PUBLISHED ON : அக் 29, 2023

அன்று 2005ல்...
கணவர் இறந்ததும், தன் இரு மகன்களுடன் எதிர்காலம் குறித்த பயத்தில் செய்வதறியாது தவித்தவர் செல்லம்மாள் சேகர்!
இன்று 2023ல்...
'டயர்ல பிரச்னைன்னா அடுத்த ஒரு மணி நேரத்துல டயரை மாத்திட்டு கிளம்பி போயிட்டே இருப்பேன்!' - பேச்சு போலவே பரபரவென செயலாற்றும் செல்லம்மாள், கனரக வாகனம் இயக்குவதில் 10 ஆண்டு அனுபவம் கொண்டவர்; சேலம் திம்மநாயக்கன்பட்டியில் வசிக்கிறார்.
இந்த தொழில் தந்த அனுபவங்கள்?
கடுமையான உடல் வலியை தர்ற வேலை; 'துாக்கம்'ங்கிற மருந்துதான் என் வலிக்கு நிவாரணி. படுத்ததும் துாங்குற அளவுக்கு உழைக்கிறேன். 'செக் போஸ்ட் பக்கம் லாரியை நிறுத்திட்டு துாங்குங்க சிஸ்டர்; நான் எழுப்பி விடுறேன்'னு சொல்ற காவலர்களையும், கொள்ளையடிக்க வழிமறிச்சுட்டு, 'நீங்க போங்க சிஸ்டர்'னு வழிவிடுற மனிதர்களையும் சந்திக்கிறேன்!
உண்மையைச் சொல்லுங்கள்... உடல் ஒத்துழைக்கிறதா?
மாடிப்படி ஏறக்கூட சிரமமாதான் இருக்கு; கடுமையா முதுகு வலிக்குது; ஆனா, எல்லாத்தையும் தாங்கி உழைக்கிறதுக்கு மனசும் உடம்பும் பழகிருச்சு!
செல்லம்மாளின் மூத்த மகனுக்கு திருமணமாகி விட்டது. இரண்டாவது மகன் பிளஸ் 2 படிக்கும் நிலையில், கல்வி வசதிக்காக சேலம் நாலு ரோடு பகுதியில் தற்காலிகமாக ஒரு வீட்டில் வசித்து வருகிறார். மகன் படிப்பு காரணமாய், கடந்த ஐந்து மாதங்களாக வெளியூர் சவாரிகளுக்கு செல்வதில்லை; பகுதிநேர உள்ளூர் ஓட்டுனராய் இருக்கிறார்!
செல்லம்மாள் யதார்த்தவாதியா?
தெரியலை; தனியொருத்தியா உழைச்சு என் மகன்களை வளர்த்திருக்கேன்; எதிர்காலத்துல, என் முதுமையில என் பசங்க என்னை கவனிக்காம போயிட்டா நீதிமன்ற படியேறவும் தயங்க மாட்டேன்!
ஊர்க்காவல் படையிலும், ஓட்டுனர் பயிற்சியாளராகவும் அனுபவம் பெற்றிருக்கும் செல்லம்மாள், தன் பணியின்போது ஒருமுறை கூட தன் மகன்களை உடன் அழைத்துச் சென்றதில்லையாம்!
ஏன் இப்படி ஒரு கொள்கை?
அப்பா லாரி ஓட்டுறதைப் பார்க்கப் போற பசங்க வாழ்க்கை என்னாகுதுன்னு நான் அடிக்கடி பார்க்கிறேன். சாலை பயணத்துல ஒரு சுகம் உண்டு. அந்த சுகத்துக்கு அடிமையான பசங்க, 'பள்ளி, கல்லுாரிக்கு போக மாட்டேன்'னு படிப்பை பாதியில நிறுத்திடுறாங்க. என் பசங்களோட எதிர்காலம் எனக்கு முக்கியம்!
கடவுளிடம் செல்லம்மாளின் வேண்டுதல்கள் நிறைவேறுகின்றனவா?
கூலிக்கு லாரி ஓட்டுறேன். ஒரு லட்சம் ரூபாய் இருந்தா பழைய லாரி வாங்கிடலாம். 'கடனாவது வாங்கிக் கொடு கடவுளே'ன்னு தினமும் வேண்டுறேன்; இன்னைக்கும் வேண்டினேன்.
செல்லம்மாளின்புதுப்புது அர்த்தங்கள்
*சாலை? - பாடம்*பணம்? - உலகம்*சந்தோஷம்? - பேத்தி
