கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி!: முதுமையில் இளமை!
கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி!: முதுமையில் இளமை!
PUBLISHED ON : ஜன 21, 2018

நம் வாழ்க்கையில், பிறந்தது முதல், 30 ஆண்டுகள் வரையிலான இளமைப் பருவம், மகிழ்ச்சியான காலம்; ஆனால், இந்த வயதில், ஊட்டச்சத்து மிகுந்த உணவு, உடற்பயிற்சி உட்பட, சில ஒழுங்கு முறைகளை கடைபிடிக்க தவறியதன் விளைவு அல்லது வேறு பல காரணங்களாலும், 30 வயதிற்கு மேல், மெதுவாக ஒவ்வொரு உடல் பிரச்னையாக வர ஆரம்பிக்கும்.
இதை கவனித்து, நம் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ளவில்லை எனில், அதன் விளைவுகளை, 60 வயதிற்கு மேல், முதுமையில் அனுபவிக்க வேண்டியிருக்கும்.
அறுபது வயதிற்கு மேல், அறிகுறிகளுக்காக காத்திருக்காமல், தேவைக்கு ஏற்ப, குறிப்பிட்ட இடைவெளியில், முழு உடல் பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும்.
உடல் கோளாறு இருப்பது தெரிந்தால், உடனடியாக அதற்கான சிகிச்சை முறைகளை செய்ய வேண்டும். சில சமயங்களில், நோயை விடவும், நோயின் ஆரம்ப அறிகுறிகளே தொந்தரவாக இருக்கும்.
கை, கால்களில் ஏற்படும் எரிச்சல், நீரிழிவு நோயின் அறிகுறியாகவும், முகம், கால்களில் ஏற்படும் வீக்கம், உயர் ரத்த அழுத்தத்தின் அறிகுறியாகவும் இருக்கும். ஆண்டுதோறும் அனைத்து பரிசோதனைகளையும் செய்து கொள்ள வேண்டும் என்பதில்லை. முதல் முறை மட்டும் அனைத்து பரி சோதனைகளையும் செய்து, அடுத்தடுத்த ஆண்டுகளில் என்ன தேவையோ, அதை மட்டும் டாக்டரின் ஆலோசனைப்படி செய்யலாம்.
பாப்பாவுக்கு மட்டுமல்ல, தாத்தாவுக்கும் தடுப்பூசி உள்ளது.
முதுமையில், இயல்பாகவே நோய் எதிர்ப்பு திறன் குறைந்து, நோய் தொற்று பாதிக்கும். இதில், நிமோனியா பாதிப்பு தான் முதலில் உள்ளது. இதயம், சிறுநீரகங்கள் உட்பட, உடல் பிரச்னைகள் வரும் போது, பல நேரங்களில், உயிரைக் காப்பாற்ற முடியாமல் போவதற்கு காரணம், நிமோனியாவாக உள்ளது.
எந்த பக்கவிளைவும் இல்லாத நிமோனியாவிற்கு தடுப்பூசி உள்ளது. இதை, ஒரு முறை போட்டுக் கொண்டால் போதும். முதுமையில் சத்தான உணவு மிகவும் முக்கியம். சிட்ரஸ் அதிகம் உள்ள எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற பழங்கள், பாதாம், பாகற்காய், தயிர், இஞ்சி, பூண்டு, காளான் போன்றவற்றை சாப்பிட வேண்டும். தவிர, புரதச்சத்து அதிகம் உள்ள பால், முட்டை, பருப்பு, சோயா, நார்ச்சத்து அதிகம் உள்ள சிறு தானியங்கள் சாப்பிட்டால், பெருங்குடலில் வரும் புற்றுநோயைத் தவிர்க்க முடியும்; மலச்சிக்கல் வராது.
சிறுதானியங்களில், கால்ஷியம் சத்து அதிகம் என்பதால், எலும்புகளுக்கு வலு கிடைக்கும். அரிசி, கிழங்கு போன்ற மாவுச் சத்து அதிகம் உள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது. ஒரு நாளைக்கு ஒரு நபர், 5 கிராம் உப்பு தான் சேர்க்க வேண்டும்; ஆனால், 12 முதல் 14 கிராம் வரை சேர்க்கிறோம். 60 வயதிற்கு மேல், குறைந்த அளவு உப்பு சேர்ப்பது நல்லது.
அறுபது வயதிற்கு மேல் உடற்பயிற்சி மிகவும் முக்கியம். இதனால், ரத்த அழுத்தம் குறையும்; சர்க்கரை கட்டுக்குள் இருக்கும்; உடல் பருமன் இருக்காது; பெருங்குடல், மார்பகம் போன்ற சில வகை கேன்சர்கள் வருவதை தடுக்கும்; எலும்புகள் வலுவாகும்; துாக்கமின்மை, மலச்சிக்கல் இருக்காது. இத்தனை நன்மைகளை எந்த மருந்தாலும் தர முடியாது.
வயதானவர்களுக்கு இருக்கும் இன்னொரு பிரச்னை, வைட்டமின் டி குறைபாடு. தினமும், 30 முதல், 50 நிமிடங்கள் வரை சூரிய ஒளியில் இருந்தால், இந்தப் பிரச்னையே வராது. முதுமையில் உடல் நலம் எந்த அளவு முக்கியமோ, அந்த அளவு மன நலமும் முக்கியம். அதனால், மனநலமும், பொருளாதாரமும் சீராக இருக்க, 30 வயதிலேயே திட்டமிடுவது பாதுகாப்பானது.
டாக்டர் வி.எஸ்.நடராஜன்
முதியோர் நல சிறப்பு மருத்துவர், சென்னை.
dr_v_s_natarajan@gmail.com

