கனவு தவிர்... நிஜமாய் நில்!: காரணத்தை அறிவது கடினம்!
கனவு தவிர்... நிஜமாய் நில்!: காரணத்தை அறிவது கடினம்!
PUBLISHED ON : ஜன 21, 2018

மார்பக புற்றுநோய் குறித்து தொடர்ந்து பேசினாலும், பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை, ஆண்டுதோறும் அதிகரித்தபடியே இருக்கிறது; காரணங்கள் குறித்த ஆராய்ச்சியும் தொடர்கிறது.
'தாய்ப்பால் கொடுத்தால், மார்பகப் புற்றுநோய் வராது' என, ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால், 75, 80 வயதான பெண்களுக்கு வருகிறது. தற்போது போல இல்லாமல், இவர்களுக்கு குழந்தைகளின் எண்ணிக்கையும், தாய்ப்பால் கொடுத்த ஆண்டுகளும் கூடுதலாக இருந்திருக்கும்.
மரபியல் காரணங்களால், மார்பக புற்றுநோய் வருவதற்கான சாத்தியம் நிச்சயம் உள்ளது என்றும் சொல்ல முடியாது. உணவு பழக்கங்கள் மாறி விட்டதால் வரலாம். தற்போது, ஒரு குழந்தை மட்டும் பெற்று, அதற்கும் இரண்டு ஆண்டுகள் வரை தாய்ப்பால் தருவதில்லை. இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். மார்பகங்களில் சாதாரண நீர்க் கட்டிகள் வந்து கவனிக்கா விட்டால், கேன்சர் கட்டியாக மாற, வாய்ப்புகள் உள்ளது.
நான் திரும்ப திரும்ப சொல்வது, 35 வயதிற்கு மேல், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை, 'மேமோகிராம்' பரிசோதனை செய்து கொள்வது அவசியம். மார்பக கேன்சரில், நிறைய வகைகள் உண்டு. சில வகைகள் மட்டுமே ஆபத்தானவை.
எந்த வகையாக இருந்தாலும், ஆரம்பத்தில் கண்டுபிடித்தால், முழுமையாக குணப்படுத்த முடியும். அதேபோல, எல்லா வகை மார்பக கேன்சருக்கும், மார்பகத்தை எடுக்க வேண்டியதில்லை; கட்டிகளை மட்டும் அகற்றி, தேவையான சிகிச்சை செய்ய முடியும். கேன்சர் சிகிச்சை என்பது, சமீப காலத்தில், நவீன தொழில்நுட்பத்தோடு மிகவும் முன்னேறி விட்டது.
அடிப்படையான சில விஷயங்களில், பெண்கள் கவனமாக இருந்தால், மார்பக கேன்சரைத் தவிர்க்கலாம்.
சுய சுகாதாரத்தில் கவனமாக இருப்பது, உள்ளாடைகளை ஆண்டிற்கு ஒரு முறை புதிதாக மாற்றுவது, அதிக இறுக்கமாகவோ, தளர்வாகவோ அணியாமல் இருப்பது, பருத்தி உள்ளாடைகளை அணிவது, மார்பகங்களின் கீழ் ஏற்படும் வியர்வை தங்காமல் பார்த்துக் கொள்வது... இதனால், பூஞ்சைத் தொற்று ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
பூஞ்சைத் தொற்று இருந்தால், அரிப்பு ஏற்பட்டு, தோல் சிவந்து விடும்; கறுப்பாகவும் மாறலாம். தேவையான சிகிச்சை மேற்கொண்டால், தோலின் நிறம், பழைய நிலைக்கு வந்து விடும்.
பெண்கள் கவனிக்க வேண்டிய விஷயம்... ஹார்மோன் கோளாறுகளால் மார்பகக் காம்புகளில் பால் அல்லது நீர் வடிவது, மார்பகக் கேன்சரின் அறிகுறியாக இருக்கலாம். சுய பரிசோதனை செய்யும் போது, ஆரம்பத்திலேயே பிரச்னைகளை கண்டுபிடிப்பது எளிது.
டாக்டர் வி.தேவகி
பொதுநல மருத்துவர், சென்னை.
doctordevaki@gmail.com

