PUBLISHED ON : ஆக 11, 2024

கண்ணாடிக்கு மாற்றாக கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்தப்படுகிறது. கான்டாக்ட் லென்சால் பார்வை நன்றாக இருந்தாலும், அன்னிய பொருளை கண்ணுக்குள் உபயோகிக்கும்போது, அதற்கேற்ப கவனமாக இருப்பதும் அவசியம்.
தினசரி, மாதம் முழுதும், ஆண்டு முழுவதும் உபயோகிக்கும் லென்ஸ் என்று பல வகைகள் உள்ளன. தினசரி பயன்படுத்துவதை அன்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். மாத லென்சுகளை ஒரு மாதம் மட்டும்தான் போட வேண்டும். உபயோகிக்காத நாட்களில், தினசரி சொலுஷனை மாற்றி விட வேண்டியது முக்கியம். காலாவதியான லென்சை பயன்படுத்துவது, லென்சை தண்ணீரில் கழுவுவது, உடைந்த லென்ஸ் போடுவது கண்களில் தொற்றை ஏற்படுத்தும். கருவிழியில் புண் வரும் வாய்ப்புகளும் அதிகம் உள்ளது.
லென்ஸ் போட்டு துாங்குவதையும் தவிர்க்க வேண்டும்.
பத்து ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்தும் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படலாம். கண்ணுக்குள் லென்ஸ் இருப்பதால், கருவிழிக்குள் செல்லும் ஊட்டச்சத்துகள், இயல்பை விடக் குறைவாகவே செல்லும். எனவே தான், எட்டு மணி நேரத்திற்கு மேல் தொடர்ச்சியாக போடக்கூடாது என்று சொல்கிறோம். அதிக நேரம் லென்ஸ் பயன்படுத்தினால் கண்களில் வறட்சி ஏற்படும். கருவிழியில் வீக்கம் வரும் வாய்ப்புகளும் உள்ளன.
கான்டாக்ட் லென்சுடன் துாங்கி காலையில் சிவந்த கண்களுடன் வருவது, கருவிழி மேல் இல்லாமல் வேறு எங்காவது ஒட்டி இருக்கும் லென்சை எடுக்கத் தெரியாமல் எடுத்து, அதனால் வரும் தொந்தரவுகளால் சிகிச்சைக்கு வருபவர்கள் அதிகம்.
லென்ஸ் போட்டாலும் மாற்றாக எப்போதும் கையில் கண்ணாடி வைத்துக் கொள்வது பாதுகாப்பானது. தாங்களாகவே சுகாதாரமாக உபயோகிக்கத் தெரிந்தால், 12 வயதிற்கு மேல் லென்ஸ் போடலாம்.
கிட்டப்பர்வை இருந்தால் 'சாப்ட்' லென்ஸ், சிலிண்டர் பவரும் சேர்ந்து இருந்தால் 'டாரிக்' லென்ஸ், கூம்பு கருவிழி இருப்பவர்களுக்கு 'ரிஜிட் கேஸ் பெர்மியபிள்' லென்ஸ் என்று பல வகைகள் உள்ளன.
டாக்டரின் ஆலோசனையுடன் அவரவர் கண்களுக்கு ஏற்ற லென்ஸ் பயன்படுத்த வேண்டும்.
டாக்டர் பத்மபிரியா,
கண் மருத்துவர்,
அகர்வால் கண் மருத்துவமனை, சென்னை
95940 27222
drpadmapriya.oph@gmail.com