PUBLISHED ON : அக் 21, 2015

உங்கள் வயது என்னவானாலும், ஆரோக்கியமான உணவு உண்பது அவசியம். இந்தியாவில், இளவயதில் இறப்போரின் எண்ணிக்கை, அதிகரித்து வருகிறது. 40க்கும் குறைந்த வயதுடையோர் மரண எண்ணிக்கை, 50 சதவீதம் என்கின்றன ஆய்வுகள்.
இளைஞர்களின் உயிரை பறிப்பதில் விபத்துக்கு அடுத்து மாரடைப்பு மற்றும் இதய நோய்கள் முக்கிய இடம் பெறகின்றன.
இதய நோய்கள் வராமல் தடுக்க, அருமருந்தாக பயன்படும் ஆளி விதை பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
இதயத்தின் செயல்பாடு, நாடித்துடிப்பு, ரத்தக்குழாய்களின் இயக்கம் போன்றவற்றை கட்டுப்படுத்துவது, 'ஒமேகா-3' எனும் நல்ல கொழுப்பு.
இந்த அமிலம் குறையும் போது, உடலில் கெட்ட கொழுப்புகளின் அளவு அதிகரித்து, இதய நோய்கள் உருவாகின்றன. இந்த அமிலம் ஆளி விதையில் அதிகம். ஒரு தேக்கரண்டி ஆளி விதையில், 1.5 கிராமிற்கும் அதிகமான அமிலம் உள்ளது.
இதை தொடர்ந்து எடுத்துக் கொள்ளும்போது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் வருவதை தடுக்கிறது. ரத்த அழுத்தம் அதிகரிப்பதாலும், ரத்தத்தில் கொழுப்பு அதிகமாக இருப்பதாலும் மாரடைப்பு வரும்.
ஆளி விதையில் உள்ள, 'ஒமேகா-3', ரத்தக் குழாயில் கொட்ட கொழுப்பைக் கரைத்து, ரத்த ஓட்டம் சீராக இருக்க உதவி புரிகிறது. எனவே, இதய நோய் உண்டாகும் வாய்ப்பு தவிர்க்கப்படுகிறது.
இதய நோய்க்கு மற்றொரு காரணம் உடற்பருமன். ஆளி விதை சாப்பிட்டால், கெட்ட கொழுப்பு சேராது. மாரடைப்பு வராது. இதயத்திற்கு பாதுகாப்பு கவசம் போலவே செயல்பட்டு உயிர்காக்கும் மருந்தாக ஆளிவிதை பயன்படுகிறது.
- கே. சிகாமணி, சித்த மருத்துவர், திண்டுக்கல்

