PUBLISHED ON : அக் 06, 2024

இருபது ஆண்டுகளுக்கு முன், மருத்துவப் பயிற்சியை ஆரம்பித்த போது, 60 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் இதயக் கோளாறுகளுடன் வருவதைப் பார்த்திருக்கிறேன்.
காரணம், 'மெனோபாஸ்' எனப்படும் மாதவிடாய் முடிந்த பின், பெண்களின் இதயத்தை இயற்கையாக பாதுகாக்கும் 'ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்' சுரப்பு வெகுவாகக் குறைந்து விடுவதால், பிரச்னை வந்தது.
இன்று 30 வயது, அதற்கு கீழ் உள்ள பெண்களுக்கு பலவித இதயக் கோளாறுகள், குறிப்பாக ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுகிறது. இதற்கான காரணங்களில் மன அழுத்தம் பிரதானமானது. முந்தைய தலைமுறை பெண்களை போன்று வீட்டை மட்டும் பராமரிக்காமல், வீடு, அலுவலகம் என்று இரட்டை பொறுப்புகளை சுமக்க வேண்டி உள்ளது. இது தவிர, சர்க்கரை கோளாறு, உயர் ரத்த அழுத்தம் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், உடலுழைப்பு இல்லாததும் சேர்ந்து கொண்டன.
நீண்ட நாட்கள் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை கோளாறு இருந்தால், ரத்தக் குழாய்களில் அழற்சி ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். இதனால் ரத்தக் குழாய்கள் சுருங்கும்.
இயற்கையிலேயே ஆண்களை ஒப்பிட்டால், பெண்களின் ரத்தக் குழாய்கள் அளவில் சிறியதாக இருக்கும்.
பொதுவாக ஹார்ட் அட்டாக் அறிகுறிகளாக, நடு மார்பில் ஏற்படும் வலி, மெதுவாக கைகளுக்கு பரவும். அதீத வியர்வை, சுவாசிப்பதில் சிரமம் இருக்கும். இந்த வழக்கமான அறிகுறிகள் பெண்களுக்கு இருக்காது.
மாறாக, வயிற்று வலி, கழுத்தில், தாடைகளில் வலி, அடிவயிற்றில் வலி, சுவாசிப்பதில் சற்று சிரமம், வாந்தி, குமட்டல் இருக்கும். இளம் பெண்கள் நடைபயிற்சி, உடற்பயிற்சி செய்யும் போது, இவை போன்ற அறிகுறிகள் தெரிந்தால், செரிமானக் கோளாறு என்று நினைத்து அலட்சியம் செய்கின்றனர்.
பல நாட்களாக வலி இருக்கிறது. ஆன்டாசிட் மாத்திரை சாப்பிட்டோம்; சரியாகவில்லை என்று சொல்வர். ஆஞ்சியோகிராம் செய்தால் குறைந்தது இரண்டு, மூன்று அடைப்புகள் 'பிளாக்' இருக்கும். ஆஞ்சியோபிளாஸ்டி செய்து 'ஸ்டென்ட்' பொருத்துவோம்.
'ஸ்ட்ரெஸ் கார்டியாமயோபதி'
எதையும் உணர்வுபூர்வமாக பார்ப்பது பெண்களின் இயல்பு. வீட்டில், அலுவலகத்தில், தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு அதிகமாக உணர்ச்சிவசப்படுவதால், மன அழுத்தம் அதிகமாகி, பயம், பட படப்பை தொடர்ந்து, எதிர்பாராத விதமாக மார்பு வலி, சுவாசிப்பதில் சிரமம், இதயத்தின் 'பம்ப்' செய்யும் திறன் குறைகிறது. இதை, 'புரோக்கன் ஹார்ட் சிண்ட்ரோம்' அதாவது உடைந்த இதயம் என்று சொல்வோம். சரியான நேரத்தில் சிகிச்சை செய்தால், இதை முற்றிலும் குணப்படுத்த முடியும்.
எப்படி அறிவது?
வழக்கத்திற்கு மாறாக மார்பு பகுதியில் இறுக்கம், வயிற்றில் அசவுகரியமாக உணர்வதை அலட்சியம் செய்யக்கூடாது. வாயு தொல்லையாக இருந்தால் பெரிதாக பாதிப்பு இருக்காது. தாமதமாக மருந்து எடுத்தால் குணமாகிவிடும். இதயக் கோளாறாக இருக்கும் பட்சத்தில், தாமதமான சிகிச்சை, தசைகளில் செயலிழப்பு, இதய மின் அலைகளில் மாற்றம் ஏற்பட்டு, உயிருக்கே ஆபத்தாக முடியலாம்.
'பிசிஓடி' எனப்படும் நீர்க்கட்டி, கர்ப்பத்தின் போது ஏற்படும் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை கோளாறு போன்றவையும் எதிர்காலத்தில ரத்த நாளங்களில் பிரச்னைகளை ஏற்படுத்தக் கூடியவை என்று சமீபத்தில் தெரிய வந்துள்ளது.
டாக்டர் ராஜேஷ்வரி நாயக், இதய சிகிச்சை சிறப்பு மருத்துவர், அப்பல்லோ மருத்துவமனை, சென்னை044 2829 3333 rajeshwari_n@apollohospitals.com