PUBLISHED ON : ஏப் 16, 2023

கோவை, தீத்திபாளையம் ஊராட்சி, காளம்பாளையம் கிராமம்; 2003, பிப்ரவரி மாதம்; 13 பெண்கள் தலா 130 ரூபாய் செலுத்த, 1,690 ரூபா யுடன் உதயமானது ஜான்சிராணி மகளிர் சுய உதவிக்குழு. பிப்ரவரி, 2023; இக்குழுவின் நிதி, 6.35 லட்சம் ரூபாய்!
விறுவிறுவென வளர்ந்து வரும் இக்குழுவை கடந்த 20 ஆண்டுகளாக வழிநடத்துகிறார், 50 வயது மஞ்சுளா!
இவரது கதை
சின்ன வயசுலேயே அம்மாவை இழந்துட்டேன். உறவுக்கார பெண் வரதட்சணை கொடுமையால தற்கொலை பண்ணினதும் மனசுல ஒரு பாதிப்பு. விதி சினிமாவுல வர்ற சுஜாதா மாதிரி, பாதிக்கப்படுற பெண்களுக்காக வாதாடணும்னு ஆசைப்பட்டேன். ஆனா, 10ம் வகுப்போட படிப்பை நிறுத்தினதால, 18 வயசுல திருமணம்; அப்படியே காலம் என்னை வேற சூழலுக்கு நகர்த்திருச்சு!
ஜான்சிராணி
அடுத்த 12 ஆண்டுகள் கடந்ததுல அவ்வளவு வேகம்; ரெண்டு பிள்ளைகளும் வளர்ந்துட்டாங்க! என் முயற்சிகளுக்கு கணவர் பலமா இருந்தார். எங்க மகளிர் சுய உதவிக்குழுவுக்கு துணிச்சலோட அடையாளமா, 'ஜான்சிராணி'ன்னு பேர் வைச்சோம். முதல் வங்கி கடன், 25 ஆயிரம் ரூபாய்; அப்பளம் தயாரிச்சோம். அடுத்த கடன், 2.50 லட்சம் ரூபாய்; 13 பெண்கள் சேர்ந்து திரையரங்கத்தை குத்தகைக்கு எடுத்து சாதிச்சோம்!
இக்குழுவின் வளர்ச்சி தீத்திபாளையம் ஊராட்சியில் பல பெண்களுக்குள் உற்சாகத்தை விதைக்க, தற்போது 39 மகளிர் சுய உதவிக்குழுக்கள் இப்பகுதியில் இயங்குகின்றன!
அவமானமல்ல அது
மகளிர் சுய உதவிக்குழு விழிப்புணர்வு ஏற்படுத்த பெண்களைத் தேடி அவங்க வீட்டுக்கு போறப்போ எல்லாம், இதை விரும்பாத அவங்க கணவர்களோட இடையூறு இருக்கும்; அவங்க மாமியார் திட்டுவாங்க! ஆனாலும், இந்த காயங்களை எல்லாம் தாண்டி பல குழுக்கள் உருவாகி இருக்குறதுல எனக்கு ரொம்பவே பெருமை!
மாவட்ட அளவில் சிறந்த கிராமப்புற மகளிர் குழுவிற்கான, தமிழ்நாடு அரசின் 'மணிமேகலை விருது' பெற்றிருக்கிறது 'ஜான்சிராணி' குழு!
அனுபவ கல்வி
மகளிர் சுய உதவிக்குழு மூலமா பொருளாதார வளர்ச்சி ஒருபக்கம்; வங்கி நடைமுறைகள் பற்றிய தெளிவும், ஆட்சியர் அலுவலகம் போய் பேசுற தன்னம்பிக்கையும் மறுபக்கம்! இதோட வரதட்சணை ஒழிப்பு, எச்.ஐ.வி., நோயாளிகள் அரவணைப்புன்னு பல விஷயங்கள்ல நான் மேம்பட்டிருக்கேன்! இரண்டு குழந்தை திருமணங்கள் என் மூலமா நிறுத்தப்பட்டிருக்கு!
ஜன்னலுக்கு வெளியேயான மழை ஜன்னல் வழி சாரலாக தெறிப்பது போலத்தான் மஞ்சுளா; தன் வாழ்வுக்கு மழையாகவும், தன்னருகில் இருப்பவர்களுக்கு சாரலாகவும் இருக்கிறார்.
ஆசைகள் 1000* பெண்கள் சமமா நடத்தப்படணும்* எல்லாருக்கும் சொந்த வீடு இருக்கணும்* அமெரிக்காவுக்கு போகணும்.
