/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
சிறப்பு கட்டுரை
/
வீட்டுக்கடன் மாத தவணை தொகையை மாற்றி அமைக்கும் வழிமுறைகள்!
/
வீட்டுக்கடன் மாத தவணை தொகையை மாற்றி அமைக்கும் வழிமுறைகள்!
வீட்டுக்கடன் மாத தவணை தொகையை மாற்றி அமைக்கும் வழிமுறைகள்!
வீட்டுக்கடன் மாத தவணை தொகையை மாற்றி அமைக்கும் வழிமுறைகள்!
ADDED : செப் 07, 2024 12:12 PM

வங்கியில் வீட்டுக்கடன் பெற்று, வீடு வாங்குவது என்பது தற்போதைய சூழலில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. இதனால், பெரும்பாலான மக்கள் வங்கிகளில் வீட்டுக்கடன் வாங்குவதற்கான வழிமுறைகளில் ஆர்வம் காட்டுவது தற்போது பரவலாக அதிகரித்துள்ளது. இதில், முதலில் உங்கள் வருவாய் நிலை, மாத சம்பளம் என்ன? எதில் வீட்டுக்கடன் தவணையாக எவ்வளவு தொகை செலுத்த முடியும் என்று பாருங்கள். இத்துடன் நீங்கள் வாங்கும் வீட்டின் மொத்த மதிப்பு என்ன? அதில் எத்தனை சதவீதம் வீட்டுக்கடனாக கிடைக்கும்.
இதற்கு உங்கள் பங்காக செலுத்த வேண்டிய தொகை என்ன? அதற்கான நிதி ஆதாரம் என்ன என்பது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்.
இந்நிலையில், வங்கிகளில் எப்படியாவது வீட்டுக்கடன் வாங்கிவிட்டால் போதும் என்று தான் பெரும்பாலான மக்கள் நினைக்கின்றனர். உண்மையில் நீங்கள் வீட்டுக்கடன் வாங்கும் போது, அதற்கான வட்டி விகிதம் என்ன? சம்பந்தப்பட்ட வங்கியின் வட்டி கணக்கீட்டு நடைமுறை என்ன என்பதை விசாரியுங்கள். குறிப்பாக, உங்களுக்கான மாத தவணையாக வங்கி நிர்ணயிக்க விரும்பும் தொகை என்ன என்பதை அறிய வேண்டியது அவசியம்.
பெரும்பாலான வங்கிகள் தற்போது நீங்கள் மாதந்தோறும் வாங்கும் சம்பளம் என்ன என்பதை அடிப்படையாக வைத்து தான் தவணை தொகையை முடிவு செய்கின்றன.
ஆனால், வீட்டுக்கடன் தவணை காலம், 20 ஆண்டுகள் என்பதால், மாத சம்பளம் அடுத்தடுத்த ஆண்டுகளில் உயர வாய்ப்புள்ளது.
இதன் அடிப்படையில் வீட்டுக்கடனுக்கான மாதாந்திர தவணை தொகையை மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
உங்களது மாதாந்திர சம்பளம், வீட்டுக்கடன் வாங்கும் போது இருந்ததில் இருந்து, 30 முதல், 40 சதவீதம் உயர்ந்த நிலையில், வீட்டுக்கடன் தவணையை மாற்றுவது அவசியம்.
இவ்வாறு, வீட்டுக்கடன் மாதாந்திர தவணை தொகையை எவ்வளவு உயர்த்தலாம் என்பதையும் முறையாக திட்டமிட்டு முடிவு செய்ய வேண்டும். குறிப்பாக, தற்போது நீங்கள் செலுத்தி வரும் மாதாந்திர தவணை தொகையை, 30 சதவீதம் வரை உயர்த்துவது நல்லது.
இதன்படி, மாதாந்திர வீட்டுக்கடன் தொகையை உயர்த்த நீங்கள் முடிவு செய்யும் நிலையில், அது குறித்து சம்பந்தப்பட்ட வங்கியின் வீட்டுக்கடன் பிரிவு உயரதிகாரிகளுடன் கலந்து பேச வேண்டும்.
இது போன்ற சூழலில், தவணையை தற்போதைய தொகையை மட்டும் மாற்றாமல், வீட்டுக்கடன் கணக்கை தற்போதைய சூழலுக்கு ஏற்ப மறுகட்டமைப்பு செய்வது நல்லது.
இவ்வாறு செய்யும் நிலையில், உங்களிடம் கூடுதல் மற்றும் உபரியாக ரொக்கம் இருந்தால் அதை செலுத்தி, நிலுவை அசல் தொகையை குறைப்பதும் நல்லது என்கின்றனர் ரியல் எஸ்டேட் சொத்து மதிப்பீட்டாளர்கள்.