PUBLISHED ON : அக் 06, 2024

எலும்பு தேய்மானம் பற்றி தெரிந்திருக்கும். தசை இழப்பு- 'சார்க்கோபீனியா' பற்றியும் தெரிய வேண்டும். வயது ஏற ஏற தசை இழப்பு ஏற்படும். 60 வயதில், 30 வயதில் இருந்த தசையின் அளவும்; செயல் திறனும் பாதியாக குறையும் வாய்ப்பு உள்ளது. இதனால், நடையின் வேகம் குறையும்; கைகளை ஊன்றாமல் எழுந்திருக்க முடியாது; விரல்களின் பிடிமானம் தளர்ந்து போகலாம்.
எலும்பு, தசை, கொழுப்பு மூன்றும் ஒன்றுக் கொன்று தொடர்புடையவை. தசை குறையும் போது, அந்த இடத்தில் இழந்த தசைக்கு பதில் கொழுப்பு சேர்ந்து, வேலை செய்யும் திறன் பாதிக்கப்படுகிறது; சமநிலை அதாவது, 'பேலன்ஸ்' செய்ய முடியாமல் தடுமாறி விழும் வாய்ப்பும், எலும்பு முறிவு ஏற்படும் அபாயமும் உண்டு.
வேகமாக நடக்க எலும்பு மட்டுமல்லாது தசையும் வலுவாக இருக்க வேண்டியது அவசியம். சின்ன சின்ன தசைகளில் கூட வலிமை குறைவதால், சட்டை பட்டன் போடுவது, கரண்டி பிடிப்பது, துணி பிழிவது போன்ற தினசரி வேலைகளையும் செய்வதற்கு சிரமங்கள் ஏற்படும்.
வயோதிகம் தவிர, புகை பிடித்தல், மது பழக்கம், புற்றுநோய் பாதிப்பு, உடல் பருமன், உடற்பயிற்சியின்மை, சில மருந்துகளை நாள்பட உபயோகிப்பது, வைட்டமின் டி, புரதச்சத்து குறைபாடு ஆகியவையும் காரணிகளாக கூறப்படுகின்றன.
வயது ஏற ஏற சோம்பேறித்தனமாக இருப்பதால், மேலும் தசை அளவும், செயல் திறனும் குறையும். எதையுமே பயன்படுத்தாமல் இருந்தால் அதை இழக்க நேரிடும். தசை இழப்பை முற்றிலும் தவிர்கக் முடியாது. சுறுசுறுப்பாக இருந்தால் அதன் தீவிரத்தைக் குறைக்கலாம். நடைபயிற்சி, ஜாகிங், படி ஏறுதல், டான்ஸ், நீச்சல் பயிற்சி செய்வததோடு, தினசரி உணவில் 40 -- 50 கிராம் புரதம், வைட்டமின் டி மாத்திரை எடுப்பதோடு, சூரிய ஒளியில் நடைபயிற்சியும் முக்கியம்.
பேராசிரியர் டாக்டர் ரேவதி ஜானகி ராம்,
மகப்பேறு சிறப்பு மருத்துவர், மதுரை
94430 40355 dr.revathyjanakiram@gmail.com