PUBLISHED ON : அக் 21, 2015

என் தூரத்து உறவினர் பெண் தான் பாமா, 28. அவரை அத்தனை சீக்கிரம் மறக்க முடியாது. காரணம், என் ஆலோசனையை கேட்டிருந்தால், இன்று உயிரேடு இருந்திருப்பார். கேட்க மறுத்ததால், இன்று தன் நான்கு வயது குழந்தை மற்றும் ஆறு வயது குழந்தை, அன்பான கணவர் என்று அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்தி விட்டு இறந்து விட்டார்.
பாமாவிற்கு ஏற்பட்டது தீர்க்கக்கூடிய பிரச்னை தான். ஆனால் அவர் சமயோசிதமாக செயல்படவில்லை. பசி இல்லை, வயிறு வலி, சாப்பிட்ட உணவு செரிக்கவில்லை என என்னிடம் வந்தார் ஸ்கேன் செய்தததில் பித்தப்பையில் கற்கள் இருந்தது தெரியவந்தது. அதை கவனிக்காமல் விட்டுவிட்டார்.
நாள் செல்லச் செல்ல பித்தப்பை கற்கள் பித்தப்பையை விட்டு பித்தநீர் பாதைக்கு வந்து விட்டன. அதனால், மஞ்சள் காமாலை நோய், பாமாவை தாக்கியது. பித்தப்பை கற்களை அகற்ற றுவை சிகிச்சை செய்யச் சொன்னேன். ஆனால் இயற்கை வைத்தியம் மேற்கொண்டார். சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விட்டார்.
கல்லீரலில் இருந்து உற்பத்தியாகும் பித்த நீர் என்ற ஜீரண நீரை, பித்தப்பை, சேமித்து வைக்கிறது. உணவு உண்ட பின், இந்தப் பை சுருங்குவதால், ஜீரண நீர் அதில் இருந்து வெளியேற்றப்பட்டு, குடலைச் சென்றடைகிறது. ஜீரண நீர், உணவை செரிக்க உதவுகிறது.
கொழுப்பு சத்து நிறைந்த உணவுகள் மென்பானங்கள், துரித உணவுகளை உண்பதால், பித்தப்பையில் கற்கள் உருவாகி்னறன. பொதுவாக பித்தப்பை கற்கள், உடல் பருமன், வாயு தொல்லை உள்ளோருக்கும், 40 வயதை கடந்தோருக்கும் தான் அதிகம் வரும்.
சாப்பிட்டபின், வயிற்றின் மேல்பாகத்தில், வலதுபுறம் வலி உண்டாதல் மஞ்சள் காமாலை, மிகக் கடினமான வயிற்று வலி ஆகியவை, இந்த பிரச்னைக்கான அறிகுறிகள். பித்தப்பை கற்கள் இருப்பது உறுதி என்று, பரிசோதனையில் தெரியவந்தவுடன் சிகிச்சை மேற்கொள்வது நல்லது.
அதனை அலட்சியப்படுத்தினால், பித்தப்பை கற்கள், பித்த நாளத்தில் விழுந்து, அதை அடைத்துக்கொள்ளும் அதனால், மஞ்சள் காமாலை உருவாகும் ஆபத்து உண்டு.
பித்தப்பையில் கற்கள் அதிகமாகி விட்டாலோ, பித்தப்பை தனது இயல்பான பணியான சுருங்கி விரியும் தன்மையை இழந்து அழுகிவிட்டாலோ, அதனை அகற்றுவதே மேல், அதனால், எந்தவித பாதிப்பும், பின் விளைவும் வருவதில்லை. கெட்டுப்போன பித்தப்பையால் கூட, கற்கள் உருவாகலாம்.
இந்தப் பிரச்னைக்கான அறுவை சிகிச்சையில், மூன்று விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
* பித்தநீர் பாதையிலுள்ள கற்களை நீக்கி, செயற்கை குழாயை பொறுத்த வேண்டும்.
* இரண்டு நாள் கழித்து, பித்தப்பையை சு்தம் செய்ய வேண்டும்.
* பின் பித்தநீர் பாதையிலுள்ள செயற்கை குழாயை அகற்ற வேண்டும்.
- மா. வெங்கடேசன்
உடல்பருமன் மற்றும் நுண்துளை அறுவை சிகிச்சை நிபுணர், சென்னை
போன்: 98402 43833

