PUBLISHED ON : ஜூலை 23, 2023

உடல், மனம் இரண்டும் களைத்துப் போனால் மட்டுமே துாக்கம் வரும். குறிப்பாக மனது, 'இனி என்னால் எதுவும் செய்ய முடியாது; ஓய்வு தேவை' என்று நினைக்க வேண்டும். அப்போது தான் துாக்கம் வரும். துாங்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து படுத்தால் துாக்கம் வராது.
உணவு முறையில் மாற்றம், வாழ்க்கை முறையில் மாற்றம், இரண்டும் பலன் தராத போது மருந்துகள் பயன்படலாம்.
நீர்ச்சத்து இல்லாத காய்ந்த ரஸ்கை காபியில் தொட்டு சாப்பிடும் பழக்கம், வயதானவர்களிடம் அதிகம் உள்ளது. இது, துாக்கத்தை பாதிக்கும்; மலச்சிக்கலை ஏற்படுத்தும். இரவு உணவுக்கு பின், அரை மணி நேரம் கழித்து, கொழுப்பு சத்துள்ள பாலுடன் கற்கண்டு, கசகசா சேர்த்து குடிக்கலாம். கத்திரிக்காய், பூசணிக்காய் இரண்டும் நல்ல துாக்கத்திற்கு உதவக்கூடியவை.
குளியலைப் போன்று மனதை ரிலாக்ஸ் செய்யும் விஷயம் வேறு எதுவும் கிடையாது. இரவு உணவுக்கு 30 நிமிடங்களுக்கு முன் குளிப்பது, மனதிற்கு அமைதியை தரும்.
மாலை நேரத்தில் உச்சந்தலை, காதுகளுக்கு பின்புறம், குதிகாலில் நல்லெண்ணெய் தடவலாம். செரிமான மண்டலத்தில் உள்ள அக்னியை சரி செய்வது துாக்கத்திற்கு முக்கியம். அதற்கு குளிர்ச்சியை தரும் உணவுகளான பொன்னாங்கண்ணி கீரை, வாழைப்பழம், வாழைப்பூ சேர்த்துக் கொள்ளலாம். பசிக்கு ஏற்றாற்போல போதுமான அளவு, எளிதில் செரிமானமாகும் உணவு சாப்பிட வேண்டும். குறைவாக சாப்பிட்டு, பசியோடு படுத்தாலும் துாக்கம் வராது.
டாக்டர் எம்.ஹரிகிருஷ்ணன்
ஆயுர்வேத மருத்துவர்,
சென்னை
89399 33150

