எனக்கு வயது 28. என் பெற்றோர், எனக்கு திருமணம் செய்து வைக்க விரும்புகின்றனர். ஆனால், என் ஆண்குறி சிறியதாக உள்ளது. அதை நீளமாக்க விரும்புகிறேன். முடியுமா?
கே. ஆனந்த், திண்டுக்கல்
வளர் இளம் பருவத்தில் தான், ஆணுறுப்பு முழுமையாக வளர்ச்சி அடையும்; அதாவது, 18 முதல், 20 வயதில். அதன்பின், நீளமாக்குவதற்கு எந்த விதமான பயிற்சியும் இல்லை.
ஹார்மோன் சீராக இல்லாத காரணத்தால், ஆண்குறி சிறியதாக இருந்தால், மருத்துவ நிபுணரை அணுக வேண்டும். அவர், தேவையான ஹார்மோன், சரியான அளவில் சுரக்க, மருந்துகள் தருவார். அதை, மருத்துவர் சொல்லும் காலம் வரை எடுத்தால், தீர்வு கிடைக்கும்.
ஆர்.சங்கர், பாலியல் மருத்துவர். சென்னை.
மாதவிடாய் சுழற்சி, முன்கூட்டியே நின்று விடுவதால், பெண்களின் உடல்நிலை பாதிக்கப்படுமா?
தெ.ரத்தினமாலா, தேனி
டி.என்.ஏ.,-வை, இழை போன்ற ஒரு மேற்புற போர்வை தான் பாதுகாத்து வருகிறது. அது மிகவும் சிறிய அளவில் இருக்கும். மாதவிடாய் முன்கூட்டியே நின்று விடுவதால், அந்த இழை போன்று படர்ந்திருக்கும் பாதுகாப்பு போர்வை, பாதிப்பு அடைகிறது. இதனால், பெண்களின் உடல் பாகங்கள் விரைவாகவே முதிர்ச்சி அடைகின்றன. மாதவிடாய் நிற்கும் காலம், 50 வயது என, கூறப்படுகிறது. ஆனால், சிலருக்கு 40 வயதில் மாதவிடாய் நின்றுவிடும். அப்படிப்பட்ட பெண்களுக்கு, 40 சதவீத இதய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
பொதுவாக, பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் காலத்தில், 'ஈஸ்ட்ரோஜன்' குறையும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, முன்கூட்டியே மாதவிடாய் நிற்கும் பெண்களுக்கு, அதிகமாக எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
ஆ.சாந்தி, மகளிர் நல மருத்துவர்.
பிறவிக் குறைபாடு நோய்கள் என்றால் என்ன? அவை ஏன் ஏற்படுகின்றன?
க. தினேஷ், திருவேற்காடு
பிறக்கும் போதே குழந்தைகளிடம் காணப்படும் உடல் கட்டமைப்பு அல்லது செயல்திறன் குறைபாடுகளை, பிறவிக் குறைபாடுகள் என்பர். பிறக்கும் குழந்தைகளில், 33 பேரில் ஒன்று, பிறவிக் குறைபாடு உள்ளதாக பிறக்கிறது. பிறவிக் குறைபாடுகளுக்கு, நிச்சயமான காரணத்தை கூற முடியாது. எனினும், மரபணு காரணங்களும் இதில் அடங்கும். சிலருக்கு, ஊட்டச்சத்து குறைபாட்டாலும், பல பிரச்னைகள் ஏற்படுகின்றன.
ர.பாலாஜி, சென்னை.

