/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
மாற்றுத்திறனாளிகள் விரும்பும் வீட்டில் என்னென்ன வசதிகள் இருக்க வேண்டும்?
/
மாற்றுத்திறனாளிகள் விரும்பும் வீட்டில் என்னென்ன வசதிகள் இருக்க வேண்டும்?
மாற்றுத்திறனாளிகள் விரும்பும் வீட்டில் என்னென்ன வசதிகள் இருக்க வேண்டும்?
மாற்றுத்திறனாளிகள் விரும்பும் வீட்டில் என்னென்ன வசதிகள் இருக்க வேண்டும்?
ADDED : பிப் 15, 2025 08:08 AM

கனவு இல்லம் என்பது ஒருவரின் விருப்பத்துக்கு ஏற்ப, 'பட்ஜெட்' அடிப்படையில் அமைக்கப்படுகிறது. இதில், மாற்றுத்திறனாளிகளுக்கென்று எடுத்துக்கொண்டால், அவர்களுக்கு தேவையான பிரத்யேக மற்றும் பயன்பாட்டு அம்சத்துடன் அமைந்தால், ஏதுவாக இருக்கும்.
பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா(பி.ஏ.ஐ.,) கோவை கிளை செயற்குழு உறுப்பினர் முரளி கூறியதாவது:
வீட்டிற்கு உள்ளே நுழைவதற்கு சாய்வான ஏற்றுப்பாதை, 1:12 என்ற விகிதத்தில் கைப்பிடி கம்பிகளுடன் அமைக்க வேண்டும். சக்கர நாற்காலிகள் மூலம் உள்ளே சென்றுவர, கதவுகள் குறைந்தபட்சம் நான்கு அடி இருந்தால், மிகவும் எளிதாக இருக்கும்.
வீட்டுக்குள்ளே நடப்பதற்கு, அவர்களுக்கு ஏற்றவாறு சறுக்காத டைல்ஸ் உபயோகப்படுத்த வேண்டும். வீட்டிற்குள் அல்லது வீட்டை சுற்றி இருக்கும் வழிதடத்திலோ, குறைந்தபட்சம் நான்கு அடி இருக்கும் பட்சத்தில்தான் சக்கர நாற்காலியுடனும் அல்லது சக மனிதர்களின் துணையோடு அவர்களால் நடந்து செல்ல முடியும்.
அறையில் உள்ள மின் சுவிட்சுகள், தரையிலிருந்து அணுகக் கூடிய உயரத்தில் சுமார் மூன்று முதல் நான்கு அடி, 6 அங்குலத்துக்குள் அமைய வேண்டும்.
இன்று 'ஸ்மார்ட்' வீட்டு அம்சங்கள் வந்துவிட்டன. எனவே, அனைத்து அறைகளிலும் குரல் கட்டுப்பாடு அல்லது 'ரிமோட்' சாதன வசதிகளுடன் அமைக்கலாம். தானியங்கி கதவுகள் ஒரு பயனுள்ள தீர்வாகும். கதவுகளின் வட்ட வகை கைப்பிடிகளுக்கு பதிலாக, 'லிவர்' வகை கைப்பிடிகளில் இருந்தால், அவர்களுக்கு இன்னும் உதவியாக இருக்கும். குளியல் அறையில் கையால் பிடிக்கக்கூடிய, 'ஷவர்' உடன் அமைத்தால், அவர்களுக்கு எளிதாக இருக்கும்.
சமையலறையில் அடுப்பு வைக்கக்கூடிய உயரம் தரையில் இருந்து, இரண்டு அடி ஆறு அங்குலம் உயரத்தில் வைக்கலாம். பாத்திரம் கழுவும் இடத்திற்கு கீழே, சக்கர நாற்காலி சற்று உள்ளே நுழையுமாறு வடிவமைத்தல் எளிதாக இருக்கும்.
படுக்கை அறையில் கட்டில் மற்றும் பீரோக்கள் வைத்த பிறகு, கதவுக்கும் கட்டிலுக்கும் இடையேயும் மற்றும் சுவற்றுக்கும் கட்டிலுக்கும் இடையேயும் குறைந்தபட்சம், 5 அடி இடவசதி வேண்டும். இது, சக்கர நாற்காலி நகர்வுக்கு உதவியாக இருக்கும்.
குளியலறை மற்றும் கழிவறையில், அவசர கால அழைப்பு மின்சுவிட்ச் அல்லது அபாய ஒலி எழுப்பும் மின் சுவிட்ச் வைப்பது, அவர்களது பாதுகாப்புக்கு உறுதுணையாக இருக்கும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

