PUBLISHED ON : நவ 05, 2023

இது, வாழ்வை அடியோடு பெயர்த்து எடுக்கும் சூறைக்காற்றுடன் மல்லுக்கட்டி நின்றவரின் கதை; தன்னம்பிக்கையால் அதிசயமாக பரிணமித்த வரின் கதை; விருதுநகர், ராஜபாளை யம் அருகே உள்ள தேசிகாபுரம் கிரா மத்தைச் சேர்ந்த சுந்தரம்மாளின் கதை!
தாவணி கனவுகள்
பிளஸ் 2 தேர்வுல பள்ளியில முதல் மாணவி நான்; மருத்துவம் படிக்கணும்னு ஆசை; குடும்ப வறுமை அனுமதிக்கலை; பஞ்சு ஆலை வேலைக்கு போயிட்டேன்; அப்படியே 17 ஆண்டுகள் ஓடிருச்சு! எப்பவாவது கண் அயரும்போது வெள்ளை கோட்டும் ஸ்டெதஸ்கோப்பும் மாட்டிக்கிட்டு வர்ற மாதிரி கற்பனை பண்ணிக்குவேன்!
சுந்தரம்மாளுக்கு 2004ம் ஆண்டு 21 வயதில் திருமணம். தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய கணவர் 2015ம் ஆண்டு விபத்தில் உயிரிழக்கையில் மகளுக்கு 5 வயது.
விதி விளையாட்டு
கணவர் இறந்த பிறகு ஆயிரத்தெட்டு விஷயங்கள் மனசுல ஈட்டி மாதிரி குத்திக்கிட்டே இருந்தது. பூவும் பொட்டும் வைச்சுக்கத் தோணும்; ஆனா, அதுக்கு நானே தடையா இருந்தேன். சொத்துக்காக நிகழ்ந்த கசப்பான சம்பவங்கள் என்னை மேலும் சுக்கு நுாறாக்குச்சு. மழை நேரத்துல ஒதுங்க இடமில்லாத அம்மா வீட்ல, அழுகையும் எதிர்மறை எண்ணங்களுமா நாட்களை நகர்த்திட்டு இருந்தேன்.
கணவர் இறந்த சில மாதங்களில், தனது 33வது வயதில் டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளுக்கு தயாராக முடிவெடுத்ததே சுந்தரம்மாள் வாழ்வின் திருப்புமுனை; அவருக்குள் அவரை மீட்கும் இந்த யுத்தம் பெரும் சவாலை தந்தது!
முயற்சியில் முளைத்தேன்
காலை 8:00 மணியில இருந்து சாயங்காலம் 5:30 மணி வரைக்கும் பஞ்சு ஆலையில கடுமையான வேலை; இடையில டீ குடிக்கணும்னா கையில காசு இருக்காது; 5:30 மணிக்கு மேல இரண்டு மணி நேரம் தட்டச்சு பயிற்சி; அந்தநேரத்துல பசியில கைவிரல்கள் நடுங்கும்; கண்ணுல கண்ணீர் ததும்ப ரொம்பவே சிரமப்பட்டு தட்டச்சு பண்ணுவேன்!
டி.என்.பி.எஸ்.சி., தேர்வின் முதல் முயற்சியில் அனுபவம் பெற்று, 2018ல் இரண்டாம் முயற்சியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் இளநிலை உதவியாளராக பணிவாய்ப்பினை பெற்றிருக்கிறார் சுந்தரம்மாள்!
புதுமைப்பெண்
மனு கொடுக்க வந்திருந்த ஒரு பெண் அழுறதைப் பார்த்து தனியா கூப்பிட்டுப் பேசினேன். அப்படியே என் கதை. நான் சந்திச்ச போராட்டங்களைச் சொன்னேன். இன்னைக்கு, அவங்களும் அரசுப்பணியாளர். 'முயற்சி பண்ணினா பள்ளத்துல கிடக்குற வாழ்க்கையை மேட்டுக்கு உயர்த்திடலாம்'ங்கிற நம்பிக்கையை என் கிராமத்துல நான் ஏற்படுத்தியிருக்கேன்.
ஆசைகள் 1000* என் கிராமத்துக்கு நுாலகம் கொண்டு வரணும்!* இரு சக்கர வாகனம் ஓட்ட கத்துக்கணும்!* என் அரசுப்பணி மக்களுக்கு பயன் தரணும்.
