கனவு தவிர்... நிஜமாய் நில்!: கரைக்க முடியாது... கவலை வேண்டாம்!
கனவு தவிர்... நிஜமாய் நில்!: கரைக்க முடியாது... கவலை வேண்டாம்!
PUBLISHED ON : ஜன 28, 2018

'பைப்ரோ அடினோமா' என்ற கட்டிகள் பற்றி, பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டும். சிறு வயது பெண்களுக்கு, அதாவது, வயதுக்கு வந்ததில் இருந்து, 30 வயது வரை உள்ள பெண்களுக்கு வரலாம். ஒரு பக்க மார்பகத்தில் மட்டுமல்லாமல், இரு பக்கங்களிலும் வரலாம்.
ஒரு பக்கத்திலேயே, நான்கைந்து கட்டி, 10, 15 கட்டிகள் கூட வரலாம். இந்தக் கட்டிகள் ஏன் வருகின்றன என்பது, தெளிவாகத் தெரியவில்லை. இதனால், பயந்து போய் என்னிடம் வருவர்.
இந்த கட்டி, கேன்சர் கட்டி இல்லை; கேன்சராக மாறிவிடும் என்றும் பயப்பட வேண்டாம். இது இருப்பதால், கூடுதலாக கேன்சர் வந்து விடுமோ என்றும் அச்சப்பட தேவையில்லை. 'ஸ்கேன்' உட்பட நவீன வசதிகள் இருப்பதால், கட்டியின் தன்மையை தெரிந்து, அவசியம் என்றால், கட்டியில் உள்ள திசுவை, 'பயாப்சி' டெஸ்ட் எடுத்து, என்ன கட்டி என, தெரிந்து கொள்வோம். அது, 'பைப்ரோ அடினோமா' கட்டியாக இருந்தால், மேற்கொண்டு எதுவும் செய்யத் தேவையில்லை.
இந்தக் கட்டியை கரைப்பதற்கு எந்த மருந்தும் கிடையாது. கேன்சர் இல்லை என உறுதியாகி விட்டால், அப்படியே விட்டு விடலாம். இது போன்ற கட்டிகள் இருப்பதால், தாய்ப்பால் கொடுப்பதற்கோ, குடும்ப வாழ்க்கைக்கோ எந்த பிரச்னையும் இல்லை.
ஆறு மாதங்கள் அல்லது ஓராண்டு கழித்து, மீண்டும் ஸ்கேன் செய்து பார்க்கும் போது, கட்டியின் அளவு, இரு மடங்கு பெரிதானால், வளரும் கட்டியை வைத்திருக்க வேண்டாம் என, அகற்றி விடுவோம்.
தவிர, கட்டியின் அளவு பெரிதாகி, மார்பகத்தின் அளவையோ, வடிவத்தையோ மாற்றுகிறது என்றாலும் எடுப்போம். பொதுவாக, இந்தக் கட்டியால் வலி அல்லது வேறு பிரச்னை வராது.
சாதாரணமாக, மாதவிடாய்க்கு முன் ஹார்மோன் மாற்றத்தால், வலி வருமே தவிர, இந்த கட்டியால் வலி வராது. இதில் கவனமாக செய்ய வேண்டியது, பைப்ரோ அடினோமா கட்டி தான் என்பதை உறுதி செய்ய வேண்டியது மட்டுமே!
டாக்டர் செல்வி ராதாகிருஷ்ணா,
மார்பக அறுவை சிகிச்சை சிறப்பு நிபுணர்,
சென்னை.
selvi.breastclinic@gmail.com

