PUBLISHED ON : மே 18, 2020

'கோவிட் - 19' எனப்படும், கொரோனா தொற்றால், 2 சதவீதத்திற்கும் குறைவான குழந்தைகளே பாதிக்கப்பட்டு இருக்கின்றனர் என்பது, சற்று ஆறுதலான விஷயம். நம் நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுதும், இதே நிலை தான் உள்ளது.கடந்த இரண்டு மாதங்களாக, கொரோனா தொற்று பற்றி மட்டுமே படித்து, செய்திகளை பார்த்து, அனைவரும் அளவிற்கு அதிகமாக இந்த வைரஸ் பற்றி தெரிந்து வைத்துஉள்ளோம்.
தொற்றின் தீவிரம்
அதனால், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பது, சமூக இடைவெளியை பின்பற்றாமல் போவது தான், தொற்று ஏற்பட முக்கிய காரணம் என்பது தெரியும்.இரண்டு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கும், 70 வயதை கடந்த முதியவர்களுக்கும், எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். பிறந்ததில் இருந்து ஒவ்வொரு தொற்று ஏற்பட்டு, உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறதே தவிர, பிறக்கும் போதே, எதிர்ப்பு சக்தியுடன் பிறப்பதில்லை. கருவில் இருக்கும் போது, தொப்புள் கொடி வாயிலாகவும், தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு, தாய்ப்பால் வாயிலாக, தாயிடம் இருந்து, குழந்தைக்கு எதிர்ப்பணுக்கள் வருவதால், நோய் எதிர்ப்பு சக்தி, அதிகமாக இருக்கும்.இந்த வைரஸ் தொற்று, நுரையீரலை தாக்குகிறது என்றாலும், தொற்றின் தீவிரம் சிறுநீரகங்கள், இதயம் போன்ற பிரதான உள் உறுப்புகளை செயலிழக்க வைப்பதால், இறப்பு ஏற்படுகிறது. அமெரிக்கா, ஐரோப்பா போன்று, நம் நாட்டில் தொற்றின் பாதிப்பு, மிக வீரியமாக இல்லாமல் போனதற்கு, பல காரணங்கள் சொல்லப்படுகிறது. ஒரு காலத்தில், மலேரியா தொற்றின் தீவிரம் அதிகம் இருந்தது. அதற்காக, ஹைட்ராக்சிகுளோரோக்வின் மாத்திரைகளை, அதிகம் பயன்படுத்தினோம். இதனால், இயல்பாகவே எதிர்ப்பு சக்தி அதிகரித்து விட்டது என்பது ஒரு வாதம். இதற்கு உதாரணம் ராமநாதபுரம். மலேரியாவின் தாக்கம் அதிகம் இருந்த இடம் அது.இன்னொன்று, கொரோனாவில் பல வகைகள் உள்ளன. இதில், நம் நாட்டில் ஏற்பட்ட தொற்று, வீரியம் குறைந்த வைரசால் ஏற்பட்டது; அதனால், பாதிப்பு அதிகம் இல்லை. தொடர்ந்து இந்த காரணங்கள் குறித்து ஆய்வுகள் நடக்கின்றன.
