PUBLISHED ON : ஆக 11, 2024

வெண்புள்ளி உண்மையில் ஒரு நோயல்ல. நம் தோலின் நிறமிகளான மெலனினை உற்பத்தி செய்யும் திசுக்களான 'மெலனோசைட்ஸ்' அழிந்து போனாலோ அல்லது சரிவர நிறமிகளை உற்பத்தி செய்யாமல் போனாலோ, நிறமிகள் மறைந்து தோல் வெண்மையாக தோன்றும். வெண்புள்ளிகள் பற்றிய சரியான புரிதல் இல்லாததால் அச்சப்படுவதும், அவமானப்படுவதும் இருக்கிறது.
குறிப்பாக, திருமண வயதில் உள்ளவர்களுக்கு இந்நிலை ஏற்படும்போது அவர்களும், அவர்களின் குடும்பத்தினரும் கடும் மன உளைச்சலுக்கும், சமூக அழுத்தத்திற்கும் ஆட்படுகின்றனர். இது, நிறமிகளின் குறைபாடு என்பதை புரிந்து கொண்டால், நரைமுடி போன்று வெண்புள்ளி ஒரு தோல் நரை என எளிதாக எடுத்துக் கொள்ளலாம்.
இவர்களை ஒதுக்கவோ, ஒதுங்கவோ, பரிதாபமோ, அருவருப்போ தேவையில்லை.
நிறமிகளை உற்பத்தி செய்யும் திசுக்கள் பல்வேறு காரணங்களால் அழிந்து போகின்றன. விட்டமின் டி, பி12, இரும்புச்சத்து, தாமிர சத்து குறைபாடு, பரம்பரை காரணம், ஆட்டோ இம்யூன் கோளாறு, சர்க்கரை, தைராய்டு கோளாறுகள் ஆகியவையே இதற்கு பெரும்பாலும் காரணமாகின்றன.
சித்த மருத்துவத்தில் இந்நிலைக்கு பல மருந்துகள் உள்ளன.
கருந்துளசி சூரணம், பூவரசம்பட்டை தைலம், கரிசாலை சூரணம், நீலி அவுரி சூரணம், பறங்கிப்பட்டை சூரணம், அயபிருங்கராஜ கற்பம், வேம்பு கற்பம் போன்ற உள்மருந்துகள் நிறமிகளின் உற்பத்தியை துாண்டக்கூடியவை.
கார்போகி தைலம், காட்டு சீரகப் பற்று, கண்டங்கத்திரி தைலம் போன்ற வெளிமருந்துகளும் நல்ல பலனை தரும். வெண்புள்ளிகள் தோன்றிய ஆறு மாதங்களில், சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி மூலிகை சிகிச்சை பெற்று வர, படிப்படியாக இயல்பான தோல் நிறம் ஏற்படும்.
புளி சாதம், புளித்த தயிர், புளித்த நாள்பட்ட மாவு, எலுமிச்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை பழங்கள், ரசாயன கலப்புள்ள உணவுகள், செயற்கை குளிர்பானங்களை தவிர்ப்பது நல்லது. சிகரெட், மதுப் பழக்கம், துாக்கமின்மை, மன அழுத்தம் ஆகியவற்றை தவிர்த்து, இயற்கையான வாழ்வியலை பின்பற்றினால் வெண்புள்ளிகள் விரைவில் மறையும்.
இளம் பெண்கள் சமூக வலைதளங்களில் ஏற்படுத்தி வரும் விழிப்புணர்வால், வெண்புள்ளிகள் உள்ள பெண்கள் மாடலிங் செய்வதை பார்க்கலாம். நிறங்களின் இடர்களை மருத்துவத்தால் மட்டுமல்ல; மனதாலும் நாம் கடக்க வேண்டும்.
டாக்டர் மூலிகைமணி அபிராமி,
மூலிகைமணி சித்த மருத்துவ மையம்
96000 10696, 90030 31796
Consultabirami@gmail.com