PUBLISHED ON : மே 14, 2020

அது அம்பாசமுத்திர குழந்தையோ, அமெரிக்க குழந்தையோ... இரு மனங்களும் ஒன்றுதான். முறிந்து விழுந்த மரங்களை பார்த்ததும், டேப் கொண்டு ஒட்டிவிடும் யோசனையை, அம்மனங்களால் மட்டுமே வழங்க முடியும். அப்படியான மனங்களோடு விரும்பி உரையாடுபவர் வனிதாமணி. ஈரோடு திண்டல் வசிப்பிடம். 'எங்க பள்ளி குழந்தைகளுக்கு கதை சொல்ல வர்றீங்களா' என எங்கிருந்து அழைப்பு வந்தாலும் உடனடியாக கிளம்பி விடுகிறார்; தற்போது, ஆன்லைனில்!
வனி அத்தை
பெரும்பாலான குழந்தைகளுக்கு நான் வனி அத்தை. ஒரு பாப்பா... 'பாட்டிங்கதான் கதை சொல்லுவாங்க; இனி உங்களை 'வனி பாட்டி'ன்னு கூப்பிடுறதுதான் சரி'ன்னு சொல்லுச்சு. சில குழந்தைகளுக்கு சித்தி, பாட்டின்னு எந்த உறவுப் பெயரும் தேவைப்படுறது இல்லை; 'வனி'ன்னு பேர் சொல்லியே அழகா கூப்பிடுறாங்க. இந்த அன்பு மூலமா, அவங்க உலகத்துக்குள்ளே பயணிக்கிறது அத்தனை சுலபமா, சுகமா இருக்கு!
'கதைசொல்லி' ஆக மாறும் முன்; மாறிய பின்?
பழைய வனிதாமணியோட குணத்துல இந்தளவுக்கு இலகு தன்மை இருக்காது. எதையும் ஒரு அதிகார தோரணையோடத்தான் அணுகுவேன். எந்தநேரமும் அலுவலகம்னு பரபரப்பா இருந்த காலம் அது. இரண்டாவது குழந்தை பிறந்ததுக்கு அப்புறம், மனசு வேற எதையோ தேடுச்சு. குழந்தைகளுக்கு கதை சொல்லலாம்னு முடிவு பண்ணினேன். சவால்தான்; ஆனா, இதுல கிடைக்கிற மன நிறைவு புது தெம்பா இருக்கு!
குழந்தை எனும் காந்தம்
கதைகள் குழந்தைகளை ஈர்க்கிறதை விட, கதை சொல்றவங்களை குழந்தைகள் ஈர்க்கிறதுதான் அழகு. நிலாவுல பாட்டி வடை சுட்ட கதையை சொன்னா, 'அந்த பாட்டிக்கு வீடு இல்லையா; ஏன் வெளியில இருந்து வடை சுடுறாங்க'ன்னு கேட்டு, நம்ம மனசை பூக்க வைப்பாங்க. இந்த சந்தோஷம் என் வாழ்க்கை முழுக்க எனக்கு வேணும்; அவ்வளவுதான்!
ஆசான்களாகும் குழந்தைகள்
கதை கேட்கணும்னு என் வீட்டுல இருக்குற பட்டாம்பூச்சி நுாலகத்துக்கு, வயசு வித்தியாசம் இல்லாம நிறைய குழந்தைகள் வர்றாங்க. நாலு வயசு குழந்தைக்கு ஆறு வயசு குழந்தை உதவி பண்ணுது. ஏழு வயசு குழந்தை அழுதா, ஒன்பது வயசு குழந்தை கண்ணீர் துடைக்குது.'சக மனிதனோட சோகத்தை பங்கு போட்டுக்கணும்'ங்கிற மனுஷ குணம், பெரிய மனிதர்களா வளர்ந்துட்டதால நமக்கு மறந்துடுச்சு. இதை எனக்கு அடிக்கடி ஞாபகப்படுத்துற குழந்தைகள்தான் என் ஆசான்கள்.'அம்மா'க்களுக்கு ஒரு குட்டு வையுங்களேன் வனி!'என் குழந்தைக்கு செல்போன்ல தெரியாத விஷயமே இல்லை'ன்னு பெருமைப்படுற அம்மாக்களே... நியாயமா இதுக்கு நீங்க கவலைப்படணும்.
