தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி!: 'டே கேர்' ஆப்பரேஷன்!

கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி!: 'டே கேர்' ஆப்பரேஷன்!

கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி!: 'டே கேர்' ஆப்பரேஷன்!


PUBLISHED ON : ஜூலை 08, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 08, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பித்தப்பை கல், ஹெர்னியா, கர்ப்பப்பை, கருக்குழாய் நீக்கம் உட்பட, ஜீரண மண்டலம், இனப்பெருக்க உறுப்புகள் தொடர்பான பிரச்னைகளுக்கு, அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம், தற்போது அதிகரித்து உள்ளது.

பல தலைமுறைகளாக நாம் சாப்பிட்ட உணவு, பழக்க வழக்கங்கள் எல்லாம், கடந்த, 10 ஆண்டுகளாக முற்றிலும் மாறி விட்டது; இதனால், ஜீரண மண்டலம் தொடர்பான கோளாறுகளான குடல் புண், குடல் இறக்கம், வாயு பிரச்னை என்று, அதிகம் பேர் பாதிக்கப்படுகின்றனர்.

பிரச்னை தீவிரமடையும் நிலையில், அறுவை சிகிச்சை ஒன்று தான் தீர்வாக இருக்கிறது. அறுவை சிகிச்சை என்றாலே, மருத்துவமனையில் இருக்க வேண்டிய நாட்கள், அறுவை சிகிச்சைக்குப் பின் ஏற்படும் வலி, மயக்க மருந்து தருவதால் ஏற்படும் பாதிப்புகள், ஆப்பரேஷனுக்கு பின் வழக்கமான உணவு சாப்பிட ஆகும் நாட்கள், மருத்துவச் செலவு என்று, பல விஷயங்கள் பயமுறுத்துகின்றன.

உலகில், 70 சதவீத நாடுகளில், இந்த நடைமுறை பிரச்னைகள் எதுவும் இல்லாமல், 'டே கேர்' எனப்படும், காலையில் மருத்துவமனைக்கு வந்து, மாலையே வீடு திரும்பும் வகையில், அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

கடந்த ஏழு ஆண்டுகளாக, சென்னையிலும் இது போன்ற வசதி உள்ளது. எல்லா பரிசோதனைகளையும் முடித்த பின், அறுவை சிகிச்சை குறிக்கப்படும் நாளில், ஒருநாள் பிக்னிக் கிளம்புவது போல, காலையில் வந்தால், அடுத்த ஒரு மணி நேரத்தில், ஆப்பரேஷன் முடித்து, நான்கு மணி நேர ஓய்வுக்கு பின், மதிய உணவை சாப்பிட்டு, அடுத்த ஓரிரு மணி நேரம் மருத்துவ கண்காணிப்பில் இருந்து, மாலையே வீட்டிற்கு சென்று விடலாம்.

நவீன மருத்துவ தொழில்நுட்பத்தில், அறுவை சிகிச்சையின் போது, வலியை ஏற்படுத்தும் குறிப்பிட்ட நரம்பில், நேரடியாக ஊசி மூலம், மருந்தை செலுத்தி, மரத்துப் போகச் செய்யும் வசதி வந்து விட்டது.

பொதுவாக, ஆப்பரேஷன் செய்த, 48 மணி நேரம் வரை வலி இருக்கும்; அதன்பின், படிப்படியாக குறையும். அதேநேரம், மயக்க மருந்து கொடுக்கும் போது, அதன் பாதிப்பால், வாந்தி, குமட்டல் வரும். இதனாலேயே பல மணி நேரம் வரை, சாப்பிடுவது சிரமமாக இருக்கும்.

மயக்க மருந்துடன் செலுத்தப்படும் சில வாயுக்களில், அதன் வீரியத்தை தற்போது குறைக்க முடிந்திருக்கிறது; இதனால், பக்க விளைவுகள் எதுவும் இல்லாமல், ஆப்பரேஷன் செய்த நான்கு மணி நேரத்திலேயே, வழக்கம் போல உணவு சாப்பிட முடியும்.

இவ்வசதியை நடைமுறைப்படுத்தியதில், மருத்துவச் செலவு, நேரம், பக்க விளைவுகள் என்று அனைத்தும் குறைந்து, அறுவை சிகிச்சை செய்து கொள்வது எளிதாகி உள்ளது.

பிரத்யேக பயிற்சி எதுவும் தேவைப்படாத இந்த முறையை, அரசு மருத்துவமனைகளில் பின்பற்ற வேண்டும். 'டே கேர்' முறையில், அறுவை சிகிச்சை செய்த, 100 பேரில் ஓரிருவர் தவிர, மற்றவர்களுக்கு எந்த பிரச்னையும் வருவதில்லை.



டாக்டர் பட்டா ராதா கிருஷ்ணன்

ஜீரண மண்டல அறுவை சிகிச்சை நிபுணர், சென்னை.

patta_radhakrishnan@yahoo.co.in


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us