PUBLISHED ON : நவ 04, 2015

எல்லாம் சரியாகி விடும் என்கிற நம்பிக்கையில் தான், கடந்த இரண்டு மாதங்கள் நகர்ந்தன பிரியனுக்கு வயது 29. திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. காதலித்து கரம் பற்றியவர். மனைவி கல்யாணி. இருவரின் அன்பில் உருவான குட்டி தேவதை நிவேதிதா.
பிரியன், தனியார் தொலைக்காட்சி விளம்பரப் பிரிவின் மேலதிகாரி. எந்த கெட்ட பழக்கமும்
இல்லை. அவர், 10ம் வகுப்பு படித்த போது, தன் தாயை இழந்ததால், தாய் பாசத்துக்காக ஏங்கினார்.
நிவேதிதா, தன் பாட்டியைப் போலவே அச்சு அசலாக இருக்க, தன் தாயே தனக்கு மகளாக பிறந்ததாக நினைத்து மகிழ்ந்தார் பிரியன்.
இப்படி மகிழ்ச்சியாய் நகர்ந்து கொண்டு இருந்த பிரியனின் வாழ்க்கையை புரட்டிப் போட்டது, ஒரு விபத்து. அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தபோது, விபத்தில் சிக்கினார். அதிர்ச்சியில் மயங்கி விட்டார். கண் விழித்து பார்த்தபோது, மருத்துவமனையில் இருந்தார். முதலுதவி முடிந்த பின், வீட்டிற்கு திரும்பினார். முகம், கை கால்களில் சிராய்ப்பு. சில மணி நேரங்களில், கால் அதிகப்படியாக வலித்தது; வீக்கமும் அதிகமானது.
வலது காலை தரையில் ஊன்ற முடியவில்லை. நாட்டு மருத்துவமுறையில் 15 நாட்களுக்கு ஒரு கட்டு என்று, இரண்டு மாதங்கள் மாவுக் கட்டு போடப்பட்டு, சிகிச்சை நடந்தது. ஆனால், கால் சரியாகவில்லை. வலி தொடர்ந்தது. இந்த சூழ்நிலையில் தான், என்னை சந்திக்க வந்திருந்தார்.
பிரியனுக்கு, 'எக்ஸ் - ரே' எடுத்துப் பார்த்ததில், வலது காலில் முட்டிக்கு கீழ், 'டிப்ளா' என்ற இடத்தில், எலும்பு முறிந்து இடைவெளி இருந்தது. சிறிய அறுவை சிகிச்சைக்கு சிபாரிசு செய்தேன். உடம்பில் எந்த இடத்தில் எலும்பு முறிந்தாலும், ஆறு வாரங்களில் கூடிவிடும். ஆனால் அதற்கு, முறிந்த எலும்புகளின் இடையே இடைவெளி இருக்கக் கூடாது. அந்த இடைவெளியை சமன் செய்ய, மருத்துவ மொழியில், 'அனாடமிகல் அலைன்மென்ட்' செய்து, சிறு 'ஸ்க்ரூ'க்கள் மூலம், உடைந்த இரண்டு எலும்புகளையும் ஒட்ட வைத்தோம். பிரியன், மூன்று நாட்கள் மருத்துவமனையில் இருந்தார்.பின், 10 நாட்களில், எலும்புகள் ஒன்று கூடி, பழைய நிலைக்கு திரும்பி விட்டார். தொடர்ந்து மாவுக் கட்டு போட்டிருந்தால், சதை திசுக்கள் இறுகி, செயல்படும் திறன் குறைந்திருக்கும். இதற்கு இயன்முறை சிகிச்சை, ஆறு வாரங்கள் கொடுத்திருக்க வேண்டும். கிட்டத்தட்ட ஆறு மாத காலம், பிரியன் தன் வாழ்க்கையை இழந்திருப்பார். சரிவர கவனிக்காமல் மாவுக் கட்டு போட்டிருந்தால், எலும்புகள் இணையாமலும் போயிருக்கலாம்.
மருத்துவ உலகமும் மாற்றங்களுக்கு உட்பட்டது தான். அந்த மாற்றங்களை நாம், தகுந்த முறையில் பயன்படுத்தினால், பெரிய விளைவுகளில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ள முடியும்.
- சி.ஜெ.வெற்றிவேல்,
எலும்பு நிபுணர், சென்னை.
98406 31359

