PUBLISHED ON : டிச 03, 2014

கடந்த 2010 ஜூன் மாதம் 30ம் தேதி, தன் 18 வயது மகன் கண்ணதாசனை, என்னிடம் தூக்கிக் கொண்டு வந்திருந்தார் பிரதிபா! பதினைந்து வருடங்களாக கண் பார்வை இல்லாத, காதுகள் கேட்காத, வாய் பேச முடியாத, கை, கால்கள் செயல்படாத கண்ணதாசனுக்கு, பிரதிபா அம்மா மட்டுமல்ல... கடவுளும் கூட!
மூன்று வயதுவரை கண்ணதாசன் நன்றாகத்தான் இருந்திருக்கிறான். ஒருநாள் திடீரென காய்ச்சல். சாதாரண காய்ச்சல் என்று நினைத்திருந்த வேளையில், கண்ணதாசனின் பார்வை பறிபோயிருக்கிறது. தொடர்ந்து, கேட்கும் திறனை அவன் இழந்திருக்கிறான். கொஞ்சம், கொஞ்சமாக, மற்ற உறுப்புகளும் செயல்பாடுகளை நிறுத்திக் கொண்டு விட்டன.
'மூணு வயசுல படுத்தவன் டாக்டர் என் புள்ள! இப்போ, மறுபடியும் காய்ச்சல் விட்டு விட்டு வருது. அவன் உயிருக்கு ஏதாவது...?' பதறினார் பிரதிபா. 15 வருடங்களாக அந்த தாயுள்ளம் தவித்திருப்பதை, அந்த கண்ணீரில் நான் உணர்ந்து கொண்டேன். மூன்று வயதில், கண்ணதாசனை தாக்கியது 'மூளைக்காய்ச்சல்' என்றும் புரிந்து கொண்டேன். அன்று, அவனுக்கு சிகிச்சையளித்து அனுப்பி வைத்தேன்.
இன்று, மீண்டும் பிரதிபாவை சந்தித்தேன். 'மகன் இறந்துவிட்டான் டாக்டர்...' என்று கதறினார். அவருக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்றே எனக்குத் தெரியவில்லை.
சமீபகாலமாய், மூளைக்காய்ச்சல் மரணங்கள் சத்தமில்லாமல் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. குழந்தைகள் அழுது கொண்டே இருப்பது, தொடர்ந்து காய்ச்சல், அல்லது விட்டுவிட்டு காய்ச்சல், விளையாட்டில் ஆர்வமின்மை அனைத்தும் இந்நோய்க்கான அறிகுறி. இதை கவனிக்கத்தவறி, நோய் தீவிரமாகிவிட்டால், சிகிச்சை அளித்தும் பலன் இருக்காது. ஒருவேளை, உயிர் பிழைத்தாலும் கை, கால்கள் செயலிழத்தல், பார்வை பறி போதல் உள்ளிட்ட பாதிப்புகள் நிச்சயம்.
வைரஸ், பாக்டீரியாக்கள்தான் மூளைக்காய்ச்சலுக்கு காரணம்! சுத்தமான குடிநீர், சத்தான உணவு, சுத்தமான சுற்றுச்சூழல் இந்நோயை தடுக்கும். இந்நோயை தடுக்க, குழந்தை பருவத்தில் போடப்படும் தடுப்பூசி வாழ்நாள் முழுக்க போதுமானது அல்ல! மூளைக்காய்ச்சல் பரவும் போதெல்லாம் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும்.
இல்லையென்றால், பிரதிபா போல், வாழ்நாள் முழுக்க இதயத்தில் வலி சுமக்க நேரிடும். பெற்றோர்கள் இனியாவது விழித்துக் கொள்ள வேண்டும் என்பதே என் ஆசை.
- டாக்டர் விசாகம்
குழந்தைகள் நல மருத்துவர்

