PUBLISHED ON : மே 21, 2021

திடீரென தலைக்கு மேலே மேகம் கறுத்து, சில வினாடிப் பொழுதில் மழைத்துளிகள் கழுத்து வழியே மார்பை தொட்டு சில்லிட வைத்தது போன்ற உணர்வு சரோஜினியின் தவில் இசை நம் செவி தழுவிய போது! சரோஜினியும், நாதஸ்வர கலைஞரான அவரது தந்தை சின்னப்பிள்ளையும் விருத்தாசலம், விருத்தகிரீஸ்வரரின் பூஜை நேரத்தில் அவருக்கு இசை மரியாதை செய்கின்றனர்.
தவில் உங்க விரல்களுக்கு வந்தது எப்படி?
பெண்கள்ல நிறைய பேர் நாதஸ்வரம் வாசிக்கிறாங்க; ஆனா, தவில் ரொம்ப கடினமா இருக்கிறதால யாரும் முன்வர்றதில்லை. ஆர்வமா கத்துக்க வர்ற பெண்களையும் சமூகம் அனுமதிக்கிறது இல்லை.
ஆனா, என் அப்பாவுக்கு என்னை தவில் கலைஞராக்கி பார்க்கணும்ங்கிற ஆசை இருந்தது. அப்பாவோட விருப்பத்துக்காக 11 வயசுல ஆரம்பிச்ச பயணம், 15 ஆண்டுகளா தொடருது.
தவிலை பிரிய வேண்டிய சூழ்நிலைகள் ஏதாவது...?
என் அம்மாவுக்கு நான் தவில் கத்துக்கிறதுல தயக்கம் இருந்தது. அக்கம்பக்கத்துல என்ன சொல்வாங்களோன்னு பயந்தாங்க. ஆனா, 'நாம தவில் எடுத்து வாசிச்சா நம்மளை வாசிக்கக் கூடாதுன்னு சொல்றவங்க கூட அமைதியா திரும்பி போயிடணும்'ங்கிற உறுதியோடத்தான் நான் தவில் வாசிக்க ஆரம்பிச்சேன். 'எதிர்ப்புகளுக்கு பதில் நம்ம செயலாத்தான் இருக்கணும்'னு தவில் எனக்கு உணர்த்துச்சு. இப்போ, தவில் வாசிக்க ஆசைப்படுற பெண்களுக்கு பயிற்சி தரவும் நான் விருப்பத்தோட காத்திருக்கேன்.
தவில் தவிர்த்த சரோஜினி யார்?
தவில்தான் என் எதிர்காலம்; ஆனாலும், மின்னணு பொறியியல்ல பட்டம் வாங்கியிருக்கேன். தவில் வாசிப்புல சின்ன இடைவெளின்னாலும் விரல்கள் வேகத்தை இழந்துடும். மீட்டெடுக்க மாதக்கணக்குல பயிற்சி தேவைப்படும்.
பேறு கால இடைவெளிக்கு அப்புறம் இதை நான் முழுமையா உணர்ந்து என்னை மீட்டெடுத்தேன். தவில் தவிர்த்து என் அடையாளமா நான் நினைக்கிறது எந்த சூழ்நிலைக்கும் ஏத்த மாதிரி என்னை நிலைநிறுத்திக்கிற இந்த குணத்தைதான்!
தவில் தந்த பெருமைகள்?
ஆயிரம் இருக்கு; ஆனா, என்னை கலைஞராக்கிய பெருமைதான் முதன்மையானது! தவிலை ரசிக்கத் தெரியாம கடந்து போறவங்க கூட, 'இங்க பாருய்யா ஒரு பொண்ணு வாசிக்குது'ன்னு நின்னு கவனிப்பாங்க. அந்த இடத்துல தவிலோட பெருமையை உணர்த்துன பெருமிதம் எனக்கு. விருத்தகிரீஸ்வரருக்கு வாசிக்கும்போதெல்லாம் அவரோட உரையாடுற மாதிரியே இருக்கும். 'இந்த பிறவிக்கு இதுபோதும்'னு மனசு நெகிழும். இந்த அனுபவத்தை உலகத்துல வேற எந்த சக்தியாலும் தர முடியாதுங்கிறது என் நம்பிக்கை.
சரோஜினியின் புதுப்புது அர்த்தங்கள்
பெண்? - மொழி
தவில்? - இலக்கணம்
