PUBLISHED ON : ஜூன் 04, 2023

லலிதா ஈரோடு, அந்தியூரில் இருந்து வளைவு பாதையில் மலையேறிக் கொண்டிருந்த நம் பேருந்தினுள் பழங்குடி மக்களின் வட்டார மொழி சலசலக்க, வரட்டுப்பள்ளம் அணை நீரும், மலையின் மரச்செறிவும் கண்களுக்கு இதம் தந்தன!
பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்தின் தன்னார்வ செவிலியான லலிதா, சிறிய மலைமேட்டில் தன் இரண்டு வயது மகனுடன் நம் சந்திப்புக்காக நின்றிருந்தார்.
இதை சொல்கையில் அக்கண்களில் வறட்சி
பர்கூர்ல இருந்து இரண்டு கி.மீ., தள்ளி இருக்குற ஊசிமலைதான் என் ஊர். அங்கே அப்பா, அம்மா, அண்ணன் விவசாயம் பண்றாங்க. சம்பாதிக்கிற ஆர்வத்துல பெரும்பாலும் எங்க ஊர்ல யாரும் உயர்கல்வி படிக்கிறது இல்லை! 'டீச்சருக்கு படிக்கணும்'னு எனக்கு ஆசை. வீட்டுல ஒத்துழைப்பு இல்லாததால செவிலியர் படிப்பை தேர்ந்தெடுத்தேன்!
பயன்பாட்டில் இல்லாத பொது கழிப்பறை வாசலில், 'கழிப்பறையை உபயோகிப்பவர் குறைந்தது ஒரு வாளி தண்ணீராவது பேசினில் ஊற்ற வேண்டும்' என்று எழுதப்பட்டிருந்தது. அம்மண்ணின் அறிவுச்சூழலை உணர அக்காட்சி நமக்கு போதுமானதாக இருந்தது!
இதை சொல்கையில் இமைகளில் இறுக்கம்
வீட்ல கல்யாண பேச்சு எடுத்தப்போ எனக்கு வயசு 15. 'இந்த ஒரு வருஷம் படிச்சுக்கிறேன்'னு சொல்லியே காலத்தை ஓட்டினேன். நெருக்கடி அதிகமாகுற நேரத்துல சாப்பிடாம, யார்கிட்டேயும் பேசாம இருந்தேன். 20 வயசு வரைக்கும் இப்படி சமாளிச்சேன். அப்புறம், லாரி டிரைவருக்கு மனைவி ஆயிட்டேன்!
லலிதாவுக்கு மாதம் 4,500 ரூபாய் ஊதியம். புகுந்த வீட்டில் 'படித்த மருமகள்' எனும் அங்கீகாரம். தன் தேவைகளை தன் பணத்தில் நிறைவேற்றிக் கொள்கிறார். ஊரில் தன் வயதுள்ள பிற பெண்களுக்கு இச்சுதந்திரம் இல்லை என்கிறார்.
இதை சொல்கையில் கண்களில் மகிழ்ச்சி
'மக்களை தேடி மருத்துவம்' திட்டத்துக்காக வீடு வீடா போய் பரிசோதனை செய்றப்போ, நான் படிச்ச படிப்பு என் ஊர் மக்களுக்கு பயன்படுதுங்கிற பெருமிதம்; அந்தகணத்துல, பிரசவ அறையில முன் நிற்கிற செவிலியா என்னை தரம் உயர்த்திக்கணும்னு முடிவு பண்ணினேன்!
இதை சொல்கையில் கண்களில் சிவப்பு
என் ஊர் மக்களுக்கும், என் மக்கள் மாதிரியே இருக்குற மத்தவங்களுக்கும் நான் சொல்லிக்க விரும்புறது இதுதான்... பசங்களை படிக்கச் சொல்லுங்க; பொம்பள பிள்ளைகளை படிக்க அனுப்புங்க!
அந்த மலைமேட்டில் இருந்து இறங்குகையில் இடுப்பில் இருந்த தன் மகனிடம் லலிதா சொன்னார்...
'அம்மா உன்னை நிறைய படிக்க வைப்பேன்; நீ நல்லா படிக்கணும்!' - இதைச் சொல்கையில் அவர் கண்களில் ஒளி.
ஆசைகள் 1,000* ஊசிமலையில் 100 சதவீத கல்வியறிவு*'நன்றிக்குரிய செவிலி' எனும் கவுரவம்* கணவருடன் நேரம் செலவிடணும்.
