயர்த்துவதற்கு என்ன செய்வது?
ரோட்டை விட தாழ்வாக உள்ளது வீடு சற்று உயர்த்துவதற்கு என்ன செய்வது?
ADDED : மார் 21, 2025 11:05 PM

எங்கள் வீட்டின் சமையல் அறையில் உள்ள பாத்திரம் கழுவும் 'சின்க்' அடிக்கடி துர்நாற்றம் வீசுகிறது; இதை எவ்வாறு சரி செய்வது?
-செல்வம், வேலாண்டிபாளையம்.
வீட்டின் சமையலறையில் உள்ள சின்கின் அடிப்பகுதியில், 'பாட்டில் டிரிப்' என்ற துர்நாற்றம் புகாத சாதனத்தை கண்டிப்பாக பொருத்த வேண்டும். சின்கில் இருந்து வெளியேறும் குழாய்களின் கீழ்பகுதியும், மேல் பகுதியும் முறையாக துர்நாற்றம் வெளியேறும் வகையில், 'ஏர்வென்டிலேஷன்' குழாய்கள் அமைக்கப்பட்டு இருந்தால் துர்நாற்றம் வீசாது.
எங்கள் வீடு, 'காலம்' மற்றும் 'பீம்' இல்லாமல் 'லோடு பேரிங்' கட்டடமாக கட்டி சுமார், 20 வருடங்கள் ஆகிறது. வீடு நல்ல பராமரிப்புடன், நல்ல உறுதியுடன் உள்ளது. தற்போது, ரோட்டை விட இரண்டு அடி தாழ்வாக உள்ளது. காலம் பீம் போடாத எங்கள் கட்டடத்தை உயர்த்த முடியுமா?
-நீலவேணி, பூசாரிபாளையம்.
உங்கள் கட்டடம் சரியான பராமரிப்புடனும், உறுதியாகவும் உள்ளதால், தகுந்த பொறியாளர் ஆலோசனைப்படி கட்டடத்தை உயர்த்த முடியும். நவீன தொழில்நுட்பத்துடன் பல கட்டுமான நிறுவனங்கள், இம்மாதிரியான பணிகளை செய்து வருகின்றன. அவ்வாறு கட்டடத்தை உயர்த்தும்போது, கதவு மற்றும் ஜன்னல் ஆகியன திறந்த வெளி இடங்களில், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம். கட்டடத்தின் தன்மையும், கட்டடத்தின் அமைவிடம் போன்றவற்றையும் கருத்தில் கொண்டு, அதற்குண்டான கட்டணம் நிர்ணயிக்கப்படும்.
நாங்கள் கட்டிவரும் வீட்டின் மேற்கூரைக்கு, ரெடிமிக்ஸ் கான்கிரீட் போட உள்ளோம். அப்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை பற்றி கூறவும்.
-வேலு நாச்சியார், அன்னுார்.
ரெடிமிக்ஸ் கான்கிரீட் பயன்படுத்தும்போது கலவையில் உள்ள தண்ணீர், சிமென்ட் விகிதம் சரியான அளவில் இருக்க வேண்டும். கட்டடத்தில் போடுவதற்கு முன்பாக, கண்டிப்பாக 'ஸ்லம் மற்றும் கியூப் டெஸ்ட்' செய்து கொள்ள வேண்டும்.
கட்டடத்தில் கான்கிரீட் போடும்போது எந்தவிதமான கான்கிரீட் அமிலங்களையும் கலக்கக்கூடாது. குறிப்பாக, அதிக நீரை கான்கிரீட் கலவையுடன் கலக்கக்கூடாது. கட்டடத்தின் கூரை கான்கிரீட் போடும்போது(ஸ்லம் மதிப்பு ஐ.எஸ்.,ன் படி, 456:2000) 80 முதல், 120க்குள் இருக்க வேண்டும்.
வெப்பமான கால நிலைகளில் கான்கிரீட் போடும்போது, அதிகாலையில் போடுவது மிக நல்லது. , 30 நிமிடத்திற்கு ஒருமுறை நீர் தெளித்து, கான்கிரீட்டின் மேற்பகுதி உலராமல், பாத்தி கட்டி நீரை தேக்கி வைக்க வேண்டும்.
நாங்கள் கட்டிவரும் வீட்டின் மொட்டை மாடி செல்ல, குறைந்த இடவசதி உள்ளது. செலவு குறைவான படிக்கட்டு அமைக்க ஆலோசனை கூறவும்.
-பார்வதி, சரவணம்பட்டி.
இரும்பினால் செய்யப்பட்ட, 'ஸ்பைரல் ஸ்டேர்கேஸ்' அல்லது 'டாக் லேக்குடு வைண்டர்' படிக்கட்டுகளை கொண்டு, இடத்திற்கு ஏற்ப செலவு குறைவாக அமைத்துக் கொள்ளலாம். ஸ்பைரல் படிக்கட்டில் ஏறும்போது ஒரு வட்ட சுற்றாக ஏறுவதும், சிறிது அசவுரியமாகவும் இருக்கும். டாக் லேக்குடு படிக்கட்டுகள் சற்று விசாலமாக இருக்கும்.
கட்டட கட்டுமானத்துக்கு அதிக உப்பு தன்மையுள்ள நீரை பயன்படுத்தலாமா? ஆலோசனை கூறவும்.
-வளர்மதி, கருமத்தம்பட்டி.
கட்டடத்திற்கு பயன்படுத்தும் நீரின் தன்மையை, அருகில் உள்ள ஆய்வுக்கூடத்தில் பரிசோதித்து பயன்படுத்துவது மிகவும் நல்லது. அவ்வாறு பயன்படுத்தும் நீரின் பி.எச்., அளவு, 6.5 முதல், 8 வரை இருந்தால் கட்டடத்தில் வெடிப்புகள் வராமல், நல்ல உறுதியாகவும் இருக்கும்.
-விஜயகுமார்
தலைவர், கோயம்புத்துார் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர் சங்கம்(காட்சியா).