காய்ச்சலா... ஜலதோஷமா... தலைவலியா? சொன்னால் மருந்து தருகிறது இந்த ஏ.டி.எம்.,!
காய்ச்சலா... ஜலதோஷமா... தலைவலியா? சொன்னால் மருந்து தருகிறது இந்த ஏ.டி.எம்.,!
PUBLISHED ON : ஆக 11, 2024

கோவை நேருநகரை சேர்ந்த மாணவி மகாஸ்ரீ ரஞ்சித்குமார், மருந்துகளை வழங்கும் ஏ.டி.எம்., கருவியை உருவாக்கியுள்ளார்.
இது குறித்து, அவர் கூறியதாவது:
இந்தியாவில் 13 சதவீத கிராமங்களில் மட்டுமே, அடிப்படை மருத்துவ வசதி உள்ளது. மற்ற கிராமங்களில் மருந்துகளுக்கு கூட வசதியில்லை என படித்தேன்.
நம்மால் என்ன செய்ய முடியும் என நினைத்தபோது, அடிப்படை மருந்துகளை வழங்கும் கருவியை உருவாக்கலாம் என்ற யோசனை தோன்றியது.
செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை (ஏஐ) பயன்படுத்தி, ஒரு தானியங்கி மருந்து வழங்கும் கருவியை உருவாக்கினேன்.
நிறைய கிராமங்களை சேர்ந்த மக்கள், காய்ச்சல், தலைவலி, வயிற்றுப்போக்கு போன்ற தேவைகளுக்கும், வெகுதுாரம் செல்வதை தவிர்க்க இந்த மினி மருந்தகம் உதவும்.
சமீபத்தில் திருப்பூர் அருகே உள்ள வட்டலாபதி கிராமத்துக்கு சென்றேன். அங்குள்ள மக்களுக்கு மருத்துவ வசதியே இல்லை.
அவர்களுக்கு, இது போன்ற கருவி பயனுள்ளதாக இருக்கும். பல கிராமங்களை ஒருங்கிணைத்து இந்த மருந்துகளை வழங்கும் செயல் திட்டத்தை, கண்காணிப்பாளர் உதவியுடன் செயல்படுத்த வேண்டும்.
இந்த மருந்து பெட்டியை, குரல் உதவியுடன் வடிவமைத்துள்ளேன். படிக்காதவர்களும் மருந்துகளை தேர்வு செய்து பெற முடியும். எப்போது சாப்பிடலாம், எவ்வளவு சாப்பிட வேண்டும், எத்தனை முறை சாப்பிட வேண்டும், உணவுக்கு முன்பாகவா, பின்பாகவா உள்ளிட்ட விபரங்களையும் இது கொண்டிருக்கும்.
பட்டனை தேர்வு செய்து அழுத்தும்போது, கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளுடன் இது தேவையான மாத்திரைகளையும், மருந்துகளையும் வழங்கும்.
இரண்டு நாட்களுக்கு மேல் நோயின் தன்மை நீடித்தால், மருத்துவரை அணுகும்படியும் இது தெரிவிக்கும்.
வீட்டிலேயே நாம் பயன்படுத்தும் முதலுதவி, அடிப்படை மருந்துகள் பாரசெட்டமால், எலக்ட்ரோலைட் பவுடர் போன்றவைகள் தான் இதில் இருக்கும்.
முதல் கட்டமாக அவர்களுக்கு தேவைப்படும், அவசர கால உதவியை இந்த மருந்துகள் பூர்த்தி செய்யும்,
இவ்வாறு, அவர் கூறினார்.