கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி!: கண்கள் இரண்டில் ரத்தம் கசிந்தால்...
கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி!: கண்கள் இரண்டில் ரத்தம் கசிந்தால்...
PUBLISHED ON : ஜன 28, 2018

சில நாட்களாக, 'மெட்ராஸ் ஐ' பாதிப்பால் வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இது, 'அடினோ' எனப்படும், வைரஸ் தொற்றால் ஏற்படும் பாதிப்பு. இந்த வைரசின் வீரியம், ஆண்டுதோறும் அதிகரித்து வருவது, வியப்பான, அதே நேரத்தில், கவலை தரும் விஷயமாக உள்ளது.
ஆரம்ப காலங்களில், இந்த கண் பாதிப்பிற்கு, பாக்டீரியா தொற்று காரணமாக இருந்தது; தற்போது, வைரஸ் தொற்றால் வருகிறது என்பதோடு, அறிகுறிகளும் வித்தியாசமாக உள்ளன.
முன்பெல்லாம், மெட்ராஸ் ஐ என்றாலே, கண்கள் சிவந்து, வீங்கி, மஞ்சள் நிறத்தில் ஒரு திரவம் வடியும்; காலையில் துாங்கி எழுந்தால், கண்களை திறக்கவே சிரமமாக இருக்கும். ஆனால் இப்போது, வலி, எரிச்சல், அரிப்பு, வீக்கம் ஆகியவை, பொதுவான அறிகுறிகளாக உள்ளன.
துவக்கத்தில், 'ஆன்டி பயாடிக்' மருந்துகள் பயன்பட்டன; தற்போது, ஆரம்ப அறிகுறிகள் இருக்கும் போதே, சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது. சில நோயாளிகளுக்கு வைரஸ் பாதிப்பு சிகிச்சையோடு சேர்த்து, ஆன்டி பயாடிக் மருந்துகளும் அவசியம்.
காரணம், வீக்கம் மற்றும் கண்களை தேய்ப்பதால், இரண்டாம் நிலை தொற்று ஏற்படாமல் பாதுகாக்க வேண்டிஉள்ளது. இரண்டாம் நிலை தொற்று என்பது, பொதுவாக, பாக்டீரியா தொற்றாகவே இருக்கும்.
பெரும்பாலான நோயாளிகள், பாதிப்பு ஏற்பட்ட முதல் நாளே மருத்துவ ஆலோசனை பெறுவதில்லை. மருந்து கடைகளில் அவர்களாகவே, 'ஆன்டி வைரல் ஜெல்' வாங்கி பயன்படுத்துகின்றனர்; இந்த மருந்தால், எந்த பலனும் இல்லை.
சமீப நாட்களாக உள்ள மற்றொரு பிரச்னை, 'கண்களில் ரத்தக் கசிவு இருக்கிறது' என, அச்சத்துடன் சிலர் வருகின்றனர். இந்த பாதிப்பு வந்த ஒருவர், 'கண்ணை லேசாக அழுத்தினேன்; ஒரு துளி ரத்தம் வந்தது' என்றார். இன்னொருவர், 'கண்களை துடைத்த போது, 'டிஷ்யூ' பேப்பரில் ரத்தம் இருந்தது' என்றார்.
இந்த வைரஸ் பாதிப்பால், கண்களின் இமைகளின் உட்புறத்தில், சவ்வு வளருகிறது. இந்த சவ்வு வளர்ந்து, வீங்குவதால், கண்களை அழுத்தும் போது, லேசான ரத்தக் கசிவு ஏற்படும்; இதைப் பார்த்து பயப்படத் தேவையில்லை.
அவர் பயன்படுத்தும் பொருட்களை, மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது.
கண்களில் கருவிழியைச் சுற்றி உள்ள வெள்ளை பாகத்தில் தான், வைரஸ் தொற்று முதலில் பாதிக்கும். அந்த நிலையிலேயே சரியான சிகிச்சை எடுத்துக் கொண்டால், முழுமையாக சரியாகி விடும். கவனிக்காமல் விட்டால், மெதுவாக கருவிழியை பாதிக்கும் அபாயம் உள்ளது.
இதனால், பார்வை மங்கலாகத் தெரிவதோடு, மிக அரிதாக, பார்வை பாதிக்கும் அபாயமும் உள்ளது. ஒரு கண்ணில் பாதிப்பு வந்தால், அடுத்த கண்ணிலும் பாதிப்பு வரும் என்பதெல்லாம், தற்போது இல்லை.
பாக்டீரியா தொற்று, எப்படி வைரஸ் தொற்றாக மாறியது, இந்த குறிப்பிட்ட வைரசின் வீரியம், நாளுக்கு நாள் எப்படி அதிகரிக்கிறது என்பது போன்ற பல ஆய்வுகளை மேற்கொள்ளும் முயற்சி, தற்போது துவக்க கட்டத்தில் உள்ளது. முழுமையாக இந்த வைரஸ் குறித்து ஆராயும் போது, சிகிச்சையிலும் பல மாற்றங்கள் செய்ய முடியும்.
டாக்டர் எம்.ரவிசங்கர்,
கண் சிறப்பு மருத்துவர், சென்னை.
drravs5@yahoo.co.in

