
குழந்தை பருவத்தை கடந்து, பருவ வயதில் அடியெடுத்து வைக்கும் காலத்தை, வளர் இளம்பருவக் காலம் அல்லது பதின்பருவக் காலம் என்கிறோம். பொதுவாக, 10 முதல், 19 வயது வரை இந்தக் காலகட்டம் இருக்கும். பெண்களுக்கு, பெரும்பாலும், 13 முதல், 15 வயதிற்குள் பருவமெய்துதல் நிகழ்கிறது.
அப்போது பெண்ணின் உடல், உயரமாகவும், பக்கவாட்டிலும் வளரத் துவங்கும். மார்பகங்கள் பெரிதாகத் துவங்கும். மாதாந்திர ரத்தப் போக்கு ஏற்படும். இந்த அனைத்து மாற்றங்களும் இயற்கையானவையே.
மாதாந்திர ரத்தப்போக்கை, இயல்பான வாழ்க்கையின் ஓர் அங்கமாகக் கருதும் வழக்கம், நம் சமூகத்தில் இல்லை. அதனால் தான், அதைத் தீட்டெனக் கருதுகிறோம். உண்மையில், குழந்தைப்பேற்றுக்கு பெண்ணைத் தயார் செய்யும் படிநிலையின் ஒரு பகுதியே, மாதவிலக்கு என்பது.
'பிட்யூட்டரி' என்னும் தலைமை நாளமில்லாச் சுரப்பி மற்றும் இனப்பெருக்கச் சுரப்பிகள் சுரக்கும், 'ஹார்மோன்'கள் தூண்டப்படுவதால், இந்த மாற்றங்கள் நிகழ்கின்றன. 'ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்' மிக முக்கிய மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இது மனநிலையையும் பாதிக்கிறது.
உளவியல் மாற்றங்களை விட, உடலியல் மாற்றங்கள் முன்பே நிகழத் துவங்கும். ஒரு பெண் மனரீதியாக தயாராக இல்லாவிட்டாலும், உடல் தயாராகிறது.
பருவம் வந்ததும் ஒரு சிறுமியின் நடத்தையில், உடல்மொழியில் மாற்றங்கள் தென்படுமானால் அது இயல்பான ஒன்றுதான். சிலருக்கு, 8 அல்லது 9 வயதிலேயே மார்பகம் வளர்ச்சி அடையத் துவங்கிவிடும்.
குழந்தை பிறந்தால் பாலூட்டுவதற்காக, 'ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்' தான் திசுக்களை தூண்டி, மார்பகத்தைப் பெரிதாக வளர வைக்கிறது. முதலில் மார்பகக் காம்பு வளரத் துவங்கும். அதன் பின் காம்பைச் சுற்றி கருமையான வட்ட வடிவப் பகுதியும், அதன் எண்ணெய்ச் சுரப்பிகளும் வளர்கின்றன. மார்பகங்கள் இரண்டும் ஒரே அளவில் இருப்பதில்லை. இரண்டுக்கும் வேறுபாடு இருப்பதும் இயற்கையே. அதேபோல் மார்புக் காம்புகளும் ஒரே அளவில், வடிவில் இருக்காது.
க. நித்யமாலா,
மகளிர் நல மருத்துவர்.
சென்னை
dr.nithya2015@gmail.com

