PUBLISHED ON : பிப் 24, 2013
ஆர்.பி.ரவீந்திரன், மதுரை: சைவ உணவுப் பழக்கம் உள்ளோருக்கு மாரடைப்பு வரும் தன்மை குறைவா?
இக்கருத்து உலகம் முழுவதும் உண்மையே, நம்நாட்டைத் தவிர. நம்நாட்டில் சைவ உணவு சாப்பிடுவோருக்கும் மாரடைப்பு வரும் தன்மை மிகவும் அதிகமாகவே உள்ளது. நம் சைவ உணவுப் பழக்கத்தை, 'Contaminated Vegetarianism' (கெடுக்கப்பட்ட சைவ உணவுப்பழக்கம்) என்பர். ஏனெனில் சைவ உணவு என, நாம் மூன்று வேளைகளிலும், எண்ணெய் சார்ந்த உணவையே உண்கிறோம். அதிக இனிப்பு வகைகள், பால், பால்சார்ந்த உணவுகளையும், நெய், வனஸ்பதி போன்றவற்றையும் எடுத்து கொள்கிறோம். காய்கறிகளை எண்ணெயில் வதக்கும்போது, எண்ணெயால் வரும் பாதிப்பை அதிகப்படுத்துகிறது. அரிசி உணவை அதிகம் உண்பதால், உடல் பருமன்கூடி, சர்க்கரை, ரத்தக்கொதிப்பு போன்ற கொடூர நோய்களும் உண்டாகிறது. இதனால் சைவ உணவை உண்ணும் இந்தியர்களுக்கு, மற்ற நாட்டவரைவிட, மாரடைப்பு வரும் தன்மை, பலமடங்கு அதிகமாக உள்ளது.
பி.முத்துச்சாமி, சிவகங்கை: எனது வயது 52. வாரத்தில் 5 நாட்கள் டிரெட் மில்லில் நடக்கிறேன். டிரெட்மில் கருவியின், 'பெல்ட்' வேகத்தை அதிகப்படுத்தும்போது, நெஞ்சில் பாரமாக அழுத்துகிறது. அதனால் வேகத்தை குறைத்தே நடக்கிறேன். இது சரிதானா?
வேகமாக நடக்கும்போது நெஞ்சில் அழுத்தம் ஏற்பட்டால் அது இருதய நோயின் அறிகுறி. உடனடியாக டிரெட்மில்லில் நடப்பதை நிறுத்திவிட்டு, இருதய நிபுணரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது. உங்களுக்கு ரத்தம், எக்கோ, டிரெட் மில் பரிசோதனைகள் செய்யப்படும். ஆஞ்சியோகிராம் பரிசோதனையும் அவசியம். அதன் முடிவுகளுக்கு ஏற்ப சிகிச்சை அமையும்.
கே. பாக்கியராஜ், வத்தலகுண்டு: நான் 2 ஆண்டுகளாக ரத்தக் கொதிப்புக்கு மருந்து எடுத்து வருகிறேன். எனக்கு அவ்வப்போது சில நிமிடங்களுக்கு தலை சுற்றுவது போல உணர்கிறேன். என்ன செய்வது?
ரத்தக்கொதிப்பு உள்ளவர்களுக்கு தலைச்சுற்றல் ஏற்படுவது, ரத்தஅழுத்தம் கூடினாலோ, குறைந்தாலோ உருவாகலாம். எனவே நீங்கள் உங்கள் டாக்டரிடம் சென்று, ரத்தக் கொதிப்புக்கு எடுத்து வரும் மருந்து, மாத்திரைகளின் அளவை சரிசெய்ய வேண்டி வரும். இவற்றின் முடிவுகள் சரியாக இருந்தால், நரம்பியல் நிபுணரை சந்தித்து சிகிச்சை பெறுவது நல்லது.
எஸ். பிரசாத், சாத்தூர்: கடந்த ஆறு மாதங்களுக்கு முன், எனக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதற்கு மருந்து எடுத்து வருகிறேன். இதனால் பக்கவாதத்தையும் தடுக்க இயலுமா?
மாரடைப்பு மற்றும் பக்கவாதம் இரண்டு ஆட்கொல்லி நோய்களும், ரத்தநாளங்களில் (Arteries) ஏற்படும் அடைப்புகளால் உண்டாகிறது. இருதயத்திற்குச் செல்லும் ரத்தநாளங்களில் அடைப்பு ஏற்பட்டால், அதனை மாரடைப்பு என்கிறோம். மூளைக்குச் செல்லும் ரத்தநாளங்களில் அடைப்பு ஏற்பட்டால் அதனை, பக்கவாதம் என்கிறோம்.
நீங்கள் இருதயத்திற்காக எடுக்கும் மாத்திரைகள், குறிப்பாக ஸ்டேட்டின், ஆஸ்பிரின் மற்றும் குளோபிடோகிரில் மாத்திரைகள், ரத்தஅழுத்தம், சர்க்கரை நோய் மருந்துகளும் பக்கவாதம் வராமலும் தடுத்துவிடும். எனவே நம் உடலில் உள்ள அனைத்து ரத்தநாளங்களின் உட்சுவர்களுக்கும், இம்மருந்துகளால் நன்மையே ஏற்படுகிறது.
ஆகையால்தான் உண்மையான வயதைவிட, உங்களின் ரத்தநாளங்களின் வயதைத்தான் (Vascular Age) ஒருவரின் சரியான வயதாகக் கணக்கிடுகின்றனர். எனவே ரத்த நாளங்களின் ஆரோக்கியத்தைப் பொறுத்தே, நம் வாழ்க்கை காலம் நீடிக்கும்.
டாக்டர் சி.விவேக்போஸ்
மதுரை. 0452- 233 7344