PUBLISHED ON : ஜூலை 07, 2019

* எனது கணவருக்கு ரத்தக்கொதிப்பு சீராக இல்லை. எவ்வளவு மருந்து எடுத்துக்கொண்டாலும் கட்டுப்பாட்டிற்குள் வரவில்லை. மருத்துவரோ, உங்கள் கணவருக்கு குறட்டை விடும் பழக்கம் உள்ளதா என்றும் அப்படி இருந்தால் அதை சரி செய்ய வேண்டும் என்றும் கூறினார். அப்படியென்றால் ரத்தக் கொதிப்புக்கும் குறட்டைக்கும் தொடர்பு உள்ளதா?
பொதுவாக குறட்டை விடும் பழக்கம் உள்ளவர்களுக்கு இரவு துாங்கும்போது ஒரு குறிப்பிட்ட நரம்பு மண்டலம் துாண்டப்பட்டு ரத்த ஓட்டத்தை பாதித்து ரத்தக்கொதிப்பை சீரற்ற நிலையில் இருக்க செய்யும். அந்த நேரத்தில் இதய துடிப்பும் சீராக இருக்காது. எனவே உங்கள் கணவருக்கு ரத்தக்கொதிப்புக்கு உண்டான மருந்துகளுடன், மருத்துவர் கூறியதை போல் குறட்டை விடுவதை சரி செய்யவும் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். பின் ரத்தக்கொதிப்பும் சீராகிவிடும்.
* என் மாமாவிற்கு திடீரென தொடர் இருமல் ஏற்படுகிறது. அவ்வாறு இருமல் வரும்போது அவர் மயங்கி விழுகிறார். இது எதனால்?
இருமல் ஏற்பட்டவுடன் நின்றுவிட்டால் ஒன்றும் செய்யாது. ஆனால் தொடர் இருமல் இருந்தால் மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைப்பட்டு மயக்கம் ஏற்படும் .சில சமயங்களில் வலிப்பும் வரும். இருமலை சரி செய்துவிட்டால், தானாகவே மயக்கம் குணமாகிவிடும். எனவே உங்கள் மாமாவுக்கு இருமல் ஏற்படும் காரணத்தை கண்டறிந்து அதை சரி செய்ய வேண்டும்.
* எனக்கு தொடர் இருமல் இருந்தது. சளி பரிசோதனை செய்தபோது, அதில் டி.பி. கிருமி இல்லை. இருந்தாலும் எப்.ஓ.பி., பரிசோதனை செய்ய வேண்டும் என மருத்துவர் கூறினார். அப்பரிசோதனையில் டி.பி. கிருமி இருப்பதாக வந்தது. நான் டி.பி.,க்கு வைத்தியம் செய்ய வேண்டுமா?
ஒருவருக்கு தொடர் இருமல் இருந்தால் டி.பி., அறிகுறியாக இருக்கலாம் என்று சளி பரிசோதனை மேற்கொள்வர். ஆனால் ஒரு மில்லி அளவு சளியில் பத்தாயிரத்துக்கும் அதிகமான கிருமி இருந்தால் மட்டுமே பரிசோதனையில் தெரியவரும். எப்.ஓ.பி., பரிசோதனையில் நுரையீரலுக்குள் டியூப் விட்டு எந்த இடத்தில் பிரச்னை உள்ளதோ அந்த இடத்தில் இருந்தே சளியை எடுத்து பரிசோதனை செய்வர். எனவே பரிசோதனை முடிவு துல்லியமாக இருக்கும். நீங்கள் அவசியம் டி.பி.,க்கு பரிசோதனை செய்ய வேண்டும்.
* என் மகளுக்கு 14 வயதாகிறது. சமீபகாலமாக இருமிக்கொண்டே இருந்ததால், மருத்துவரிடம் பரிசோதித்தபோது அனைத்தும் சீராக உள்ளது என்றார். பின் எதனால் இருமல் ஏற்படுகிறது?
பொதுவாக இருமல் என்பது நோய் தொற்று, டி.பி., ஆஸ்துமா மற்றும் நுரையீரல் கட்டி போன்ற பல நுரையீரல் பிரச்னையின் அறிகுறியாக இருக்கலாம். ஆனால் இந்த வயதில் இருக்கும் சிறுவர், சிறுமிகளுக்கு மன அழுத்தத்தாலும் இருமல் ஏற்பட வாய்ப்புண்டு. மருத்துவ பரிசோதனையில் அனைத்தும் சரியாக உள்ளதால் உங்கள் மகளை மனநல மருத்துவரிடம் அழைத்து சென்று கவுன்சிலிங் பெற்று மனஅழுத்தத்தை போக்கினாலே இருமல் சரியாகிவிடும்.
- டாக்டர் மா.பழனியப்பன்
நுரையீரல் சிறப்பு நிபுணர்
மதுரை. 94425 24147
