PUBLISHED ON : அக் 14, 2015

ஆறு மாதங்களுக்கு முன், துபாயில் இருந்து ஒரு நிறுவனத்தார், என்னை தொடர்பு கொண்டனர்.
எங்கள் நிறுவனத்தில், இந்தியாவை சேர்ந்த பிராங்கிளின் என்பவர் வேலை பார்த்தார். தொழிற்சாலையில் நடந்த ஒரு விபத்தில், அவரது கழுத்து நரம்பு துண்டாகி பாதிக்கப்பட்டு விட்டது. அதனால், அவருக்கு கை, கால்கள் செயல்படவில்லை; கோமா நிலையில் உள்ளார். எப்போதாவது சுயநினைவு வரும்.
அவரை துபாயில் வைத்து, எட்டு மாதங்கள் பராமரித்து விட்டோம். அவரது குடும்பத்தாருக்கு அவரின் நிலை சிறிதளவே தெரியும். தற்போது, அவரை துபாயில் பராமரிக்க முடியாத நிலை. எனவே, அவரை இந்தியாவிற்கு அனுப்புகிறோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
பிராங்கிளின் துபாயிலிருந்து விமானத்தில், செயற்கை சுவாச கருவியோடுதான் வந்து சேர்ந்தார். அவரைப் பற்றி தொலைபேசியில் கேட்டதை விட, நேரில் பார்த்த போது தான், நிலைமையின் தீவிரம் புரிந்தது.
காரணம், மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் சற்று தடைபட்டால் கூட, எந்நேரமும் அவர் இறக்க நேரிடலாம் என்பதால், தொடர்ந்து செயற்கை சுவாச கருவியிலேயே இருக்க வேண்டிய நிலை.
குணப்படுத்தக் கூடிய தீவிர சிகிச்சை பிரிவு அவருக்கு தேவைப்பட்டதால், 'ஆக்டிவ் ஐ.சி.யூ.,'வில் வைத்திருந்தோம்.
குடும்பத்தாரிடம் பிராங்கிளின் இறுதி கட்டத்தில் இருக்கிறார் என, எடுத்து சொல்லப்பட்டது. அவருக்கு, திருமணமாகி மனைவி, இரண்டு குழந்தைகள்.
இப்படியே, எங்கள் வலி நிவாரணம் மற்றும் ஆதரவு சிகிச்சையில், நான்கு மாதங்களை கடந்தார். ஒருநாள், தன் பிள்ளைகளை பார்த்த போது சுயநினைவு திரும்பியது. அப்போது, 'போதும்' என்று மட்டும் சொன்னார்; சில நாட்களில், அவரது உயிர் பிரிந்தது.
தன் குழந்தைகளை பார்க்கத் தான், உயிரை பிடித்துக் கொண்டிருந்தாரென்று தோன்றியது. நோயோடு போராடி தோற்றுவிட்டார்.
வலி நிவாரணம் மற்றும் ஆதரவு சிகிச்சைக்கு புற்றுநோய், பக்கவாதம், 'டிமென்ஷியா, அல்சைமர்' போன்ற நோயாளிகள் முற்றிய நிலையில் வருவர்.
அவர்களுக்கு இந்த சிகிச்சையின் மூலம், வலியும், வேதனையும் குறைக்கப்பட்டு, அவர்கள் வாழும் நாட்கள் வரை, வாழ்க்கைத் தரம் உயர்த்தப்படுகிறது. இதில், இதற்கு மேல் சிகிச்சையே கிடையாது என, கைவிடப்பட்டு வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம் என்ற நிலையில் உள்ள நோயாளிகளே வருகின்றனர்.
ஐ.சி.யூ.,வில் இருந்தால், உறவினர் கூட பார்க்க முடியாது. இங்கு, அப்படி இல்லை; உறவினர்கள் பார்க்கலாம்; பேசலாம்; நோயாளியின் அடுத்தகட்ட நிலையை அறிந்து கொள்ளலாம். நோயாளியை உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் இந்த சிகிச்சை அடுத்தகட்ட நிலைக்கு தயார்படுத்துகிறது.
சமீபத்தில், இந்திய மருத்துவக் கவுன்சில், இந்த மருத்துவ முறையை, ஒரு சிறப்பு மருத்துவ முறையாகவே அங்கீகரித்துள்ளது.
இந்த முறையில் நோயாளியின் வியாதிக்கு மட்டுமின்றி, அவரின் உணர்வுகள் மதிக்கப்படுகின்றன. உலகில் நோய் என்ற வார்த்தையே இருக்கக் கூடாது தான். ஆனால், நிதர்சனம் அதுவல்ல எனும்போது, என் மனம் வலிக்கத்தான் செய்கிறது.
- எஸ்.ரிபப்ளிக்கா ஸ்ரீதர்,
வலி நிவாரணம் மற்றும் ஆதரவு சிகிச்சை நிபுணர் தி.நகர், சென்னை.
99404 93666

