PUBLISHED ON : ஜூலை 16, 2023

மரபணு குறைபாட்டால் ஏற்படுவது நெளிமுதுகு எனும் 'ஸ்கோலியோசிஸ்' பிரச்னை. ஆண் குழந்தைகைளை விட, பெண் குழந்தைகள் இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். நேராக இருக்க வேண்டிய முதுகு தண்டு, வளைந்து நெளிந்து விடும். இதனால், தோள்கள், இடுப்பு பகுதிகள் சமமற்று, மேல், கீழாக இறங்கி விடும். முதுகின் ஒருபுறத்தில் முகடு தோன்றி, தோற்ற உருக்குலைவும் ஏற்படும். இதனால், குழந்தைகள் நேராக நிமிர்ந்து நிற்க முடியாமல், நுரையீரல் பாதிப்பும் சேர்ந்து மூச்சு விடமுடியாமல் தவிப்பர்; நரம்பு குறைபாடுகளும் ஏற்படலாம்.
பிரச்னை ஆரம்ப நிலையில் இருந்தால், உடற்பயிற்சி, வளைந்த முதுகு தண்டை நேராக்க உதவும் 'பிரேசிங்' சிகிச்சைகளால் குணப்படுத்தலாம். தீவிரமானால், அறுவை சிகிச்சை ஒன்று தான் வழி. இது மிகவும் சிக்கலான முறை. நன்கு தேர்ச்சி பெற்ற மருத்துவக் குழுவினரால் மட்டுமே செய்ய முடியும்.
நம் நாட்டில் ஒரு சில மையங்களில் மட்டுமே, இதற்கான நிபுணர் குழு உள்ளது. அதில் ஒன்று, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை.
இங்கு, என்னுடன், டாக்டர்கள் நல்லி ரா.யுவராஜ், க.தணிகைமணி, ஜுவாகர் ஜில் ஆகியோர் அடங்கிய குழுவினர், கடந்த 10 ஆண்டுகளில், 142 பேருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்துள்ளோம். முதலமைச்சர் மருத்துவக் காப்பீடு திட்டமும், சென்னை ஐ.ஐ.டி.,யின் தொழில்நுட்ப குழுவினரின் '3டி பிரின்டிங்' தொழில்நுட்ப உதவியும் பெருமளவில் துணை செய்கின்றன.
டாக்டர் அஜூ போஸ்கோ,
மூத்த உதவி பேராசிரியர்,
முதுகு தண்டு அறுவை சிகிச்சை பிரிவு,
ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை, சென்னை.

