கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி!: 20 வயது இளைஞனாகவே இருக்கிறேன்!
கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி!: 20 வயது இளைஞனாகவே இருக்கிறேன்!
PUBLISHED ON : ஜூன் 03, 2018

நீண்ட துாரம் ஓடுவது தான் எனக்கு பிடித்த விஷயம். ஒவ்வொரு ஆண்டும், ஜூலை துவங்கி, மார்ச் வரை, பல்வேறு அமைப்புகள் சார்பில், தமிழகம் முழுவதிலும், மாரத்தான் ஓட்டங்கள் நடக்கும்.
எல்லாவற்றிலும், எங்கள் குழுவின், இளம் காவலர்களோடு பங்கேற்பேன். இளைஞர்களுக்கு, உடல் தகுதி மீது ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும். குழுவாக செயல்படுவது நல்லது என்பதால், இதைச் செய்கிறேன்.
காவல் துறையில் சேர்ந்த போது, என் வயது உடையோருடன், வாலிபால் விளையாடுவேன், ஓடுவேன். வயது, 50 ஆக அதிகரித்த போது, என்னோடு ஓடுவோர் வயது, 22 ஆகவே இருந்தது.
காரணம், என் சக வயதினர், தினமும், 22 கி.மீ., ஓடுவதற்கு ஏற்ற உடல் தகுதியுடன் இல்லை. எந்த வயதிலும், என்னோடு ஓடுவோர், 22 வயது இளைஞர்கள்; அதனால், நானும் இளைஞனாகவே இருந்து விட்டேன்.
நவ., முதல் ஜன., வரை கடலில் நீந்த ஏற்ற காலம். மனித உடம்பில், ஒரு லட்சம் செல்களுக்கும், புத்துணர்வைத் தரக்கூடிய உடற்பயிற்சி, நீச்சல்.
'இவ்வளவு, 'ஆக்டிவ்'வாக இருக்கிறீங்களே... எப்படி உங்களை தயார் செய்கிறீர்கள்?' என, வியப்புடன் கேட்போர் அதிகம்.
போட்டிகளில் பங்கேற்க மட்டும் இல்லை... உடற்பயிற்சி அவசியமானது. உடற்பயிற்சியை விட சுகம் தருவது, உலகில் வேறு எதுவும் கிடையாது. வாரத்தில், இரண்டு நாட்கள், 21 கி.மீ., துாரம் ஓடுவேன்; அடுத்த இரண்டு நாட்கள், 80 - 90 கி.மீ., துாரமும், சனி, ஞாயிறுகளில், 100 - 200 கி.மீ., துாரமும் சைக்கிள் ஓட்டுவேன்; அதற்கடுத்த இரண்டு நாட்கள், 10 கி.மீ., துாரம் நீந்துவேன்.
வாரம் முழுவதும் தொடர்ந்து இப்படி செய்வதால், போட்டிகளில் பங்கு பெறுவது, எனக்கு பெரிய விஷயம் இல்லை.
'உடலுக்கு இத்தனை பயிற்சி தேவையா...' என, அடுத்த கேள்வி வரும். இயற்கை படைத்திருக்கும் மனித உடல் என்ற அற்புதமான மெக்கானிசத்திற்கு மாற்று, இதுவரையிலும் இல்லை; சுறுசுறுப்பாக இயங்கியபடியே இருந்தால் தான், ஆரோக்கியமாக இருக்க முடியும்.
அடுத்து, இயல்பாக வரும் கேள்வி, உணவு பழக்கங்கள் பற்றியது. குறைவான அரிசி சாதத்துடன், வழக்கமான உணவு எடுத்துக் கொள்வேன்.
ஒரு டம்ளர் காபியில், அதிகபட்சம் அரை ஸ்பூன் சர்க்கரை சேர்த்து குடிப்பேன்.
