PUBLISHED ON : அக் 15, 2023

ஒன்றுபட்டு வாழும் இடத்தில் ஒத்துழைப்பையும் நலம் பேணுதலையும் பரிமாறிக் கொள்பவர்களை 'குடும்பத்தினர்' என்கிறோம். சில தருணங்களில் சிலருக்கு குடும்பத்திற்கு ஆற்ற வேண்டிய இக்கடமைகளை விட்டுத்தர நேர்கிறது!
திருச்சி, கருமண்டபம் பகுதியில் வசிப்பவரும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் தடகள பயிற்சியாளராக இருப்பவருமான ஞான சுகந்தி, சில குடும்ப கடமைகளை விட்டுக் கொடுத்திருக்கிறார்; எனில், கணவர் நல்லுசாமி அண்ணாவி, மகன் மோதி அருண், மகள் கெவினா அஸ்வினி ஆகியோரது பார்வைக்கு ஞான சுகந்தி எவ்வாறு தெரிகிறார்?
'வருத்தம் தான்; ஆனாலும் நீங்க கிரேட் அம்மா!' - மோதி அருண்
தடகளத்துல 'உயரம் தாண்டுதல்'தான் என் களம். அம்மாவோட பணிச்சுமையால, என் பயிற்சி நேரங்கள்ல அவங்களால எனக்கு உதவ முடியலை. நான் காயப்பட்ட தருணங்கள்ல கூட அம்மாவால என் பக்கத்துல இருக்க முடியலை. ஜுனியர் பிரிவுல தேசிய அளவுல தங்கம் ஜெயிச்சிருக்கேன். ஒரு முன்னாள் வீராங்கனையா, பயிற்சியாளரா என் அம்மாவோட உறுதிப்பாடும், உழைப்பும்தான் என் நெருப்புக்கான ஆக்ஸிஜன்!
'உனக்காக நான் பெரு மைப்படுறேன் சுகந்தி!' - நல்லுசாமி அண்ணாவி
போட்டி நெருங்குற கடைசி நேரத்துல பயிற்சியாளரை மாற்றிக்கிட்ட மாணவர்களால, என் மனைவி துரோக வலியை அனுபவிச்சிருக்காங்க! நானும் 'உயரம் தாண்டுதல்' தடகள வீரர் மற்றும் பயிற்சியாளர்ங்கிறதால அந்த வலி எப்படிஇருக்கும்னு எனக்கும் தெரியும். இப்படியான வலிகளை தனக்கான சக்தியா மாற்றி இன்னொரு வீரனை உருவாக்குறதுல என் சுகந்தி சிங்கப்பெண்!
'என்னால உங்களை உணர முடியுதும்மா!' - கெவினா அஸ்வினி
நான் 'உயரம் தாண்டுதல்' சீனியர் பிரிவுல தேசிய அளவுல வெள்ளி ஜெயிச்சிருக்கேன். 'ஏழாம் வகுப்பு படிக்கும் போதே நான் தடகளத்துக்கு வந்துட்டேன்'னு அம்மா சொல்வாங்க. சமூக ஆதரவு இல்லாத அந்த சூழல்ல, 'உயரம் தாண்டுதல்'ல தேசிய அளவுல அம்மா வெள்ளி ஜெயிச்சிருக்காங்க. இப்போ, 53 வயசுல முழுநேர பயிற்சியாளர். இதெல்லாம் விட, அவங்க விரும்புற வாழ்க்கையை அவங்க வாழ்றாங்க. என் அம்மாதான் என் ரோல் மாடல்!
'இறைவனுக்கு நன்றி!' - ஞான சுகந்தி
என் கணவருக்கும் மகனுக்கும் நான் நல்ல பயிற்சியாளரா தெரிஞ்சிருக்கேன்; என் மகளுக்கு வெற்றிகரமான பெண்ணா தெரிஞ்சிருக்கேன்; இதுல எனக்கு சந்தோஷம். இப்படி வாழ்றதுக்காக சில இழப்புகளை நான் சந்திச்சிருக்கேன்; இதுல, என் குடும்பம் சார்ந்த விஷயங்களும் உண்டு!
நான் உண்மையா உழைச்சதோட பலன், 26 வயசுல என் மகன் அரசு தடகள பயிற்சியாளர் ஆயிட்டான்; 21 வயசுல மகள் ரயில்வே பணியில சேர்ந்துட்டா; இனி, நான் எனக்காகவும் வாழணும்.
