கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி! - 'ஸ்கிரீன் டைம்' விசாரிக்கும் பெற்றோர்!
கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி! - 'ஸ்கிரீன் டைம்' விசாரிக்கும் பெற்றோர்!
PUBLISHED ON : ஜூன் 30, 2019

முதுகு வலி, கழுத்தில் சுளுக்கு என்று, 14 வயது சிறுவனை அழைத்து வந்தபோது, எனக்கு வியப்பு. கடந்த ஆறு மாதங்களாக, குழந்தைக்கு பிரச்னை என்றதும், அவனின் தினசரி நடவடிக்கைகளை கேட்டேன்; வருத்தமாக இருந்தது. அவன் சொன்ன அறிகுறிகள் எல்லாம், தொடர்ந்து பல மணி நேரம், கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை செய்யும், என் இளம் வயது நோயாளிகள் சொல்லும் பிரச்னைகள்.
மின்சாதனப் பொருட்களுடனேயே விளையாடும் குழந்தைகளுக்கு, பெரியவர்களுக்கு வரும், வாழ்க்கை முறை மாற்றக் கோளாறுகள் அனைத்தும் வந்து விட்டன.
கழுத்தை முன் பக்கம் அல்லது பக்கவாட்டில் சாய்த்தே இருப்பது, நேராக, நிமிர்ந்து உட்காராமல், முதுகுத் தண்டை வளைத்தே நீண்ட நேரம் அமர்ந்திருப்பது, படுத்தப்படி மொபைல் பார்ப்பது போன்ற தவறான செய்கைகளுக்கு, விபரம் தெரிந்த நாள் முதல் குழந்தைகள் பழகி விட்டனர்.
பள்ளி, பொது இடங்களில், பெற்றோர் சந்தித்துக் கொண்டால், எத்தனை மணி நேரம், மொபைல், லேப் டாப், ஐ - பேட், 'டிவி' பார்க்கிறது குழந்தை என்று தெரிந்து கொள்ளும் ஆவலோடு, கேட்கும் கேள்வி, 'உன் குழந்தையின், 'ஸ்கிரீன் டைம்' எவ்வளவு...' என்பதுதான். மின்சாதனப் பொருட்களுக்கு குழந்தை அடிமை ஆவதன் விபரீதம் புரியாமல், 'இன்று வெயில் அதிகம்' என்பது போல பொதுவான விசாரிப்பாகி விட்டது.
பல வீடுகளில், எவ்வளவு நேரம் பாடப் புத்தகங்களை படிகிறோமோ, அதைவிட அதிக நேரம், மொபைல் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று, பெற்றோருக்கு, குழந்தை நிபந்தனை போடுவதும் நடக்கிறது.
நான் குழந்தையாக இருந்த போது, பல மணி நேரம், வெயிலில் விளையாடுவதற்கு, திட்டு வாங்குவேன். இன்று, வெளியில் சென்று குழந்தைகள் விளையாடுவதே இல்லை.
கடற்கரை, பூங்கா என்று அழைத்துச் செல்லும் பெற்றோர், அருகில் உள்ள உணவகங்களில் சாப்பிட வைத்து அழைத்து வருகின்றனர். வீட்டில் இருக்கும் நேரத்தில், தங்களை தொந்தரவு செய்யாமல் இருந்தால் போதும் என்று, 1 வயதிலிருந்தே, மொபைலைக் கொடுத்து விடுகின்றனர்.
மொபைல் போன் பயன்படுத்துவதால் வரும் கழுத்து வலியால், நிறைய குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். முதுகுத் தண்டு தொடர்பான, கோளாறுகள், குழந்தைகள் மத்தியில், தொற்று நோய் போல பரவும் அபாயம் வந்துவிடுமோ என்று கவலையாக உள்ளது.
டாக்டர் சி.பாலாஜி, ருமட்டாய்டு ஆர்த்ரடீஸ் சிறப்பு மருத்துவர்,
பார்வதி மருத்துவமனை, சென்னை.
96000 34228
