PUBLISHED ON : டிச 16, 2012

நாதன், மதுரை: எனது வயது 70. பைபாஸ் சர்ஜரி செய்து 6 ஆண்டுகளாகிறது. நான் இதுவரை 'லோசார்டான்' என்ற மாத்திரையை எடுத்து வருகிறேன். எனது ரத்தஅழுத்தம் 130/80 என இருந்தது. எனது மருத்துவர் தற்போது, 'டெல்மிசார்டான்' என்ற மாத்திரையை தந்துள்ளார். நான் இதை தொடர்ந்து எடுக்கலாமா?
லோசார்டான் என்பது ஏ.ஆர்.பி., வகையைச் சேர்ந்த ரத்தக்கொதிப்பு மாத்திரை. 130/80 என்பது சரியான ரத்தஅழுத்த அளவுதான். அதனால் இந்த மாத்திரையை மாற்றும் அவசியம் இல்லை. டெல்மிசார்டான் என்பதும் அதே ஏ.ஆர்.பி., வகையைச் சேர்ந்த மாத்திரையே. இதுவும் பக்கவிளைவு இல்லாத நல்ல மாத்திரைதான். லோசார்டான் மிகப்பழைய மருந்து. டெல்மிசார்டான் அதற்கு பிறகு அறிமுகமானது. இவ்விரண்டுமே நல்ல மருந்துகள்தான். இவற்றில் எந்த ஒன்றையும் தொடர்ந்து எடுப்பதால் பாதிப்பு
எதுவும் வராது.
எஸ்.கீதாகுமார், திருப்புத்தூர்: எனக்கு ஒருமாதமாக இருமல் ஏற்படும்போது நெஞ்சுவலி ஏற்படுகிறது. இது இருதய நோயின் அறிகுறியா?
இருமும்போது நெஞ்சு வலி ஏற்பட்டால், அது இருதய நோயாக இருக்க வாய்ப்பு மிகமிகக் குறைவு. நுரையீரல், அதைச்சுற்றி உள்ள பகுதியிலோ அல்லது நெஞ்சிலோ கோளாறு ஏற்பட்டால் இந்த வலி ஏற்பட வாய்ப்புள்ளது. உடனடியாக ரத்தப்பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, மார்பக எக்ஸ்ரே, எக்கோ பரிசோதனையோ, வயிறு, நெஞ்சுப் பகுதி ஸ்கேன் தேவைப்படலாம். இவற்றின் முடிவுக்கு ஏற்ப உங்களுக்கு சிகிச்சை முறை அமையும்.
பி.பாண்டியராஜன், மானாமதுரை: எனது வயது 41. சமீபத்தில் எனக்கு ரத்தக்கொதிப்பு வந்து உள்ளது. எனது டாக்டர் உணவில் உப்பை நன்கு குறைக்கும்படி கூறுகிறார். அதை எப்படி நடைமுறைப்படுத்துவது?
உங்கள் வீட்டு சாப்பாட்டில் படிப்படியாக ஒவ்வொரு நாளும் சிறிது, சிறிதாக உப்பை குறைக்க வேண்டும். உங்கள் சாப்பாட்டு மேஜைமீது உப்பு இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளின் பாக்கெட்டில் குறிப்பிட்டுள்ள பொருட்களில் முதல் மூன்றில் உப்பு இடம்பெற்றிருந்தால், அந்த உணவை தவிர்க்க வேண்டும். சாப்பிடும்போது அப்பளம், வடகம், ஊறுகாய், கருவாடு போன்ற அதிகம் உப்பு சார்ந்த பொருட்களை அறவே தவிர்க்க வேண்டும். ஸ்நாக்சில் மிக்சர், காரச்சேவு போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
கே.செல்வரத்தினம், தேனி: எனக்கு 4 ஆண்டுகளாக இருதய நோய் உள்ளது. இதற்காக 11 வகை மாத்திரைகளை எடுத்து வருகிறேன். இதனால் எனக்கு சிறுநீரக பாதிப்பு வரவாய்ப்புள்ளதா?
எந்த ஒரு மருந்துக்கும் பக்க விளைவு சிறிதளவாவது இருக்க வாய்ப்பு உண்டு. அதை டாக்டர்கள் நன்கு அறிவர். அலோபதி மருத்துவத்தில் ஒரு நோய்க்கு மருந்து தரும்பட்சத்தில், அதன் செயல்பாட்டைவிட, பக்கவிளைவை நன்கு அறிந்துதான் மருந்து தரப்படுகிறது என்பது அசைக்க முடியாத உண்மை. எனவே அவ்வப்போது உங்கள் டாக்டர் ரத்தம், சிறுநீர் ஆகியவற்றை பரிசோதனை செய்து, நீங்கள் எடுத்துவரும் மருந்துக்கு பக்கவிளைவு உள்ளதா என கண்டறிவார். அப்பரிசோதனை முடிவுக்கு ஏற்ப, மாத்திரைகள் மாற்றி அமைக்கப்படும். எனவே பக்கவிளைவு ஏற்பட்டாலும், உடனே கண்டறியப்பட்டு, அதற்கு சிகிச்சை அளித்து சரிசெய்யப்படும். எனவே பயப்படத் தேவையில்லை.
- டாக்டர் சி.விவேக்போஸ்,
மதுரை.