தலைமுடிக்கு, "டை' அடிப்பதால், கண் பார்வை குறையுமா?
தலைமுடிக்கு, "டை' அடிப்பதால், கண் பார்வை குறையுமா?
PUBLISHED ON : மார் 03, 2013

சந்தையில் விற்கப்படும், 'டை' வகைகளில், கருமை நிறத்திற்காக சேர்க்கப்படும், 'பாரா பெனிலைன் டை அமின்' எனும் வேதிப்பொருள், பலருக்கு, எதிர்வினையை ஏற்படுத்துகிறது.
எப்போதும், வெள்ளை தோல் மற்றும் கருமை நிற கேசத்துடன், இளமையாக தோற்றம் அளிக்கத்தான், எல்லோரும் விரும்புகின்றனர். ஆனால், இளநரை பிரச்னைக்கு ஆளாவோர், தங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள, தலைமுடிக்கு, 'டை' அடித்துக் கொள்ள வேண்டியுள்ளது. இளம் வயதினரிடம் மட்டுமின்றி, நடுத்தர வயதினர் மத்தியிலும் அதிகரித்து வரும், 'டை' அடிக்கும் பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள், கேசம் மற்றும் சருமத்தை பராமரிக்க, மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து விளக்குகிறார், சென்னை, ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, சருமநோய் துறை தலைவர் மனோகரன்.
1. இளநரை ஏற்பட என்ன காரணம்? இதை தவிர்க்க முடியுமா?
குடும்ப பராம்பரியம்(ஜெனிடிக்), தைராய்டு பிரச்னைகள், ரத்தசோகை, புகைப்பழக்கம், மனஅழுத்தம், கதிர்வீச்சு பாதிப்புள்ள சூழலில் பணிபுரிவது போன்ற காரணங்களால், இளநரை ஏற்படுகிறது. 40 வயதை கடந்தவர்களுக்கு, இயற்கையாக ஏற்படும் நரையை தவிர்க்க முடியாது. ஆனால், இளநரைக்கான காரணத்தை கண்டறிந்து, அதற்குரிய சிகிச்சையை எடுத்துக் கொண்டால், இளநரையை மேற்கொண்டு பரவாமல் தடுக்கலாம். தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு தேவையான, போலிக் அமிலம், பேன்ட்டோதினிக் அமிலம், இரும்பு சத்து போன்றவை அடங்கிய, பச்சை காய்கறிகள், கீரைகள், மீன் வகைகளை தொடர்ந்து உட்கொண்டால் இளநரையை தவிர்க்கலாம்.
2. தலைமுடிக்கு, 'டை' அடிப்பதால், உண்மையிலேயே கண் பார்வை பாதிக்கப்படுமா?
சந்தையில் விற்கப்படும், 'டை' வகைகளில், ஏதாவதொரு வேதிப்பொருள் இருக்கத் தான் செய்கிறது. கருமை நிறத்திற்காக, 'டை' களில் சேர்க்கப்படும், 'பாரா பெனிலைன் டை அமின்' எனும் வேதிப்பொருள், பலருக்கு, எதிர்வினையை ஏற்படுத்துகிறது. 'டை' அடித்த சில நாட்களில், ஒருவருக்கு, தலையில் அரிப்பு, சிறு கொப்பளங்கள் ஏற்பட்டால், 'டை' ஒத்துக் கொள்ளவில்லை என அர்த்தம். உடனே, அதை நிறுத்த வேண்டும். தொடர்ந்து அடித்து வந்தால், உடல் முழுவதும் தோல் அரிப்பு, கொப்பளங்கள் ஏற்படுவதுடன், தோல் கருமையாக மாறும் அபாயம் உள்ளது. உடலின் தன்மையை பொறுத்து, நாளடைவில், சிலருக்கு, சிறுநீர்ப்பையில் புற்றுநோயும், கண்பார்வை பாதிப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது. 'பாரா பெனிலைன் டை அமின்' கலக்காத, முடிக்கு செந்நிறத்தை தரும், 'டை'களை பயன்படுத்துவதால், இப்பாதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம்.
3. டீ, காபி அதிகம் குடிப்பதும், இள நரைக்கு காரணமாக கூறப்படுகிறதே?
டீ, காபி குடிப்பதற்கும், இளநரைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. இதற்கு ஆய்வுரீதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை.
4. தலைமுடி உதிர்ந்து, வழுக்கை ஏற்பட காரணங்கள் என்ன?
முடியின் வேர் பகுதிக்கு செல்லும் ரத்த ஓட்டம் குறைவது, விட்டமின் குறைபாடு, டைபாய்டு, புற்றுநோய் போன்றவற்றுக்கு உட்கொள்ளும் மருந்து, மாத்திரைகள், மன அழுத்தம் ஆகியவற்றால் தலைமுடி உதிர்கிறது. சத்தான உணவுகளை உண்டு, தினமும் ஏழு மணிநேரம் உறங்கினால் போதும். வழுக்கை பிரச்னையில் இருந்து தப்பிக்கலாம். மரபணு காரணங்களால் ஏற்படும் வழுக்கையை, நவீன சிகிச்சைகளின் மூலம் சரிசெய்யலாம்.
5. தினமும் சுடுநீரில் குளிப்பதாலும், தலைமுடி உதிருமா?
தவறான கருத்து. மாறாக, சுடுநீரில் குளிப்பதால், முடிகளின் வேர் பகுதிகளுக்கு சீரான ரத்த ஓட்டம் செல்ல வழி உண்டாகி, தலைமுடி வலிமை பெறும்.
6. தோல் சுருக்கத்திற்கும், சுடுநீரில் குளிப்பதற்கும் தொடர்பு உண்டா?
இதுவும் தவறான கருத்து. மாறாக, குளிக்கும்போது, அழுக்கை எடுக்கிறேன் என்ற பெயரில், நார், நைலான் பொருளைக் கொண்டு, உடம்பை தேய்ப்பதால், தோல் செல்கள் பாதிக்கப்பட்டு, விரைவில் தோலில் சுருக்கம் ஏற்படும்.
7. தோலை, எப்போதும் பளபளப்பாக வைத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்?
நம் தோலின் அமிலத்தன்மை (பி.எச்.,மதிப்பு) மற்றும் தோலின் தன்மைக்கு(வறண்ட மற்றும் எண்ணெய் பசை கொண்ட சருமம்) ஏற்ப, குளியல் சோப்பை பயன்படுத்துவது, தினமும் உணவில் பழவகைகளை சேர்த்துக் கொள்வது போன்றவற்றால் தோலின் பளபளப்பை பராமரிக்கலாம். வெளியில் செல்லும்போது, சூரியனின், புறஊதா கதிர்களின் தாக்கத்தில் இருந்து சருமத்தை காக்க, பிரத்யேக, 'கீரிம்'களை( சன் ஸ்கிரீன்) பயன்படுத்துவது, இருசக்கர வாகனங்களில் பயணிக்கும்போது, கையுறைகள் அணிவது ஆகியவற்றால், நீண்டகாலம் சருமத்தை மிடுக்காக வைத்துக் கொள்ளலாம்.
டாக்டர் மனோகரன்,
சருமநோய் துறை தலைவர்,
ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, சென்னை. 97103 35435