/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
சிறப்பு கட்டுரை
/
வில்லங்க சான்றிதழில் மறைக்கப்பட்ட தகவல்களால் ஏற்படும் பிரச்னைகள் என்ன?
/
வில்லங்க சான்றிதழில் மறைக்கப்பட்ட தகவல்களால் ஏற்படும் பிரச்னைகள் என்ன?
வில்லங்க சான்றிதழில் மறைக்கப்பட்ட தகவல்களால் ஏற்படும் பிரச்னைகள் என்ன?
வில்லங்க சான்றிதழில் மறைக்கப்பட்ட தகவல்களால் ஏற்படும் பிரச்னைகள் என்ன?
ADDED : டிச 28, 2024 07:53 AM

வீடு, மனை போன்ற அசையா சொத்துக்களை வாங்கும் போது, அதன் முந்தைய பரிமாற்றங்களை அறிய வில்லங்க சான்றிதழ் அவசியமாகிறது. இதில், சொத்துக்கு எப்போது எப்படி வில்லங்க சான்றிதழ் பெற வேண்டும் என்பதில் சரியான புரிதலுடன் செயல்பட வேண்டும்.
நீங்கள் சொத்து வாங்குவதற்கான தேடலில் ஈடுபட்டு இருக்கும் போது, பரிசீலனைக்கு வரும் அனைத்து சொத்துக்களின் வில்லங்க சான்றிதழ்களையும் வாங்க வேண்டும் என்று நினைக்காதீர். இதில் எந்த சொத்து குறித்த அடுத்த கட்ட விபரங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று தோன்றுகிறதோ, அதற்கான வில்லங்க சான்றிதழை வாங்கினால் போதும்.
இதிலும், உங்கள் அடுத்த கட்ட பரிசீலனையில் உள்ள சொத்தின் வில்லங்க சான்றிதழை எப்படி பெறுவது, எப்படி ஆய்வு செய்வது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். பரிசீலனை நிலையில் உள்ள சொத்தின் சர்வே எண் விபரங்களை பெற்று, பதிவுத்துறை இணையதளத்தில் இலவசமாக வில்லங்க விபரம் அறியும் வசதி வாயிலாக ஆய்வு செய்யலாம்.
இதில் ஏற்படும் முன்னேற்றம் அடிப்படையில், வழக்கறிஞரின் ஆய்வுக்கு அந்த சொத்தின் விபரங்களை அனுப்பும் போதும், வங்கியின் ஆய்வுக்கு அனுப்பும் நிலையில் கட்டணம் செலுத்தி பெறப்பட்ட வில்லங்க சான்று அவசியமாகிறது. இது போன்ற நிலைகளுக்கு முன்பு வரை, இலவச சேவைகள் வாயிலாக வில்லங்கம் பார்த்தால் போதும்.
ஒரு சொத்தின் வில்லங்க சான்றிதழில் அதன், 30 அல்லது, 50 ஆண்டுகளில் நடந்த பரிமாற்ற விபரங்களை முழுமையாக அறிய வேண்டும். ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட பிரதான சர்வே எண்கள் அடுத்தடுத்த நிலையில் பல்வேறு பாகங்களா பிரிக்கப்பட்டு இருக்கலாம்.
இது போன்ற சூழலில், சர்வே எண்கள் வாயிலாக ஒவ்வொரு பாகத்துக்கான பரப்பளவு என்ன என்பதையும், அதற்கான ஆவண ஆதாரங்கள் என்ன என்பதையும் துல்லியமாக சரிபார்க்க வேண்டும். குறிப்பாக, ஒரே சர்வே எண்ணில் அடங்கிய பெரிய நில பரப்பு, பல்வேறு பாகங்களாக பிரிக்கப்படும் நிலையில், அதில் பாதை உள்ளிட்ட வசதிகள் என்னவானது என்றும் பாருங்கள்.
மேலும், அந்த சொத்தை ஒட்டி இயற்கையாக அமைந்துள்ள வாய்க்கால்கள், பாதைகள் போன்ற வசதிகளையும் முறையாக ஆய்வு செய்வது அவசியம். பிரதான சர்வே எண்ணுக்கு அருகில் அமைந்துள்ள எல்லைகள் குறித்தும் வில்லங்க சான்றிலும், பத்திரத்திலும் உள்ள தகவல்கள் ஒத்து போகிறதா என்று பாருங்கள்.
சில இடங்களில் பத்திரத்தில் உள்ள தகவல்கள் அனைத்தும் வில்லங்க சான்றிதழில் இடம் பெற்று இருக்காது. வில்லங்க சான்றிதழில் ஏதாவது, விபரங்கள் மறைக்கப்பட்டுள்ளதா என்று சந்தேகம் எழுந்தால், அது குறித்தும் முழு ஆய்வு செய்ய வேண்டியது அவசியம்.
ஒரு சொத்தை வாங்கும் போது அதன் முந்தைய பரிமாற்றங்களுக்கு ஏற்ப பத்திர ஆதாரங்கள் அசல் அல்லது நகல் பிரதியாக உள்ளதா என்று பாருங்கள். இதில் மிக கவனமாக செயல்பட்டால் மட்டுமே, மோசடிகளில் இருந்து தப்பிக்க முடியும் என்கின்றனர் பதிவுத்துறை அதிகாரிகள்.