PUBLISHED ON : பிப் 24, 2013
எனக்கு 3 மாதங்களாக கழுத்து வலி உள்ளது. பல் சொத்தையால் கழுத்து வலி வருமா?
இதை 'ரெபர்ட் பெயின்' என்பர். அதாவது வலியின் காரணம் ஒரு இடத்தில் இருக்கும். ஆனால் வலி தெரிவது வேறு இடத்தில் இருக்கும். பற்களின் மூலம் கழுத்துவலி வருவதற்கு மூன்று காரணங்கள் இருக்கிறது. ஒன்று ஞான பற்கள் எனப்படும் கடைசி கடைவாய் பற்கள் சிலருக்கு தாடை எலும்புக்குள் புதைந்து இருக்கும். இதைச் சுற்றி கட்டி அல்லது வீக்கம் ஏற்பட்டால் கழுத்து வலி போன்று தெரியும்.
இரண்டாவது கீழ் பற்களில் வெகுநாட்களாக கவனிக்கப்படாத சொத்தை மூலம் சீழ் உண்டாகி, அது கழுத்து வரை பரவும்போது கழுத்தில் வலி தெரியும். மூன்றாவதாக பற்களில் சொத்தையே இல்லாமல்கூட பற்களை அதிகம் கடிப்பவர்களுக்கு, தாடை எலும்பில் சாதாரண அளவைவிட அதிகமாக அழுத்தம் உண்டாகும். தாடை சார்ந்த தசைகள் கழுத்திலும் உள்ளன. இதனால் கழுத்தில் உள்ள தசைகளிலும், வலி வரும். இதில் எதுவாயினும் அதற்கேற்ற சிகிச்சை மேற்கொண்டால் கழுத்துவலி முற்றிலும் குணமடையும்.
எனது மகனின் வயது மூன்றரை. இன்னும் ரப்பர் நிப்புள் இல்லாவிட்டால் தூங்காமல் அழுகிறான். இப்பழக்கத்தை நிறுத்த முடியவில்லை. ரப்பர் நிப்புள் உபயோகிப்பதால் ஏதாவது பாதிப்பு வருமா?
ரப்பர் நிப்புள் உபயோகிப்பது குழந்தைகளுக்கு ஒருவிதமான பாதுகாப்பு உணர்வை அளிக்கிறது. ஆனால் இப்பழக்கத்தை இரண்டு வயதுக்கு மேல் தொடர்வது, குழந்தையின் உடலுக்கும், பற்களுக்கும் நல்லதல்ல. இதனால் முன் பற்களுக்கு இடையே இடைவெளி உண்டாகும். சீரான பல்வரிசை இருக்காது. அதோடு இப்பழக்கம் ஐந்து வயதுவரை தொடர்ந்தால் பால் பற்கள் சரியான நேரத்தில் விழுந்து நிரந்தர பற்கள் முளைக்காது. தாடை எலும்பு வளர்ச்சியிலும் பாதிப்பு உண்டாகும். இரு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் இப்பழக்கத்தை கண்டிப்பாக நிறுத்த வேண்டும். ரப்பர் நிப்புள் உபயோகிக்கும் நேரத்தை, சிறிது சிறிதாக குறைக்க வேண்டும். அதன் சுவையை மாற்றி குழந்தைகளுக்கு பிடிக்காமல் செய்ய வேண்டும். உரிய நேரத்தில் பல் டாக்டரிடம் ஆலோசனை பெற்று, ஏற்கனவே பற்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை சரிசெய்ய வேண்டும்.
டாக்டர் ஜெ.கண்ணபெருமான்,
மதுரை. 94441 54551