PUBLISHED ON : டிச 16, 2015
இதய நிபுணராய் இருக்கும் எனக்கு தான், இதயம் எவ்வளவு பலவீனமானதாக இருக்கிறது. ஒவ்வொரு இதய நோயாளியை பார்க்கும் போதும், என்னை மறந்து, என் இதயத்தில் வலி ஏற்படும். அப்படி ஒரு நாள், என் இதயத்தில் வலியை ஏற்படுத்தியவர் தான் பவன்குமார்; அரசு போக்குவரத்து துறையில் ஓட்டுனர் பயிற்சியாளர்; வயது ௫௫.
அவருக்கு ரொம்ப நாளாகவே மூச்சுத்திணறல் இருந்தது; என்னை சந்தித்தார்; பரிசோதனை செய்தோம். அதில், இதயத்திற்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்த நாளத்தில், ௯௦ சதவீதம், மூன்று அடைப்புகள் இருந்தது தெரியவந்தது. அதை சரி செய்ய, கட்டாயம் பெரிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றேன். பவன், பயந்து போய், 'சரி வருகிறேன்' என்று சென்றவர், பின் பயத்தினால் வரவில்லை. அவரது பயமே, அவரை வாழ்வா, சாவா என்ற நிலைக்கு தள்ளிவிட்டது. ஒருநாள் பிரச்னை பெரியதாகவே, அவரது மனைவி மற்றும் பிள்ளைகள், அவரை என்னிடம் அழைத்து வந்தனர். அப்போதே, அவருக்கு இதயத்தின் செயல் திறன், ௧௦ சதவீதமாக குறைந்து விட்டது. ஏறக்குறைய இறந்து போகும் நிலை. அதில் சிகிச்சையை துவங்கும் முன்பே, மாரடைப்பு வந்து இதயம் நின்றுவிட்டது. ஒரு மருத்துவராக, நோயாளிகளை காப்பாற்ற நினைக்கும் என் கண்முன்னே, ஒருவர் இறந்து கொண்டிருப்பதை காண சகிக்கவில்லை.
எனவே அவரது குடும்பத்தாரை அழைத்துப் பேசினேன். 'அவர் இறந்து கொண்டிருக்கிறார். ஆனால் அறுவை சிகிச்சை செய்தால், ௫௦ சதவீதத்திற்கும் குறைவாகவே, பிழைக்கும் வாய்ப்பு இருக்கிறது' என்றேன். அவர்களும் அறுவை சிகிச்சைக்கு சம்மதித்தனர்.
உடனே இதயத் துடிப்பை மறுபடியும் வரவழைக்க, முதலுதவி கொடுத்தோம். இதயத் துடிப்பை சரிசெய்ய காலிலிருக்கும் ரத்த நாளம் வழியாக, மகா தமனிக்கு பலூன் ஒன்றை செலுத்தினோம்.
பின் போர்க்கால நடவடிக்கையாக, திறந்தநிலை அறுவை சிகிச்சையின் மூலம், மகா தமனியிலிருந்த மூன்று அடைப்புகளை சரி செய்தோம். பின் மூன்று நாட்கள் தீவிர கண்காணிப்பு பிரிவில் இருந்தார். இதயத் துடிப்பு சீரானதும், மகா தமனியிலிருந்த பலூன் நீக்கப்பட்டதோடு, அவரை செயற்கை சுவாசக் கருவியில் இருந்தும் அகற்றினோம். சீராக தன்னிச்சையாக சுவாசிக்க துவங்கினார்.
அதற்கு அடுத்த வாரம் வீட்டிற்கு சென்றார். ஆறு மாதம் கழித்து வேலைக்கும் செல்ல துவங்கி விட்டார். பவனின் நினைவு தற்போது வரக் காரணம், நாளை மறுநாள் அவருக்கு, ௫௬வது பிறந்த நாள். 'இன்று தங்களால் தான் உயிரோடு இருக்கிறேன். கட்டாயம் நீங்கள் வர வேண்டும் டாக்டர்' என்று, தழுதழுத்த குரலோடு கூறினார். ஒரு மருத்துவராக அவரின் இதய உணர்வுகள் எனக்கு புரிபட்டன. மருத்துவராக என் கடமையை நான் செய்தாலும், அதை திறம்பட செய்ய வைத்த சக்தி, இறைவன் என்று, மனதளவில் நினைத்துக் கொண்டேன். பவன் பிறந்த நாளுக்கு கட்டாயம் செல்ல வேண்டும்.
- எம்.எம்.யூசுப், நுண்துளை இதய அறுவை சிகிச்சை நிபுணர், சென்னை
82206 69911

