கர்ப்பப்பை வாய் கேன்சரை ஒழிக்கும் 90 - 70 - 90 உபாயம்!
கர்ப்பப்பை வாய் கேன்சரை ஒழிக்கும் 90 - 70 - 90 உபாயம்!
PUBLISHED ON : ஜூலை 16, 2023

'ஹியூமன் பேப்பிலோமா' என்ற வைரஸ் தொற்று ஏற்படாமல், கர்ப்பப்பை வாய் கேன்சர் வருவதற்கு வாய்ப்பே கிடையாது. இந்த வைரஸ் தொற்றுக்கு தடுப்பூசி உள்ளது. இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டவுடன் கேன்சராக மாறும் என்பதில்லை. 20 - 30 ஆண்டுகள் எந்த அறிகுறியும் வெளிப்படுத்தாமல் உடலுக்கு உள்ளேயே இருக்கும். அதன்பின் தான் கர்ப்பப்பை வாய் கேன்சராக மாறும்.
இந்த இடைப்பட்ட ஆண்டுகளில், 'ஸ்கிரீனிங்' எனப்படும் தொற்று இருக்கிறதா என்பதை உறுதி செய்ய, பரிசோதனை செய்தால் யாருக்கு தொற்று இருக்கிறது என்பதை எளிதாக கண்டுபிடிக்கலாம்.
இந்த ஸ்கிரீனிங் பரிசோதனைக்கு, டி.என்.ஏ., மரபணு சோதனை வெளிநாடுகளில் தேசிய ஸ்கிரீனிங் திட்டத்தில் உள்ளது. அதனால் தான், கர்ப்பப்பை வாய் கேன்சர் பாதிப்பு வெளிநாடுகளில் மிகவும் குறைவு.
சர்வதேச தரம் வாய்ந்த மரபணு பரிசோதனை இதுவரையிலும் நம் நாட்டில் இல்லை. முதல் முறையாக, சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் பன்னாட்டு சமூக பொறுப்பு நிதி - சி.எஸ்.ஆர்., உதவியால், கர்ப்பப்பை வாய் மரபணு பரிசோதனை ஸ்கிரீனிங் கருவியை வாங்கியுள்ளோம். மணலி, திருவொற்றியூர், துாத்துக்குடி ஆகிய பகுதிகளில், 10,000 பெண்களிடம் 'மாதிரி' எடுத்து பரிசோதனை செய்ததன் அடிப்படையில் வெளியான ஆய்வுக் கட்டுரை, 'ஜர்னல் ஆப் மெடிக்கல் வைராலஜி' என்ற சர்வதேச மருத்துவ இதழில் வெளியானது. இது, மிகப்பெரிய அங்கீகாரம்.
காரணம், சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் அதிகம் வாழும் நம் நாட்டில், சர்வதேச தரத்தில் ஸ்கிரீனிங் செய்ய முடியுமா என்ற சந்தேகம் அனைவருக்கும் இருக்கிறது. இனிமேல், சர்வதேச கருத்தரங்குகளில் கர்ப்பப்பை வாய் கேன்சர் பரிசோதனையை இந்த முறையில் செய்கிறோம் என்று சொன்னால், யாராலும் மறுக்கவே முடியாது. அந்த அளவுக்கு இது தரமான, துல்லியமான முடிவுகளை தரக்கூடியது.
சாம்பிள் எடுத்த பின்...
கருவி வாயிலாக செய்யும் மரபணு சோதனை இது. இதில், கர்ப்பப்பை வாயிலிருந்து செல்களை எடுத்து, அதற்கென்று இருக்கும் திரவத்தில் போட்டு, இதிலிருந்து மரபணுவை எடுத்து, வைரஸ் இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். பரிசோதனை முடிவுகளில், வைரஸ் இருப்பது தெரிந்தால், உடனடியாக சிகிச்சை தேவையா என்றால் இல்லை. காரணம், இந்த வைரசில் நிறைய வகைகள் உள்ளன. இதில், 16, 18 என்ற இரு வகைகள் மட்டுமே கேன்சரை உண்டாக்கக்கூடியவை. இவை இருந்தால், அடுத்த நிலை பரிசோதனையான 'கால்போஸ்கோபி' பரிசோதனை செய்ய வேண்டும். இதில் வைரஸ் கேன்சராக மாறியுள்ளதா, இல்லையா என்பது தெரியும். முடிவுக்கு ஏற்ப டாக்டர் ஆலோசனை தருவார்.
இந்த முறையில், 100 பேரை ஸ்கிரீனிங் செய்தால், 5.7 சதவீதம் தான் இருக்கிறது என்பது தெரிந்தது. மீதி 95 பேருக்கு கேன்சர் வரும் வாய்ப்பு இல்லை. அதனால், வைரஸ் தொற்று இருந்தாலே கேன்சர் வரும் என்று திரும்ப திரும்ப 'பேப் ஸ்மியர்' பரிசோதனை செய்வதோ, வேறு சோதனைகளோ தேவையில்லை. இது தான் மரபணு ஸ்கிரீனிங் செய்வதன் நன்மை.
தற்போது நடைமுறையில் உள்ள பேப் ஸ்மியர் சோதனை, கேன்சர் வரும் வாய்ப்புள்ள பெண்களுக்கு, 20 - 40 வயதிற்குள், மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, 15 முறை செய்ய வேண்டும். மரபணு முறை சோதனையை இரண்டு தடவை செய்தால் போதும்.
கர்ப்பப்பை வாய் கேன்சரை முற்றிலும் ஒழிகக, '90 - 70 - 90' என்ற உபாயத்தை உலக சுகாதார மையம் வெளியிட்டு உள்ளது. அதன்படி, 9 - 12 வயது வரை உள்ள பெண் குழந்தைகளுக்கு கர்ப்பப்பை வாய் கேன்சர் தடுப்பூசி போட வேண்டும். 30 - 60 வயது வரை உள்ள, 70 சதவீத பெண்களுக்கு மரபணு சோதனை செய்ய வேண்டும். இவர்களில் கேன்சர் வரும் வாய்ப்புள்ளவர்களில் 90 சதவீதம் பேருக்கு சிகிச்சை தர வேண்டும். இது தான் 90 - 70 - 90 உபாயம். இதைப் பின்பற்றினால், 2030ம் ஆண்டில் இந்த கேன்சரை உலகம் முழுதிலும் முற்றிலும் ஒழித்து விடலாம்.
டாக்டர் ஆர்.விஜயலட்சுமி,
தலைவர், கேன்சர் தடுப்பு துறை,
அடையாறு கேன்சர் இன்ஸ்டிடியூட், சென்னை.rvijiciwia@gmail.com, r.vijayalakshmi@cancerimstitutewia.org

