
இதோ, 77 ஆயிரத்து 335 ரூபாய் சேர்த்தாயிற்று.
இனி, அரசியின் கனவுக்கும் நிஜத்துக்கும் இடையிலான இடைவெளி வெறும் 30 ஆயிரம் ரூபாய். இந்த சங்கிலி ஒருகாலத்தில் அம்மாவின் உயிரைக் குடித்த சுருக்கு கயிறு. அம்மா வேலை செய்த வீட்டில் சங்கிலி களவு போன போது பழி அம்மா மீது விழுந்தது. அம்மா துாக்கிட்டுக் கொண்டாள்.
'அந்த ஊர் உறவு முன்னால் தங்கச்சங்கிலியோடு நடை போடுவேன்!' - அரசி வாய்விட்டு சொல்லாத சபதம் இது!
'ஜொலிக்குதேடி...' - அரசியின் சங்கிலியை தொட்டுப் பார்த்த கிழவியின் குரலில் ஆனந்தம். படுக்கையில் கிடக்கும் கிழவிக்கு, காலையில் பல் துலக்கி விடுவதில் இருந்து இரவு கொசுவர்த்தி கொளுத்தி வைப்பதுவரை அத்தனையும் அரசியின் பாடு. மாதம் ரூ.30 ஆயிரம் ஊதியம். அதில் சேர்த்து வைத்து வாங்கியதுதான் இந்த சங்கிலி!
ஓர் ஆண்டு கரைந்திருந்தது. விபத்தில் சிக்கி உயிர் பிழைத்த அரசியின் கணவன் முருகேசன் மருத்துவமனையில் இருந்து சற்றுமுன் வீடு திரும்பி இருந்தான்.
'சங்கிலியை வித்துட்டியே பிள்ளை... சங்கிலிக்காக அந்த கிழவியை தினம் அலம்பி, கழுவி, குளிப்பாட்டி... அது உன் கனவும்பியே...' - தேம்பி அழுதான்.
'அம்மாவுக்காக வாங்கினேன். உனக்காக வித்தேன். உன்னை விடவா அது பெருசு?' - அரசி அழவில்லை.
படைப்பு: 'அசலும் நகலும்' சிறுகதை
எழுதியவர்: மாலன்
பதிப்பகம்: கவிதா