PUBLISHED ON : ஜன 09, 2022

'திருநங்கை - திருநம்பிகளோடு, 'ஆண் பாதி - பெண் பாதி' உருவமான அர்த்தநாரீஸ்வரரை ஒப்பிட்டு பேசக் கூடாது' என்கிறார் சம்யுக்தா விஜயன்.
ஏன் இப்படி... கடவுளோடு ஒப்பிடுவது பெருமையில்லையா?
இந்த 37 ஆண்டுகள்ல ஒருநாளும் நான் என்கிட்டே ஆண்மையை உணர்ந்தது இல்லை; முழுமையான பெண்ணாதான் என்னை உணர்றேன். தவிர, அர்த்தநாரீஸ்வரர் சொல்றது, 'ஆணும் பெண்ணும் சமம்'ங்கிற உண்மையை!
சபாஷ்; இந்த சமூகம் ரொம்ப காயப்படுத்தியிருச்சா?
நிச்சயமா இல்லை; 'சந்தோஷ் ஏன் இப்படி இருக்குறான்'னு மத்தவங்க கேட்குறதுக்கு முன்னாடியே, என் பரதநாட்டிய புகைப்படங்களை காமிச்சு, 'என் பையன் மகாலட்சுமி மாதிரி இருக்கான்ல'ன்னு எங்கப்பா முந்திடுவார்; 'நீ பெண்ணா பிறந்தா உனக்கு 'சம்யுக்தா'ன்னு பெயர் வைக்கலாம்னு இருந்தோம்; இனி உன்னை அப்படியே கூப்பிடுறோம்'னு அம்மா ஆச்சரியப்படுத்தினாங்க; என் குடும்பம் என்னை அப்படியே ஏத்துக்கிட்டதால, சமூக காயங்களை நான் பொருட்படுத்தலை!
தனக்குள்ளிருக்கும் பெண்மையை சமூகம் அங்கீகரிக்க வேண்டுமெனில் உயரே பறக்க வேண்டும்; இதற்கான சிறகை கல்வி மட்டுமே தரும் என்பதை உணர்ந்த பொள்ளாச்சி சம்யுக்தா, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் மாவட்ட அளவில் இரண்டாமிடம் பெற்றவர். பட்டப் படிப்பிற்கு பிறகு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பணியாற்றியவர், தற்போது சிறகடிப்பது... தென் கொரியாவில்!
'திருநங்கையர்' மீதான உலகப் பார்வை?
நான் உணர்ந்த வரைக்கும் எங்கேயும் 'மூன்றாம் பாலினம்'ங்கிற வேறுபாடு இல்லை! ஆமா... எது முதல் பாலினம்; பாலின வரிசைக்கான தகுதி எது; தகுதி அடிப்படையில நிர்ணயிக்கிறதா இருந்தா, பெண்தானே முதல் பாலினம்; ஆனா, இதை இந்த சமூகம் ஏத்துக்காது! இந்த சூழல் மாறினா மட்டும்தான் எங்க மீதான பார்வை மாறும்!
தன்னைப் போன்றோரின் வாழ்வை மேம்படுத்தும் எண்ணத்தில், 2017ம் ஆண்டு பெங்களூரில் 'ஸ்டார்ட் - அப்' நிறுவனம் துவக்கினார் சம்யுக்தா. 'கோவிட்' பெருந்தொற்று சிக்கலால் நிறுவனத்தின் இயக்கம் தற்காலிகமாக தடைபட்டிருக்கிறது.
உங்க வாழ்க்கை அழகானதா?
'அறுவை சிகிச்சை' மூலமா உடலாலும் பெண்ணா மாறினதுக்கப்புறம், 2018ல தம்பி திருமணத்துக்கு ஊருக்கு வர வேண்டிய கட்டாயம்; 'உனக்கேதும் பிரச்னை இல்லையே'ன்னு அவன்கிட்டே கேட்டேன்; 'நீ வரலைன்னா எனக்கு கல்யாணமே வேண்டாம்'னு சொன்னான்! கல்யாண வீட்டுல, 'இது என் பொண்ணு சம்யுக்தா'ன்னு அம்மா எல்லார்கிட்டேயும் என்னை அறிமுகப்படுத்தினாங்க! நான் மறுபடியும் பிறந்த நாள் அது.
சம்யுக்தா விஜயனின் புதுப்புது அர்த்தங்கள்!
பெண்மை? - சாமி
அன்பு? - தடுப்பூசி
அவமானம்? - உளி
