PUBLISHED ON : மார் 18, 2015
இன்று என் வாழ்நாளில் மறக்க முடியாத நாள். மருத்துவராக இருப்பதில் பெருமை அடைகிறேன். இதய பாதிப்பால், பல மருத்துவர்களை சந்தித்து, தீர்வு கிடைக்காமல் பல சங்கடங்களுக்கு இடையே, கடந்த ஆண்டு, ஜூலை மாதம், கோல்கட்டாவில் இருந்து என்னை சந்திப்பதற்காக வந்தார், தப்பன் காண்டி, ௬௫.
பதினைந்து ஆண்டுகளுக்கு முன், அவருக்கு திறந்தநிலை இதய அறுவை சிகிச்சை, செய்யப்பட்டது. என்னிடம் வந்தபோது அவர், இதய வலியால் துடித்து கொண்டிருந்தார்.
பரிசோதித்தோம். பொதுவாக, இதயத்திலிருந்து ரத்தத்தை, இதர உறுப்புகளுக்கு அனுப்ப உதவும் ஆரோக்கியமான, மகா தமனியின் விட்டம், 2 முதல் 3 செ.மீ., இருக்க வேண்டும். ஆனால், தப்பனுக்கு, தமனியின் ஆரம்ப பகுதி மற்றும் கீழ் பகுதியில், தமனி சுவர் 9 செ.மீ.,க்கு வீக்கமடைந்து, விரிவடைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனால், மீண்டும், திறந்த நிலை இதய அறுவை சிகிச்சையின் மூலம், நெஞ்சு பகுதியின் இடது மற்றும் வலது பக்கங்களில் உள்ள, 'கரோடிட்' மற்றும் 'சப்கிளேவியன்' என்ற தமனிகளை, வீக்கமற்ற, மகா தமனியின் அருகே, இடம் மாற்றி பொருத்தினோம். காரணம் வீக்கமடைந்த மகா தமனியை சரியும் செய்யும் போது மூளைக்கும், கழுத்துக்கும் செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்க
கூடாது என்பதற்காக. ஏற்கனவே அவருக்கு, திறந்த நிலை இதய அறுவை சிகிச்சை நடந்ததால், அவரின் ரத்த நாளங்கள் பாதிக்காதவாறு, நுட்பமாக செய்தோம்.
பின், ஒரு வாரம் கழித்து, பழுதடைந்த மகா தமனியை, இதய நிபுணர், இதய அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் கதிர்வீச்சு நிபுணர் மூவரும் சேர்ந்து, நுண்துளை இதய அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்து, செயற்கை ரத்த குழாய் பொருத்தினோம். இதற்கு 'ஹைபிரட்' சர்ஜரி என்று பெயர். இந்த அறுவை சிகிச்சை செய்யவில்லை என்றால், நோயாளியின் மகா தமனி வெடிக்க வாய்ப்புள்ளது.
மனித உடலில் உள்ள ரத்த குழாய்களில், 'அயோட்டா' எனும் மகா தமனி பெரியதும், மிக முக்கியமானதும் ஆகும். நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், மனஅழுத்தம் உள்ளோர், அதிக கொழுப்பு நிறைந்த உணவு உண்போர், உடலுழைப்பு இல்லாதோருக்கு, அதில் பாதிப்பு எற்படுகிறது. கடுமையான நெஞ்சு வலி, தமனி பாதிக்கப்பட்டதற்கான அறிகுறி.
இந்தியாவிலேயே, முதன்முதலாக செய்யப்பட்ட நுண்துளை இதய அறுவை சிகிச்சை இது. இதை நான் செய்து, ஒரு உயிரை காப்பாற்றியிருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சியே. தப்பன், இதய ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு சாட்சியாக, இருசக்கர வாகனம் ஓட்டுவது போல் புகைப்படம் ஒன்றை, எனக்கு அனுப்பி இருந்தார்.
- எம்.எம்.யூசுப்
நுண்துளை இதய அறுவை சிகிச்சை நிபுணர்
குளோபல் ஹெல்த் சிட்டி, 82206 69911
