PUBLISHED ON : அக் 20, 2024

வழக்கமாக இந்த பருவத்தில் வரும் புளூ காய்ச்சல், தற்போதும் பரவுகிறது. ஆனால், கடந்த ஆண்டை ஒப்பிடும் போது, பாதிப்பின் எண்ணிக்கை, நோயின் தீவிரம் அதிகமாக உள்ளது. வழக்கமாக நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த முதியவர்கள், பிற இணை நோய்கள் உள்ளவர்களுக்கே புளூவின் தாக்கம் அதிகமாக இருக்கும். இம்முறை இளம் வயதினருக்கும் அதிக பாதிப்பை உண்டாக்குகிறது.
இதில், வைரஸ் பாதிப்பால் வரும் நிமோனியா சற்று அதிகம். பொதுவாக அக்டோபர் முதல் வாரத்தில் தான் புளூ காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருக்கும். இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலேயே அதிகமாகி விட்டது.
ஒரு முறை ஒருவருக்கு புளூ காய்ச்சல் வந்தால், குறைந்தபட்சம் அடுத்த மூன்று மாதங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும். இம்முறை வழக்கத்திற்கு மாறாக பாதித்த ஒருவருக்கே, தீவிர சிகிச்சை பிரிவில் சேரும் அளவிற்கு மீண்டும் பாதிப்பு வருகிறது.
புளூ வைரஸ், பாக்டீரியா என இரு கிருமிகளாலும் நிமோனியா வரலாம். இந்த பருவத்தில் புளூ வைரசால் காய்ச்சல் ஏற்பட்டு, அதன் தொடர்ச்சியாக தொண்டையில் சளி உருவாகி, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு நுரையீரல் வரை சென்று நிமோனியாவாக மாறுகிறது.
மருந்து எடுத்தும் இருமல் கட்டுப்படாமல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மேல் இருந்தால், நிமோனியா பாதிப்பு உள்ளதா என்று பரிசோதனை செய்ய வேண்டும்; 3வயதிற்கு உட்பட்ட பச்சிளம் குழந்தைகளுக்கு, 'நெபுலைசர்' தேவைப்படும் அளவிற்கு நிமோனியா பாதிப்பு உள்ளது. இருமல் தவிர, காய்ச்சல், உடல் வலி, தொண்டை கரகரப்பு போன்ற அறிகுறிகள் இருந்தாலும் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
ஆகஸ்ட் மாதத்தில் தடுப்பூசி போடாதவர்கள், இப்போதாவது போட்டுக் கொண்டால், ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் வரும் புளூ பாதிப்பில் இருந்து பாதுகாப்பு பெறலாம். தடுப்பூசி போட்ட மூன்று வரங்களுக்கு பின், நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும்.
டாக்டர் ஆர்.நந்தகுமார், பொதுநல மருத்துவர், எஸ்.ஆர்.எம்., குளோபல் மருத்துவமனை, சென்னை 96444 96444info@srmglobalhospitals.com