அல்வா, ஜாங்கிரி, குலாப் ஜாமூன் என, ஏதோ ஒன்றை, 20 கிராம் வாயில் போட்டு, 5 - 10 நிமிடம் வரை, மெதுவாக ரசித்து, சுவைத்து, நன்றாக கூழாகும் வரை, வாயிலேயே வைத்திருந்து விழுங்குவேன்.
வழக்கமாக வீட்டில் சாப்பிட்டாலும் சரி... திருமணம் போன்ற விசேஷ இடங்களிலும் சரி, எத்தனை உணவு வகைகள் இருந்தாலும், ஏதாவது ஒன்று மட்டும் தான் சாப்பிடுவேன்.
அதேபோல், மதிய உணவில், சாம்பார், ரசம் என, ஏதாவது ஒன்று மட்டும் தான் சாப்பிடும் பழக்கம் உண்டு.
பழங்கள், காய்கறிகள் சாப்பிட ரொம்ப பிடிக்கும். மாம்பழம் சாப்பிடுவது என்றால் மிகவும் விருப்பம். எவ்வளவு விருப்பமான உணவாக இருந்தாலும், அளவோடு தான் சாப்பிடுவேன். ஒரு மாம்பழத்தில், நான்கில் ஒரு பங்கு மட்டுமே சாப்பிடுவேன்.
காபி பிரியர்களிடம், நல்ல காபி எது என்றால், 'ஒவ்வொரு துளியாக, அதை அனுபவித்துக் குடிக்கும் போது, எல்லாம் மறந்து, காபியும், குடிப்பவரும் மட்டுமே, அந்த நிமிடங்களில் இருப்பர்' என சொல்வர். அந்த உணர்வு, ஒரு மணி நேரம் ஓடும் போது எனக்கு கிடைக்கும். உடல் நலத்தை காப்பாற்றுவதில், உடற்பயிற்சியை விட, சிறந்த மருந்து, வேறு எதுவும் இல்லை.
உடல், மன பிரச்னைகளுக்கு காரணம், உணவுப் பழக்கமும், உடற்பயிற்சியின்மையும் தான். உணவு விஷயத்தில், அனைவரிடமும் தவறான அபிப்பிராயங்கள் நிறைய உள்ளன. என்ன சாப்பிடுகிறோம், உடம்பின் தேவை என்ன, எதற்கு சாப்பிடுகிறோம் என, எந்த தெளிவும் இல்லை.
தினசரி உடம்பிற்கு எவ்வளவு கலோரி தேவையோ, அதை விட, 30 சதவீதம் கூடுதலாகவே சாப்பிடுகிறோம். அதிகப்படியான கலோரி உடம்பில் தங்கி, கொழுப்பாக படிந்து, பல பிரச்னைகளை உண்டாக்குகிறது.
'குழந்தைகளை விளையாட விட்டால், படிக்க மாட்டார்கள். விளையாட்டு, படிப்பை கெடுக்கும். விளையாட்டு கலக்காத படிப்பு தான் சிறந்தது. இன்னும் ஒரு படி மேலே போய், சிறந்த அறிவாளிகள் எல்லாம் விளையாட மாட்டார்கள்' என, பெற்றோர் நினைக்கின்றனர்; இது தவறான மனநிலை.
பிள்ளைகள் நன்றாகப் படிக்க வேண்டும் எனில், நன்றாக விளையாட வேண்டும். விளையாடினால் தான், மனநிலை நன்றாக இருக்கும். உடலில் உற்சாகத்தை தரக் கூடிய, 'ஹார்மோன்' சுரக்கும்.
செய்யும் வேலையை ஆர்வமாக, ஈடுபாட்டுடன் செய்ய முடியும்.
சுறுசுறுப்பை தரும், 'ஹார்மோன்' சும்மா சுரக்காது; விளையாடினால் மட்டுமே சுரக்கும். பெற்றோரே... தயவு செய்து பிள்ளைகளை விளையாட விடுங்கள்.
சி.சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.,
கூடுதல், டி.ஜி.பி., - ரயில்வே
csylemdrababu@hotmail.com
