PUBLISHED ON : ஜன 06, 2016

விக்ரமிற்கு வயது, 27. நல்ல சிவந்த நிறம். பெண்களை மிஞ்சும் அழகான கண்கள். அடர்ந்த புருவ முடி. இத்தனை சிறப்புகள் இருந்தும், அவரால் சந்தோஷமாக இருக்க முடியவில்லை. இத்தனைக்கும், லட்சத்தை தொடும் சம்பளம்; ஐ.டி., பூங்காவில் வேலை. அவருடைய அத்தனை நிம்மதியையும் சீர்குலைத்தது போல், சமீபத்தில் நிறைய சம்பவங்கள் நடந்து விட்டன.
விக்ரமிற்கு, தலையில் முன் மண்டையில் வழுக்கை. அதனால், திருமணத்திற்காக பார்த்த பெண்கள் யாருக்கும், அவரை பிடிக்கவில்லை; அவரின் முகத்திற்கு நேரே, மாப்பிள்ளை வயதானவராக தெரிகிறார் என்றனர். விக்ரமின் மனம் ஏங்கித்தான் போயிற்று, முடி இல்லையென்றால் வாழ்க்கை இல்லையா என்று. அப்போது தான், நண்பர் ஒருவரின் அறிவரைப்படி என்னை சந்தித்தார். விக்ரமின் தலைமுடியை பரிசோதித்தபோது, அவருக்கு மன அழுத்தத்தால் முடி கொட்ட ஆரம்பித்து, அது வழுக்கை வரை சென்றது தெரிந்தது.
உடல் ஆரோக்கியத்தைக் காட்டும் கருவியாக, தலைமுடி உள்ளது. பெரும்பாலும் முடி கொட்டுவதற்கான காரணங்கள், உடலில் வைட்டமின் பி, இ, இரும்புச் சத்து, கால்சியம் போன்றவை குறைவதாலேயே. நீரிழிவு நோய், மன அழுத்தம், பொடுகு தொல்லை, குளிக்க பயன்படுத்தும் தண்ணீர் போன்றவையோடு, சில மருந்துகளின் பக்க விளைவாலும், சிகிச்சைகள் காரணமாகவும் கூட தலை முடி உதிரலாம்.
விழும் முடிக்கு சமமாக, புதிய முடி முளைக்காமல், கொட்டுவது அதிகரித்துக் கொண்டே போகும் போதுதான் கவலை ஏற்படுகிறது. பொதுவாக, தலைமுடி உதிர்ந்த பின், அதற்காக சிகிச்சை செய்வதை விட, தலைமுடி கொட்டுவதற்கு முன்பே அதன் தன்மையை கவனித்தால், வழுக்கையில் இருந்து தப்பிக்கலாம்.
தலைமுடி திடீரென கொட்டாது; முதலில் மெலிதாகி, பின் பூனை முடி போல் பஞ்சாகி கொட்ட ஆரம்பிக்கும். அதை ஆரம்பத்திலேயே கவனித்தால், சரி செய்து விடலாம். பொடுகு, வைட்டமின் குறைபாடு, ஹார்மோன் சமநிலை போன்ற பிரச்னைகள் இருந்தால் குணப்படுத்தலாம். ஆனால், மரபியல் காரணங்களால் ஏற்படும் வழுக்கையை தடுக்க முடியாது.
விக்ரமுக்கு சிகிச்சை அளிக்க, அவரின் பின் மண்டையில், விதையுடன் இருக்கும் முடியை பிரித்தெடுத்து, முன் மண்டையில், முடியில்லாத இடத்தில் நட்டோம். தலையில் சுத்தமாக முடி இல்லாதவர்களுக்கு, தாடையிலிருந்தும் முடியை எடுத்து வைக்கலாம். இம்முறையில் தழும்பு ஏற்படாது; இதுவே பெரும்பாலும் பின்பற்றப்படுகிறது.
மற்றொரு முறை, பின் மண்டையில், முடி உள்ள தோலின் ஒரு பகுதியை எடுத்து, அதிலிருக்கும் தலைமுடியை பிரித்து, முடி வளராத பகுதியில் நடுவது. தோலை பிரித்து எடுத்த பகுதியை தைத்துவிடுவதால், தழும்பு ஏற்படும். இவ்வாறு முடி புதிதாக நடும்போது, விதையுடன் நட வேண்டும்; அப்போது தான் வளர ஆரம்பிக்கும். இதைப் பார்க்கும்போது, புதிதாக நட்ட முடி என்பதை கண்டுபிடிக்க முடியாது.
சில மாதங்களில், விக்ரம் தலையில் நட்ட முடிகள் அனைத்தும், துளிர்விட்டு வளர ஆரம்பித்துவிட்டன. சமீபத்தில் என்னை சந்திக்க வேண்டும் என, தொடர்பு கொண்டார். தன் திருமண அழைப்பிதழை என் கைகளில் திணித்து, 'உங்கள் தலைமையில் தான் என் திருமணம்; கட்டாயம் வர வேண்டும்' என்றார். விக்ரம் திருமணத்திற்கு கட்டாயம் பரிசு பொருளோடு செல்ல
வேண்டும்.
- வி.மு.ராஜ்மோகன்,
முகம் சீரமைப்பு நிபுணர், கீழ்ப்பாக்கம், சென்னை.
99404 93666
