PUBLISHED ON : செப் 23, 2015

சுரேந்தருக்கு திருமணமாகி, இரண்டு ஆண்டுகள் தான் ஆகிறது. ஒரு வயதில் அழகான ஆண் குழந்தை இருக்கிறான்; பெயர் முகிலன். முகிலன், ஒரு வயதிலேயே படுசுட்டியாக இருந்தான். ஒரு இடத்தில் ஒரு நிமிடம் இருக்கமாட்டான். எப்போதும், அவன்கூட விளையாட, மற்ற குழந்தைகளை எதிர்பார்ப்பான். விளையாட்டு பொம்மைகள் இருந்தாலும், அவை எல்லாம், அவனுக்கு இரண்டாம்பட்சம் தான். அக்கம்பக்கத்தினரின் செல்லப்பிள்ளையான முகிலனை, அடிக்கடி அவர்கள் தூக்கி கொண்டு போய், கொஞ்சி விளையாடி மகிழ்வர்.
இப்படியே, நாட்கள் செல்ல செல்ல, திடீரென ஒரு நாள் இரவு, முகிலன் தொடர்ந்து அழுது கொண்டே இருந்திருக்கிறான். ஏதோ ஆபத்து என நினைத்து, சுரேந்தரும் அவரது மனைவியும், முகிலலை தூக்கி பரிசோதித்தனர். 'டயப்பரில்' எறும்பு ஏதாவது இருக்கிறதா? வயறு வலிக்கிறதா? என்று சோதித்ததில், அவனது உடலில், சிவப்பாக சொறிந்ததை போல இருந்தது. பூச்சி ஏதோ கடித்திருக்கிறது, என, முகிலனை மருத்துவமனை அழைத்து சென்று, பொது மருத்துவரிடம் ஆலோசனை பெற்று வந்திருக்கின்றனர்; பின் வந்த நாட்களில், பிரச்னை பெரிதானது.
முகிலன், குறிப்பாக இரவு நேரங்களில், கழுத்து, தொடை போன்ற இடங்களில், சொறிந்து விட சொன்னான். உடனே, சுரேந்தர் உஷாராகி என்னிடம் அழைத்து வந்திருந்தார். முகிலனை பரிசோதித்ததில், அவனுக்கு, 'ஸ்கேபிஸ்' தாக்கம் இருந்தது. சொறி சிரங்கு எனப்படும், 'ஸ்கேபிஸ்' பொதுவாக, குழந்தைகள் மண்ணில் விளையாடுவதால் ஏற்படும் என்பர்; அது தவறான கருத்து! இதற்கு, ஒரு வகையான சொறிப்பூச்சிகளே, காரணம். இந்த பூச்சிகள் மனிதர்களிடம் மட்டுமே வாழும், ஒரு வகையான ஒட்டுண்ணி. இப்பூச்சிகளின் தாக்கத்தினால், சொறி சிரங்கு ஏற்படுகிறது. இதை முற்றிலும் குணப்படுத்த முடியும். தோற்றத்தில் மிகச் சிறிய ஒட்டுண்ணியான சொறிப்பூச்சிகள், 4 மி.மீ., அளவில் தான் இருக்கும். ஆண் பூச்சியை விட, பெண் பூச்சியே, உருவத்தில் பெரியதாகவும், தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்கும்.
ஆண் பூச்சிகள் இனப்பெருக்கத்திற்கு உதவியதும் இறந்துவிடும். பெண் பூச்சிகள் மட்டுமே, மனித உடலில் துளைகளிட்டு, அவற்றில், முட்டைகள் இட்டு இனப்பெருக்கம் அடையும். இவை இனப்பெருக்கம் அடைந்த, ஏழு முதல் 10 நாட்களுக்குள், இரவில் தீவிர நமைச்சல் இருக்கும். பாதிக்கப்பட்ட இடங்களில் சிவப்பும் பழுப்பும் கலந்த நிறத்தில், தோலில் கொப்புளங்கள் உருவாகும்; தீவிர தோல் அழற்சி உண்டாகும். பாதிக்கப்பட்ட இடங்களை சொறிந்தால், தோலில் சிராய்ப்புகள் ஏற்பட்டு, தோலின் நிறம் கருமை அடையும். சொறி சிரங்கு கிருமித் தொற்று உள்ளவருடன், கைகுலுக்குதல், சேர்ந்து உறங்குதல், அவர்களின் ஆடைகளை பயன்படுத்துதல் போன்ற செயல்களின் மூலம் மற்றவருக்கு பரவும். குழந்தைகளின் தோல் மிருதுவாக இருப்பதால், சொறிப்பூச்சிகள் அவர்களின் உடம்பில் எளிதாக நுழைந்துவிடும். இவை வராமல் தடுக்க, போதுமான அளவில் சுத்தமாக இருத்தல் அவசியம். மேலும் பாதிக்கப்பட்டால், நல்ல மாத்திரைகள் களிம்புகள் உள்ளன. முகிலனுக்கு ஆரம்ப கட்டத்திலேயே களிம்புகள் தடவி சரி செய்யப்பட்டது.
- வெ.ரத்தின மூர்த்தி, சரும நோய் நிபுணர், சென்னை.
dr.rathinam2000@yahoo.co.in

