PUBLISHED ON : டிச 03, 2014

1. பித்தப்பை கற்கள் உருவாவது எப்படி?
பித்தப்பையில் சேமிக்கப்படும் ஜீரணநீர், இரைப்பைக்கு செல்லாமல் அங்கேயே தங்கிவிடுவதால் கற்கள் உருவாகும்.
2. பித்தப்பை கற்கள் உண்டாக காரணம்?
உடல் பருமன், கருத்தடை மாத்திரைகள் அதிகம் உபயோகிப்பது, கொழுப்பு நிறைந்த உணவு, ரத்த சிவப்பணுக்கள் விரைவாக உடைதல், பித்த நீர்ப்பையில் பாக்டீரியா அல்லது குடல் புழுக்கள் சேர்தல்... இவையெல்லாம் காரணங்கள்!
3. வாயுத்தொல்லைக்கு பித்தப்பை கற்கள் வழிவகுக்குமா?
பித்தப்பையில் கற்கள் இருந்தால் வாயுத்தொல்லை ஏற்படும். உணவு விழுங்கும்போது, உணவுக்குழாயில் ஒருவித எரிச்சல் உண்டாகும். உணவு விழுங்குவதில் சிரமம் இருக்கும். உணவு செரிமானப் பிரச்னைகள் வரும்.
4. பித்தப்பையில் கற்கள் இருப்பதற்கான அறிகுறிகள்?
வயிற்று வலி, உடல் எடை குறைவு, வாந்தி, காய்ச்சல், மஞ்சள்காமாலை, பசியின்மை போன்றவை அறிகுறிகள். இக்கற்களால் வலி ஏற்படும் முன்பு, உணவு உண்டதும் வயிறு கனமாகவும், உப்பியும் இருக்கும். ஏப்பம் விடுவதாலும், வாந்தி எடுப்பதாலும் இப்பிரச்னை தற்காலிகமாக தீரும்.
5. பித்தப்பை கற்கள் உருவாக கொழுப்பு காரணமாகுமா?
90 சதவீத கற்கள் 'கொலஸ்ட்ரால்' மூலமே உருவாகின்றன. மீதி 10 சதவீத கற்களின் உருவாக்கத்திற்கு 'பிலிருபின்' என்கிற நிறமிகள் காரணமாகின்றன.
6. இப்பிரச்னை யாருக்கெல்லாம் வரும்?
10 சதவீதம் ஆண்களுக்கு பாதிப்பு! அதிக குழந்தைபேறும், உடல் பருமனும், அதிக உடல் உழைப்பு இல்லாமையும் 'பித்தப்பை கல்' பிரச்னையை, பெண்களுக்கு அழைத்து வரும்.
7. மது அருந்தும் பழக்கம் பித்தப்பை கற்களை உருவாக்குமா?
கண்டிப்பாக! மேலும், மதுவில் உள்ள ரசாயனங்கள் பித்தப்பையில் சேர்ந்து, அங்கிருக்கும் சிறுகற்களை, பெரியதாக மாற்றவும் வாய்ப்புண்டு.
8. அறுவை சிகிச்சை மட்டும்தான் 'பித்தப்பை கல்' பிரச்னைக்குத் தீர்வா?
பெரும்பாலும் அப்படித்தான்! இதனை மருந்தினால் குணப்படுத்த முடியும் என்றாலும், 100ல் 10 பேருக்கே இது சாத்தியப்படுகிறது. தற்போது 'லேப்ராஸ்கோபி' மூலம், இந்த அறுவை சிகிச்சை எளிமையாகி இருக்கிறது.
9. 'பித்தப்பையை எடுத்தாலும் பிரச்னை இருக்காது' என்பது உண்மையா?
நிஜம்தான்! பித்தப்பையை எடுத்தாலும் பிரச்னை இருக்காது. காரணம் ஜீரணமண்டலத்திற்கு தேவையான ஜீரண நீரை மற்ற துணை உறுப்புகள் உற்பத்தி செய்துவிடும்.
10. பித்தப்பையை காக்கும் வழிமுறைகள்?
உணவில் அதிக மசாலாக்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். விலங்குகளின் உறுப்புகளான கிட்னி, குடல் போன்ற கொழுப்பு உள்ள உணவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.
- டாக்டர் வெங்கடேசன்
நுண்துளை அறுவை சிகிச்சை மருத்துவர்

