PUBLISHED ON : ஜன 20, 2016

கடந்த, 2006ம் ஆண்டு, ஏப்ரல் மாதத்தில் ஒருநாள், நான் பகுதிநேர மருத்துவராக வேலை பார்த்த மருத்துவமனைக்கு, ரூபியை அவரது மகள் அழைத்து வந்திருந்தார். 'அம்மாவிற்கு, உயர் ரத்த அழுத்தம் உள்ளது' என்றார். பரிசோதித்ததில், உயர் ரத்த அழுத்தம், 200 முதல், 110 வரை இருந்தது; இது மிகவும் அதிகம். இப்படியே தொடர்ந்தால், திடீரென பக்கவாதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதை உணர்ந்து, உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பதற்கான மருந்தை, அவரது நாக்கின் அடியில் வைத்தேன். சிறிது நேரத்தில், இயல்பு நிலைக்கு வந்துவிட்டார்.
இருசக்கர வாகனத்தில், தன் தாயை சேர்த்து கட்டிக்கொண்டு, நள்ளிரவில் மருத்துவமனைக்கு வந்து சிரமத்தை சந்திக்கிறாரே என, அன்று ரூபியை நினைத்து பரிதாபப்பட்டேன். பிறகு வந்த நாட்களில், இதுவே வாடிக்கையாகிப் போனது. வாரத்தில் இரண்டு நாட்கள், நள்ளிரவில் உயர் ரத்த அழுத்தத்தோடு ரூபி வருவார். மருந்துகள் ஏற்றியதும் சீராகி, வீட்டுக்கு செல்வார். ஒருநாள், 'உங்களை பரிசோதிக்க வேண்டும்; நாளைக்கு காலையிலேயே வந்து விடுங்கள்' என்று கூறிவிட்டேன். அடுத்த நாள், எங்கள் மூத்த மருத்துவரிடம் ரூபியின் பிரச்னையை கூறினேன்.
அவரும் சில பரிசோதனைகளை செய்து, பின் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் எடுக்க சொன்னார். அதன் முடிவில், ரூபிக்கு கழுத்து எலும்பு தேய்மானம் உள்ளது தெரிந்தது. இதை, 'செர்விகல் ஸ்பான்டிலைடிஸ்' என்பர். அதற்கான சிகிச்சையாக, தினசரி மருத்துவமனைக்கு வந்து, அரை மணி நேரம், கழுத்துக்கும், காலுக்கும், 'பிசியோதெரபியில் ட்ராக் ஷன்' வைக்கச் சொன்னோம். அவருக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்பட, 'செர்விகல் ஸ்பான்டிலைடிஸ்' கூட ஒரு வகையில் காரணம். இப்பிரச்னை உள்ளவர்கள், கழுத்திற்கு கண்டிப்பாக பெல்ட் அணிந்துகொள்ள வேண்டும். தொலை தூர பயணங்கள் மேற்கொள்ள கூடாது. அதுமட்டுமல்ல, தலையணை இல்லாமல் தான் உறங்க வேண்டும்.உயர் ரத்த அழுத்தத்திற்கும் சேர்த்து மருந்துகள் எடுத்துக் கொள்வதோடு, கழுத்திற்கு பெல்ட் அணிந்து கொண்டார் ரூபி. பல ஆண்டுகள் கழித்து, என் மனைவியோடு நடைப்பயிற்சி சென்றபோது, ஒரு பூங்காவில், ரூபியை சமீபத்தில் சந்தித்தேன். கழுத்தில் பெல்ட் இல்லை. ஆச்சரியத்துடன், 'கழுத்து வலி பரவாயில்லையா' என்றேன். ரூபி அதற்கு, 'இறைவன் எனக்கொரு நல்ல மருந்தை கொடுத்துள்ளார்; அவன் பெயர் ப்ரின்ஸ்; என் பேரன்' என்றார். அவன் வந்த நேரம், அவரின் கழுத்து வலி காணாமல் போய்விட்டதாகச் சொன்னார்.'என் கவனம் எல்லாம், என் பேரன் மீதே; கழுத்து வலி இப்போது இல்லை' என்றார். சட்டென எனக்கு தோன்றியது, மருத்துவமும், வலிகளும் சில வேளைகளில், இன்பமான உறவுகளால் மறைந்து போகிறது என்று; அவர் வார்த்தையில் பொய்
இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. சில வேளைகளில், சந்தோஷங்கள் கூட நோய்களை விரட்டிவிடும்.
- நா.வெங்கட்,
பொது மருத்துவர், சென்னை 99529 81615