தடுப்பு மருந்து
கொரோனா தொற்று காரணமாக, அனேகமாக அனைத்து டாக்டர்களும், புற நோயாளிகள் சேவையை, கடந்த, 40 நாட்களாக நிறுத்தி விட்டனர். தற்போது தான், நிலைமை மெதுவாக இயல்பு நிலைக்கு வந்து கொண்டு இருக்கிறது.வழக்கமாக போட வேண்டிய தடுப்பு ஊசிகள், லாக் டவுன் நாட்களில், குழந்தைகளுக்கு போட முடியாத நிலை இருந்தது. இப்படியே நிலைமை நீடித்து, போட வேண்டிய நாட்களில் தடுப்பு ஊசி போடாமல் விட்டு விட்டால், அதனால் வர கூடிய நோய்கள், டிப்தீரியா, நிமோனியா, அம்மை, ரூபெல்லா, ஹெபடைடிஸ் போன்றவை, பிற்காலத்தில் அதிகமாகும் வாய்ப்பு உள்ளது. நிலைமை இயல்பாக இருக்கும் இடங்களில், டாக்டரின் ஆலோசனைப்படி, உடனடியாக போட வேண்டிய தடுப்பு ஊசிகளை போட்டு விட வேண்டும். காய்ச்சலுடன் வரும் குழந்தைகளையும், தடுப்பு ஊசிக்கு வருபவர்களையும், தனித்தனியாக பிரித்து, சிகிச்சை தர வேண்டும். எங்கள் மருத்துவமனையில், நுழைவு வாசலிலேயே தனிமைப்படுத்த ஏற்பாடு செய்துள்ளோம்.அட்டவணைப்படி, தடுப்பு மருந்து கொடுப்பது தள்ளி போனால், பிரச்னை வருமா என்ற சந்தேகம் உள்ளது. குறிப்பிட்ட தேதியில் கொடுக்க வேண்டிய தடுப்பு மருந்து, அந்த தேதியில் இருந்து, நான்கு - ஆறு வாரங்கள் கழித்து கொடுப்பதால், பெரிதாக பிரச்னை இல்லை.
எதிர்ப்பு சக்தி
ஆறு மாதங்களில் இருந்து, 2 வயது வரையிலும் தொற்று பாதிக்கும் வாய்ப்பு அதிகம். ஜலதோஷத்தை உண்டாக்குவதற்கே, 500க்கும் அதிகமான வைரஸ்கள் உள்ளன. அதனால் தான், வாழ்க்கை முழுதும் நமக்கு சளி பிடிக்கிறது. ஒரு வகை வைரசால் சளி உண்டாகி, அதற்கான எதிர்ப்பு சக்தி நம் உடலில் உருவாகும்; இன்னொரு வகை வைரசால் இதே பிரச்னை வரும். இப்படி, ஒவ்வொரு வகை வைரஸ் தாக்கும் போதும், அதற்கான எதிர்ப்பு சக்தி உருவாகும்.ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டும் தருவது, அதன்பின் இணை உணவாக பழங்கள், ஒன்பது மாதங்களில் காய்கறி என, ஊட்டச்சத்து மிகுந்த உணவு, சரியான நேரத்தில் தடுப்பு மருந்து கொடுப்பதால், குழந்தைக்கு நோய் எதிர்ப்பு அணுக்கள் உற்பத்தியாகி, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
ஊரடங்கு
ஊரடங்கு காலத்தில் மிகவும் வியப்பான விஷயம், வழக்கமாகக் இந்த காலத்தில் ஏற்படும், வாந்தி, வயிற்றுப் போக்கு, மூச்சிரைப்பு, சளி பிடிப்பது போன்றவை குழந்தைகள் இடையே வெகுவாக குறைந்து உள்ளது.இதற்கு காரணம், வெளியில் அழைத்துச் சென்று, கேட்டதை எல்லாம் வாங்கி கொடுப்பது, மாசு நிறைந்த இடங்களில் சுற்றுவதை தவிர்த்தது காரணமாக இருக்கலாம். வீட்டில் சமைத்த உணவை சாப்பிட்டு, தேவையின்றி வெளியில் செல்லாமல், ஒரு ஒழுங்கான வாழ்க்கை முறையை கடைப்பிடித்தால், நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்பது, 'லாக் டவுன்' கற்றுக் கொடுத்த பாடங்களில் முக்கியமானது.
டாக்டர் வி.வி.வரதராஜன்,இயக்குனர்,குழந்தைகள் நலம் மற்றும் தொற்று நோய் பிரிவு,ரெயின்போ குழந்தைகள் நல மருத்துவமனை, சென்னை
